சீன தேசிய நாள் கொண்டாட்டத்திற்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவித்து போராட்டம்


சீன தேசிய நாள் கொண்டாட்டத்திற்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவித்து போராட்டம்
x

சீனாவில் தேசிய நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்பட பல்வேறு உலக நாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.



டோக்கியோ,


சீனாவில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் 20-வது தேசிய மாநாட்டுக்கு அந்நாடு தயாராகி வருகிறது. இதில், அதிபர் ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக நீடிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அந்நாட்டில் நடந்த தேசிய தினத்திற்கு எதிராக உலகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1-ந்தேதி தேசிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் மா சேதுங் போதனைகளின்படி நாடு முழுவதும் பரவலாக மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.

1949-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி சீனாவின் புதிய பிரதமரான மா சேதுங் சீன தேசிய கொடியை, டையனமென் சதுக்கத்தில் ஏற்றினார். சீன மக்கள் குடியரசு என்ற புதிய கம்யூனிஸ்டு நாடு பிறந்துள்ளது என அறிவிப்பும் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து, அடுத்த நாளான அக்டோபர் 2-ந்தேதி, புதிய அரசானது சீனாவின் தேசிய நாளாக அக்டோபர் 1-ந்தேதியை கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றியது.




இந்த சூழலில், புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே திபெத்திய இளைஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தினர்.

அவர்கள், திபெத்தியர்களிடம் இருந்து பெருமளவில் மரபணுக்களை சேகரிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும். மனித உரிமை மீறல்களை நிறுத்துங்கள்.

சுதந்திர திபெத் வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியபடி ஆண்கள், பெண்கள் என இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இதுதவிர, உலக நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுத்து செல்லப்பட்டன. இதன்படி, ஜப்பானின் டோக்கியோ நகரில் மக்கள் பலர் சாலைகளில் இறங்கி, திபெத், ஜின்ஜியாங், மங்கோலியா, ஹாங்காங் மற்றும் தைவான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டோக்கியோவில் உள்ள சீன தூதரகத்தின் வெளியே காலையில் நடைபயிற்சிக்காக சென்ற மக்கள் இதனை வேடிக்கை பார்த்தபடி சென்றனர். அனைத்து சிறுபான்மை பகுதிகளுக்கு உள்ளேயும் புகுந்த சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சீனா வாக்குறுதி அளித்திருந்த அந்நாட்டின் அமைப்புக்கு உட்பட்ட பகுதியில் கூட, அடிப்படை மனித உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதற்கு எதிராகவும் இந்த போராட்டம் நடைபெற்றது.

ஜப்பான் முழுவதிலும் இருந்து வந்த ஆர்வலர்கள், சீனாவை சேர்ந்த சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் என பலரும் டோக்கியோ நகரின் மையத்திற்கு சென்று பேனர்கள், கொடிகள் மற்றும் போஸ்டர்களை ஏந்தியபடி சீனாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இதேபோன்று ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள சீன தூதரகத்தின் முன்பும் சிறிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. சீனாவுக்கு எதிரான போஸ்டர்கள் மற்றும் திபெத்திய கொடிகளை ஏந்தி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

சீன அரசின் பல்வேறு சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சின் பாரீஸ் நகரில் பல்வேறு சமூக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த போராட்டத்தில் ஹாங்காங், பிரான்சில் உள்ள உய்குர் இன மக்கள், மங்கோலியர்கள், தைவானியர்கள் மற்றும் வியட்னாம் குழுக்களும் கலந்து கொண்டன. அமெரிக்காவின் நியூயார்க், கலிபோர்னியா மற்றும் கனடா நாடுகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.


Next Story