பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் 3-ம் சார்லஸ் உடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு


பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் 3-ம் சார்லஸ் உடன்  ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு
x

Image Courtesy: ANI

ஜனாதிபதி திரௌபதி முர்மு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசை சந்தித்தார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது.

லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. இதனிடையே, ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து விரைந்த வண்ணம் உள்ளனர்.

2-ம் எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அரசு முறை பயணமாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றுமுன்தினம் இங்கிலாந்து சென்றடைந்தார்.

அவர் நேற்று வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்தினார். இன்று நடைபெற உள்ள 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

தொடர்ந்து ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, லண்டனில் உள்ள லான்காஸ்டர் மாளிகையில் ராணி 2-ம் எலிசபெத்துக்கான இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டனில் உள்ள லான்காஸ்டர் மாளிகையில் ராணி 2-ம் எலிசபெத்தின் நினைவாக இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்' என்ற பதிவிட்டுள்ளது.

இந்த நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக, நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசை, ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார்.


Next Story