உக்ரைன்: குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிட பின்னணியில் புகைப்படம் எடுத்த மாணவ மாணவிகள்


உக்ரைன்:  குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிட பின்னணியில் புகைப்படம் எடுத்த மாணவ மாணவிகள்
x
தினத்தந்தி 14 Jun 2022 6:47 AM GMT (Updated: 14 Jun 2022 7:48 AM GMT)

உக்ரைனில் குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் நின்று மாணவ மாணவிகள் எடுத்த குழு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.



கீவ்,



உக்ரைனில் போரால் பொதுமக்கள் பலர் வீடுகளை, உறவினர்களை இழந்து நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மனவருத்தத்தில் ஆழ்ந்து உள்ளனர். மாணவர்களின் கல்வி, வருங்காலம் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் ஒரு குழுவாக நின்று மாணவ மாணவியர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

உக்ரைனில் ஒரு சில மாணவ மாணவியர் குழுவாக சேர்ந்து புகைப்படங்களை எடுத்து கொள்ள விரும்பியுள்ளனர். இதற்காக போரால் உருக்குலைந்து போயுள்ள உக்ரைனில் உள்ள கட்டிடங்களை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இதுபற்றிய புகைப்படம் ஒன்றை உக்ரைனில் உள்ள ஊழல் ஒழிப்பு மையத்தின் செயல் இயக்குனரான டேரியா காலேனிக் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு, செர்னிகிவ் பள்ளியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி என்று தலைப்பிட்டு உள்ளார். அதில், 13 மாணவ மாணவியர் இடம் பெற்று உள்ளனர். தரை தளத்தில் மாணவிகள் குழு ஒன்று 6 பேராகவும், முதல் தளத்தில் தனித்தனியாக முறையே 3 மாணவிகள், 2 மாணவர்கள் எனவும் மற்றும் 2வது தளத்தில் 2 மாணவர்கள் என மொத்தமுள்ள 13 பேரும் இடிந்து, உருக்குலைந்து காணப்படும் கட்டிடங்களுக்கு மத்தியில் புகைப்படத்திற்கு காட்சி கொடுத்துள்ளனர்.

இந்த புகைப்படம் ஸ்டேனிஸ்லாவ் சேனிக் (வயது 25) என்பவரால் எடுக்கப்பட்டு உள்ளது. அவர் கூறும்போது, போரால் ஏற்பட்ட பேரதிர்ச்சி அனுபவத்திற்கு பின்னர், பள்ளியில் படித்த மூத்த 40 மாணவர்களின் முக்கிய நிகழ்வுகளை படம்பிடிக்க தீர்மானித்தேன்.

அதனை நினைவகத்தில் வைத்திருப்பது மிக முக்கியம் என எனக்கு உறுதியாக தெரியும். இப்போதிலிருந்து, 10 முதல் 15 ஆண்டுகளுக்கு பின்பு, அவர்களுக்கு குழந்தைகள் இருக்கும். அவர்களிடம் இந்த புகைப்படங்களை அவர்கள் காட்டுவார்கள் என கூறியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பலரும் லைக்குகளையும் மற்றும் தங்களுடைய விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story