கொரோனாவால் மிரளும் வட கொரியா...தென் கொரியா உதவ முன்வந்தும் ஏற்க மறுப்பு


கொரோனாவால் மிரளும் வட கொரியா...தென் கொரியா உதவ முன்வந்தும் ஏற்க மறுப்பு
x
தினத்தந்தி 17 May 2022 4:20 PM GMT (Updated: 17 May 2022 4:20 PM GMT)

கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியா போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையில் தள்ளாடி வருகிறது.

பியாங்யாங்,

கொரோனா தொற்று உருவான காலகட்டத்தில் இருந்து தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை என தெரிவித்து வந்த வடகொரியா, முதன் முறையாக நாட்டில் பரவி வரும் கொரோனா பரவல் குறித்து தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த 12ந்தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டது.  இதனை முன்னிட்டு அந்நாட்டின் அனைத்து மாகாணங்கள், அனைத்து நகரங்கள் மற்றும் கவுன்டி பகுதிகளிலும் முழு அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த நாட்டில் இதுவரை ஒருவர்கூட தடுப்பூசி போடவில்லை. கொரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசிதான் என்கிற நிலையில் அங்கு யாரும் தடுப்பூசி போட்டு கொள்ளாத சூழலிலும், போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையிலும் வடகொரியா என்ன செய்ய போகிறது என உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

அந்நாட்டில், கடந்த 24 மணிநேரத்தில் 2,69,510 பேருக்கு மர்ம காய்ச்சல் பரவியுள்ளது என இன்று தகவல் வெளிவந்துள்ளது.  6 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால், வடகொரியாவில் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

வடகொரியாவில், காய்ச்சல் பாதிப்புகளை விட கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிக அளவில் இருக்க கூடும் என கூறப்படுகிறது.  கொரோனாவுக்கான பரிசோதனை பற்றாக்குறை, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாமை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய சிகிச்சை வசதி இல்லாதது ஆகியவை அந்நாட்டில் காணப்படுகிறது.

2.6 கோடி மக்களுக்கான கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை தவிர்த்து, ஊட்டச்சத்து பற்றாக்குறையிலும் வடகொரியா சிக்கி தவித்து வருகிறது.  வறுமை நிலை மற்றும் பொது சுகாதாரத்திற்கு தேவையான மருந்துகள் அல்லது ஐ.சி.யூ. வசதிகள் குறைவாக உள்ளன.

இந்த நிலையில், கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியாவிற்கு தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க தென் கொரியா முன்வந்துள்ளது. ஆனால், தென் கொரியாவின் உதவியை ஏற்க வடகொரியா இதுவரை முன்வரவில்லை. 


Next Story