ஜப்பானில் 'நன்மடோல்' என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை


ஜப்பானில் நன்மடோல் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Sep 2022 11:47 PM GMT (Updated: 18 Sep 2022 12:23 AM GMT)

ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளை 'நன்மடோல்' என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டோக்யோ,

பாகிஸ்தானில் சில நாள்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மில்லியன்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலையில், அங்கு மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்திருந்தாலும், அண்டைநாடான இந்தியாவின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

இதற்கிடையே நேபாள நாட்டில் கடந்த சில தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுதுர்பாசிம் மாகாணத்தின் அச்சாம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கொட்டித்தீர்த்த பேய் மழையால் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அந்த வீடுகளில் இருந்தவர்கள் பலர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். இதை தொடர்ந்து அங்கு உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 17 பேரை பிணமாகத்தான் மீட்கப்பட்டது.

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓரிரு நாள்களுக்குப் பலத்த மழையும் கடுமையான வெள்ளமும் ஏற்படும் என அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பிற பகுதிகளில் வரும் மாதங்களில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பானின் தெற்குப் பகுதியான கியூ‌‌ஷு தீவு பகுதியை மிக மோசமான சூறாவளி தாக்கும் என்றும் அது கடும் சேதங்களை ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதன்படி ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளை 'நன்மடோல்' என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்க இருப்பதாவும், அதை தொடர்ந்து கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story