லைவ் அப்டேட்ஸ்: தீவிரமடையும் போர்; ரிசர்வ் படைகளை களமிறக்கும் ரஷியா


லைவ் அப்டேட்ஸ்: தீவிரமடையும் போர்; ரிசர்வ் படைகளை களமிறக்கும் ரஷியா
x
தினத்தந்தி 18 Jun 2022 8:53 PM GMT (Updated: 2022-06-19T20:06:53+05:30)

உக்ரைன் மீது ரஷியா 116-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.


Live Updates

 • 19 Jun 2022 2:36 PM GMT

  மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

  ரஷியாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் நிதி, ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைனின் மைகோலைவ் நகரில் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை தாக்குதல் நடத்தி அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மைகோலைவ் நகருக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு இருந்த நிலையில், ரஷியா இத்தகைய செய்தியை வெளியிட்டுள்ளது. 

 • 19 Jun 2022 12:54 PM GMT

  கிழக்கு உக்ரைனுக்கு எதிரான தாக்குதல் வெற்றிகரமாக நடந்து வருகிறது - ரஷியா அறிவிப்பு

  சீவிரோடோனெட்ஸ்க்,

  கிழக்கு உக்ரைனில் உள்ள சீவிரோடோனெட்ஸ்க்கு எதிரான தாக்குதல் வெற்றிகரமாக நடந்து வருவதாக ரஷியா இன்று தெரிவித்துள்ளது. அந்த நகரின் புறநகரில் உள்ள ஒரு மாவட்டத்தை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  "சீவிரோடோனெட்ஸ்க் -கை நோக்கிய தாக்குதல் வெற்றிகரமாக சென்று வருகிறது" என ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் வீடியோ அறிக்கையில் தெரிவித்து உள்ளார். நகரின் கிழக்கு புறநகரில் உள்ள மெட்யோல்கையின் பகுதி கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 • 19 Jun 2022 9:35 AM GMT

  தைரியமிக்கவர்கள், கடின உழைப்பாளிகள்: முன்கள போர் வீரர்களை புகழ்ந்த உக்ரைன் அதிபர்


  கீவ்,

  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீரர்கள் முகாமிட்டுள்ள பகுதிக்கு மீண்டும் சென்று அவர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

  உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போரானது மூன்றரை மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷிய படை வீரர்கள் இழப்புகளை சந்தித்தபோதும் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.

  இந்த போரில் இரு நாட்டின் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை காலி செய்து விட்டு வேறு நாட்டுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

  இந்த போரில் ரஷியாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன.

  போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், தங்களை பாதுகாத்து கொள்ளவும் ரஷியாவில் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்களும் வெளியேறி வருகின்றன. போரானது நீண்ட காலத்திற்கு தொடர கூடிய சூழலும் காணப்படுகிறது.

  இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சிவிரோடோனெட்ஸ்க் நகர் அருகே படை வீரர்கள் முகாமிட்டுள்ள பகுதிக்கு மீண்டும் சென்றுள்ளார். போரை முன்னெடுத்து செல்லும் வீரர்களை தைரியம் வாய்ந்தவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள் என்று புகழ்ந்துள்ளார்.

  உக்ரைனுக்கு எதிரான இந்த போரில், அந்நாட்டின் கிழக்கு நகரான நொவோமோஸ்கோவிஸ்க்கில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கு மீது ரஷியாவின் 3 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளன என அந்த மண்டல நிர்வாக தலைவர் கூறியுள்ளார்.

  உக்ரைனின் கிழக்கு நகரான சிவிரோடோனெட்ஸ்க்கை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாக, போர் நடைபெறும் பிற பகுதிகளில் இருப்பில் உள்ள படை வீரர்களில் பலரை அந்நகருக்கு செல்லும்படி ரஷியா அனுப்பி கொண்டிருக்கிறது.

  இதனை லுகான்ஸ்க் நகர கவர்னர் செர்ஹை கைடாய் உறுதிப்படுத்தி உள்ளார். சிவிரோடோனெட்ஸ்க் நகரின் பல பகுதிகளை ரஷியா கட்டுக்குள் கொண்டு வந்தபோதிலும், முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றும் கவர்னர் செர்ஹை கூறியுள்ளார்.

 • 19 Jun 2022 7:07 AM GMT


  உயர் அசோவ்ஸ்டல் தளபதிகள் விசாரணைக்காக ரஷியாவிற்கு மாற்றப்பட்டதாக தகவல்

  மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை பாதுகாத்த இரண்டு உயர் உக்ரேனிய தளபதிகள் விசாரணைக்காக ரஷியாவிற்கு மாற்றப்பட்டதாக ரஷியாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.

 • 19 Jun 2022 6:06 AM GMT


  உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் பல ஆண்டுகள் நீடிக்கும் - நேட்டோவின் ஸ்டோல்டன்பெர்க் எச்சரிக்கை

  இதுதொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில், “உக்ரேனிய ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்கள் தேவைப்படுவதால், உக்ரைனில் போர் பல ஆண்டுகளாக நீடிக்கும். மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்பதால் நாம் தயாராக வேண்டும். உக்ரைனை ஆதரிப்பதை நாம் விட்டுவிடக் கூடாது” என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

 • 19 Jun 2022 4:39 AM GMT


  ரஷிய ஏவுகணைகள் கிழக்கு உக்ரைன் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கை தகர்த்தது: 11 பேர் காயம்

  மூன்று ரஷிய ஏவுகணைகள் கிழக்கு உக்ரேனிய நகரமான நோவோமோஸ்கோவ்ஸ்கில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கை நேற்று அழித்ததாக பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் ஒரு ஆன்லைன் செய்தியில் தெரிவித்தார்.

  நோவோமோஸ்கோவ்ஸ்க் பிராந்திய தலைநகரான டினிப்ரோவின் வடகிழக்கில் அமைந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்ததாகவும், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 • 18 Jun 2022 10:40 PM GMT

  ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பாம்பு தீவிற்கு ஆயுதங்களை கொண்டு சென்ற ரஷியா கப்பல் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஆயுதங்களை ஏற்றிச்சென்ற ரஷிய கப்பல் அழிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல் கடலில் மூழ்கியது.

 • 18 Jun 2022 10:39 PM GMT

  உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தில் சண்டை தீவிரமடைந்து வருகிறது. அம்மாகாணத்தில் உள்ள செவ்ரொடோன்ஸ்க் நகரில் உச்சபட்ச சண்டை நீடித்து வருகிறது. போரில் செவ்ரொடோன்ஸ்க் நகரில் சண்டையிட ரஷியா அதிக அளவில் ரிசர்வ் படைகளை அனுப்பி வைத்துள்ளது.   


Next Story