உக்ரைனில் பீரங்கி பழுதுபார்க்கும் ஆலை மீது ரஷியாவின் ஸ்கேண்டர் ஏவுகணைகள் தாக்குதல்


உக்ரைனில் பீரங்கி பழுதுபார்க்கும் ஆலை மீது ரஷியாவின் ஸ்கேண்டர் ஏவுகணைகள் தாக்குதல்
x

உக்ரைனில் பீரங்கி பழுதுபார்க்கும் ஆலை மீது ரஷியாவின் ஸ்கேண்டர் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளன என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


கார்கிவ்,உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போரானது மூன்றரை மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷிய படை வீரர்கள் இழப்புகளை சந்தித்தபோதும் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.

இந்த போரில் இரு நாட்டின் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை காலி செய்து விட்டு வேறு நாட்டுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்த போரில் ரஷியாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன.

போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், தங்களை பாதுகாத்து கொள்ளவும் ரஷியாவில் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்களும் வெளியேறி வருகின்றன. போரானது நீண்ட காலத்திற்கு தொடர கூடிய சூழலும் காணப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சிவிரோடோனெட்ஸ்க் நகர் அருகே படை வீரர்கள் முகாமிட்டுள்ள பகுதிக்கு மீண்டும் சென்றுள்ளார். போரை முன்னெடுத்து செல்லும் வீரர்களை தைரியம் வாய்ந்தவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள் என்று புகழ்ந்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான இந்த போரில், அந்நாட்டின் கிழக்கு நகரான நொவோமோஸ்கோவிஸ்க்கில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கு மீது ரஷியாவின் 3 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளன என அந்த மண்டல நிர்வாக தலைவர் கூறியுள்ளார்.

உக்ரைனின் கிழக்கு நகரான சிவிரோடோனெட்ஸ்க்கை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாக, போர் நடைபெறும் பிற பகுதிகளில் இருப்பில் உள்ள படை வீரர்களில் பலரை அந்நகருக்கு செல்லும்படி ரஷியா அனுப்பி கொண்டிருக்கிறது.

இதனை லுகான்ஸ்க் நகர கவர்னர் செர்ஹை கைடாய் உறுதிப்படுத்தி உள்ளார். சிவிரோடோனெட்ஸ்க் நகரின் பல பகுதிகளை ரஷியா கட்டுக்குள் கொண்டு வந்தபோதிலும், முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றும் கவர்னர் செர்ஹை கூறியுள்ளார்.

இந்நிலையில், ரஷியாவின் ஸ்கேண்டர் ஏவுகணைகள், உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள பீரங்கி பழுதுபார்க்கும் ஆலை மீது தாக்குதல் நடத்தி உள்ளன. இதனை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

இதுபற்றி உக்ரைனின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, உக்ரைனின் 2வது மிக பெரிய நகரான கார்கிவ்வின் வடக்கே சூழ்நிலையானது முற்றிலும் கடினம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

நகரை நெருங்க ரஷிய படைகள் முயற்சித்து கொண்டிருக்கின்றன. நகரின் மீது மீண்டும் குண்டுகளை வீசவும் முயன்று வருகின்றன என அவர் கூறியுள்ளார்.


Next Story