இலங்கையில் போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றுவதை எதிர்த்து வழக்கு


இலங்கையில் போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றுவதை எதிர்த்து வழக்கு
x

இலங்கையில் போராட்ட களத்தில் இருந்து தங்களை போலீசார் ்வெளியேற்றுவதை எதிர்த்து போராட்டக்காரர்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பு,

இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்ற கருத்து பொதுமக்களிடையே உருவானது. அதனால், ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடினார். அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். பின்னர், அங்கிருந்து அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். காலிமுகத்திடலையும் காலி செய்ய வைத்தனர்.

அதைத்தொடர்ந்து, கடலோரத்தில் அமைந்துள்ள காலிமுக பசுமை பகுதியில் போராட்டக்காரர்கள் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கிருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்று போலீசார் எழுத்துமூலமும், வாய்மொழியாகவும் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், அதை எதிர்த்து போராட்டக்காரர்கள் மேல்முறையீட்டு கோர்ட்டில் 4 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

போலீசாரின் உத்தரவு, எங்கள் அரசியல் சட்ட உரிமைகளை மீறிய செயல். ஆகவே, இந்த மனுக்கள் விசாரிக்கப்படும்வரை போலீசார் தங்கள் நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஐ.ஜி. பிரியந்தா ஜெயக்கொடி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் பொருளாதார சிக்கல் நிலவும் போதெல்லாம் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், முன்பு போலின்றி தற்போது போலீசாருக்கு வேறு பல வேலைகள் அளிக்கப்படுகின்றன.

அரசு, தனியார் சொத்துகளை பாதுகாக்கவும், போராட்டங்களை கட்டுப்படுத்தவும் அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். எரிபொருள் விற்பனை நிலையங்களில் நிறுத்தப்படுகிறார்கள்.

அதனால், மற்றொரு புறம் அமைப்புரீதியான குற்றங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது ஆபத்தான போக்கு. ஆகவே, இதை தடுத்து நிறுத்த போலீசார் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story