விலை அதிகரிப்பு; உற்பத்தியை பெருக்குங்கள் - அமெரிக்க கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு பைடன் அறிவுரை


விலை அதிகரிப்பு; உற்பத்தியை பெருக்குங்கள் - அமெரிக்க கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு பைடன் அறிவுரை
x

விலை அதிகரித்துவரும் நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருக்குமாறு நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

வாஷிங்டன்,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன.

அதேவேளை, போரில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிவந்த பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கொள்முதல் அளவை வெகுவாக குறைத்து வருகின்றன. மேலும், கச்சா எண்ணெய் கொள்முதலுக்காக பல்வேறு நாடுகள் அமெரிக்கா பக்கம் திரும்பியுள்ளன.

இதன் காரணமாக அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களில் வருவாய் பல மடங்கு அதிகரித்து வருகிறது. மேலும், தேவை அதிகரிப்பு காரணமாக உள்நாட்டிலும் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் 1 கெலன் ( சுமார் 4 லிட்டர்) எரிவாயு (பெட்ரோல்) 5 டாலருக்கு ( இந்திய மதிப்பில் சுமார் 400 ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக உள்நாட்டு மக்கள் சற்று அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும்படி அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் - ரஷியா போர் காரணமாக எண்ணெய் நிறுவனங்களின் லாபம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உற்பத்தியை அதிகரித்து லாபத்தை குறைத்துக்கொள்ளும்படி உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிபர் ஜோ பைடன் அறிவுரை வழங்கியுள்ளார்.


Next Story