பெர்முடா முக்கோண பகுதியில் மறைந்து போனால்... முழு கட்டணமும் தரப்படும் என அறிவிப்பு


பெர்முடா முக்கோண பகுதியில் மறைந்து போனால்... முழு கட்டணமும் தரப்படும் என அறிவிப்பு
x

பெர்முடா முக்கோண பகுதிக்கு செல்லும்போது மறைந்து போனால் முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என சொகுசு கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.

நியூயார்க்,

சுற்றுலாவாசிகளை கவருவதற்காக சொகுசு கப்பல் நிறுவனம் ஒன்று புதிய யுக்தியை கையாண்டுள்ளது. இதன்படி, ஏன்சியன்ட் மிஸ்டீரிஸ் குரூஸ் என்ற கப்பல் நிறுவனம் ஒன்று பயணிகளுக்கு ஆஃபர் ஒன்றை அறிவித்து உள்ளது.

இதன்படி, சுற்றுலா பயணிகள் தங்களது சொகுசு கப்பலில், மர்மம் நிறைந்த பெர்முடா முக்கோணம் பகுதி வழியே பயணம் செய்யலாம். ஒருவேளை கப்பல் மறைந்து போனால் முழு தொகையையும் திருப்பி பெற்று கொள்ளலாம் என்பதே அந்த ஆஃபர்.

அடுத்த ஆண்டு மார்ச்சில், தொடங்கவுள்ள இந்த சுற்றுலாவின்படி, பயணம் நியூயார்க் நகரில் இருந்து தொடங்கி பெர்முடா நோக்கி செல்லும். இதற்காக கப்பலில் பயணிகள் ஒரு சிறிய அறையில் தங்குவதற்கு 1,450 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்படும்.

இதுபற்றி இங்கிலாந்து ஊடகத்தில் வெளியிடப்பட்டு உள்ள செய்தியில், பெர்முடா முக்கோணம் பேய் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மனித குலத்திற்கு பன்னெடுங்காலம் வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இந்த பகுதியில் சென்ற பல கப்பல்கள் மற்றும் விமானங்கள் கடந்த காலங்களில் காணாமல் போயுள்ளன என அந்த ஊடகம் தெரிவித்து உள்ளது.

இப்படி கப்பல்களும், விமானங்களும் மறைந்து போவதற்கான காரணமும் இதுவரை விளக்கப்படவில்லை. பருவகாலம் மற்றும் மனித தவறுகளால் அவை காணாமல் போயிருக்க கூடும் என்றே நம்பப்படுகிறது. அறிவியல் விதிகளால் விளக்கி கூற முடியாத, இயற்கையை மீறிய விசயங்கள் என்றும் வேற்று கிரகவாசிகளுமே இவற்றுக்கு காரணம் என சில கோட்பாட்டியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், அந்த சொகுசு கப்பல் நிறுவனம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பெர்முடா முக்கோண சுற்றுப்பயணத்தில் மறைந்து போவது பற்றி கவலைப்பட வேண்டாம். 100 சதவீதம் பணம் திருப்பி தரப்படும். அரிய நிகழ்வாக, நீங்கள் மறைந்து போய்விட்டால் உங்களுடைய பணம் உங்களுக்கே திருப்பி தரப்படும் என விளம்பரம் செய்துள்ளது. ஆனால், மறைந்து போன பின்பு அந்த தொகையை வாங்க யார் இருப்பார்கள்? என்ற கேள்விக்கு அதில் விடையில்லை.


Next Story