போர் தொடங்கி 100 நாட்களில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ரஷியா சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?


போர் தொடங்கி 100 நாட்களில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ரஷியா சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?
x
தினத்தந்தி 13 Jun 2022 12:53 PM GMT (Updated: 13 Jun 2022 1:05 PM GMT)

உக்ரைன் ரஷியா இடையே 100 நாட்களுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா 110-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.

இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அதேவேளை, போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரஷியாவின் நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் செயல்பட பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்து வருகிறது.

ஆனால், ஐரோப்பாவின் எரிபொருள் தேவை பெரும்பாலும் ரஷியாவை சேர்ந்தே உள்ளது. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டிற்கு தேவையான 35 சதவிகிதத்திற்கு அதிகமான எரிபொருளை ரஷியாவிடமிருந்தே பெறுகிறது. இதனால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷியா மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மேலும், பொருளாதார தடைகளை விதித்த போதும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தவில்லை. குறிப்பாக, போர் தொடங்கியது முதல் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன.

ஐரோப்பிய நாடுகள் மற்றுமின்றி இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளும் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்த 100 நாட்களில் கச்சா எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ரஷியா எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பின்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் எரிபொருள் மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையம் என்ற சுயேட்சை அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் , உக்ரைன் மீது போர் தொடங்கியது முதல் ரஷியாவிடமிருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளே அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

போர் தொடங்குவதற்கு முன் ஐரோப்பிய நாடுகளில் அதன் 40 சதவீகித எரிவாயு தேவை மற்றும் 27 சதவீகித கச்சா எண்ணெய் தேவையை ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்தன.

ஆனால், போர் தொடங்கிய பின்னர் ரஷியாவின் எரிவாயு, கச்சா எண்ணெயில் 61 சதவீகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, ஒட்டுமொத்தமாக ரஷியாவிடமிருந்து முறையே சீனா (13.2 பில்லியன் அமெரிக்க டாலர்), ஜெர்மனி (12.7 பில்லியன் அமெரிக்க டாலர்), இத்தாலி (8.2 பில்லியன் அமெரிக்க டாலர்), நெர்தர்லாந்து (8.4 பில்லியன் அமெரிக்க டாலர்), துருக்கி (7 பில்லியன் அமெரிக்க டாலர்), போலாந்து (4.6 பில்லியன் அமெரிக்க டாலர்), பிரான்ஸ் (4.5 பில்லியன் அமெரிக்க டாலர்), இந்தியா (3.6 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிற்கு கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்துள்ளன.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக போர் தொடங்கிய முதல் 100 நாட்களில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் ரஷியா 99 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துள்ளது என பின்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் எரிபொருள் மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையம் தனது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 99 பில்லியன் அமெரிக்க டாலர்களின் இந்திய ரூபாய் மதிப்பு 7.64 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.


Next Story