பாகிஸ்தானில் முன்னாள் பிரமர் இம்ரான்கானின் கட்சியினர் 100 பேர் கைது


பாகிஸ்தானில் முன்னாள் பிரமர் இம்ரான்கானின் கட்சியினர் 100 பேர் கைது
x

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். தனது அரசை வெளிநாட்டு சக்தி சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனே பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் தேர்தலை நடத்தக்கோரி இம்ரான்கான் கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டத்தை நாளை நடத்த திட்டமிட்டனர். இதன்படி இஸ்லாமாபாத்துக்கு பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் செல்ல தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியினரை நள்ளிரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான்கான், "அமைதியாக போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து பாசிச நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனது அரசாங்கம் எப்போதும் எதிர்க்கட்சிகளின் பேரணிகளை நிறுத்தியது கிடையாது. இதுதான் ஜனநாயகவாதிகளுக்கும், நாட்டை திருடுபவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்" என்று கூறியுள்ளார்.


Next Story