2019-ல் அணு ஆயுத தாக்குதலுக்கு தயாரான பாகிஸ்தான், பதிலடிக்கு தயாரான இந்தியா - அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பரபரப்பு தகவல்


2019-ல் அணு ஆயுத தாக்குதலுக்கு தயாரான பாகிஸ்தான், பதிலடிக்கு தயாரான இந்தியா - அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பரபரப்பு தகவல்
x

பாலக்கோட் தாக்குதலுக்கு பின் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாரானதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் பயணித்த வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை கொண்டு பாதுகாப்பு படையினர் பயணித்த வாகனத்தில் மோதிய பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள பாலக்கோட் பகுதியில் இருந்த பயங்கரவாத குழுக்களின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், பாலக்கோட் தாக்குதலுக்கு பின் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாரானதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.

2019-ல் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்தபோது அவரது அரசில் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியவர் மைக் பாம்பியோ. இவர் எழுதிய, ஒரு இன்ச் விட்டுக்கொடுக்கமாட்டோம்; நான் நேசித்த அமெரிக்காவுக்கான போராட்டம்' என்ற புத்தகத்தை நேற்று வெளியிட்டார்.

அந்த புத்தகத்தில் 2019-ம் ஆண்டு பாலக்கோட் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது குறித்து மைக் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுத மோதல் குறித்து மைக் பாம்பியோ தனது புத்தகத்தில் கூறியுள்ளதாவது:-

2019 பிப்ரவரி மாதம் இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுத மோதலுக்கு எவ்வளவு அருகில் சென்றது என்று உலகம் அறிந்திருக்காது என்று நான் நினைக்கிறேன். உண்மை என்னவென்றால் எனக்கும் உண்மையான பதில் தெரியவில்லை. அணு ஆயுத மோதலுக்கு மிகவும் அருகில் சென்றுவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

வடகொரியாவுடன் அணு ஆயுத சமரசம் குறித்த பேச்சுவார்த்தை கூட்டம் ஹனோயில் நடைபெற்ற அந்த இரவை நான் மறக்கமாட்டேன். நீண்டகால வடக்கு எல்லையான காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவும் - பாகிஸ்தானும் ஒருவருக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தனர்.

பாகிஸ்தானின் தாராளவாத பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைகளால் இஸ்லாமிய பயங்கரவாதகுழு நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த மோதலின்போது விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தானியர்கள் இந்திய விமானியை கைதியாக பிடித்தனர்.

ஹனோயில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்திய தரப்பின் அழைப்பால் (புத்தகத்தில் பெயர் குறிப்பிடாத நிலையில் அந்த காலகட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக செயல்பட்டவர் சுஸ்மா சுவராஜ்) விழித்துக்கொண்டேன்.

இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராகி வருவதாக நம்புகிறோம் (இந்திய வெளியுறவுத்துறை மந்திரி) என்று அவர் என்னிடம் கூறினார். இந்தியாவும் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறினார்.

நீங்கள் எதுவும் செய்யாதீர்கள்... எங்களுக்கு சில நிமிடங்கள் கொடுங்கள் பிரச்சினையை தீர்ப்போம் என்று நான் வேண்டிக்கொண்டேன்.

உடனடியாக அப்போதிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனுடன் இணைந்து நான் எங்கள் ஓட்டலில் தொலைதொடர்பு வசதிகள் கொண்ட சிறிய அறையில் வேலையை தொடங்கினோம்.

உடனடியாக நான் பல முறை பேசியுள்ள அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை தொடர்பு கொண்டு இந்தியா கூறியது குறித்து அவரிடம் கூறினேன்.

அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா, அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராவதாக இந்தியா கூறுவதில் உண்மை இல்லை. ஒருவர் எதிர்பார்பது போல், அணு ஆயுதங்களை நிலைநிறுத்த இந்தியா தயாராகி வருவதாக அவர் நம்பினார்.

அணு ஆயுத போருக்கு தயாராக வேண்டாம் என்று இரு நாடுகளையும் சமாதானபடுத்த எங்களுக்கு சில மணி நேரங்கள் ஆனது. புது டெல்லி, இஸ்லாமாபாத்தில் உள்ள எங்கள் குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்.

கொடூரமான விழைவுகள் ஏற்படுவதை தடுக்க அந்த இரவு நாங்கள் செய்ததை வேறு எந்த நாடும் செய்திருக்க முடியாது' என்றார்.

மைக் பாம்பியோ தனது புத்தகத்தில் இந்தியாவின் அப்போதைய வெளியுறவுத்துறை மந்திரி சுஸ்மா சுவராஜ் குறித்து விமர்சனம் செய்துள்ளார். புத்தகத்தில் இந்திய வெளியுறவுத்துறை குறித்து அவர் கூறுகையில், இந்திய தரப்பில் எனது உண்மையான எதிர் தரப்பு நபர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த நபர் (சுஸ்மா சுவராஜ்) அல்ல. நான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய பிரதமர் மோடிக்கு நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்கு உரியவருமான அஜித் தோவலுடன் தான் நான் அதிகமாக இணைந்து பணியாற்றினேன்' என்று தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது, இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஸ்மா சுவராஜ் குறித்து அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ தனது புத்தகத்தில் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story