ஒரே சீனா கொள்கையில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளோம்: அமெரிக்கா அறிவிப்பு


ஒரே சீனா கொள்கையில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளோம்:  அமெரிக்கா அறிவிப்பு
x

ஒரே சீனா கொள்கையில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளோம் என்றும் சுதந்திர தைவானுக்கு ஆதரவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்து உள்ளது.



வாஷிங்டன்,



அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டுக்கு இன்று சென்று அந்நாட்டு அதிபர் சை இங்-வென்னை சந்தித்து பேச திட்டமிடப்பட்டு உள்ளது. எனினும், சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா மற்றும் தைவான் பகுதிகளுக்கு இடையேயான எந்த வடிவிலான அலுவலக தொடர்புக்கும் சீனா பல தருணங்களில் கடுமையாக தனது எதிர்ப்புகளை தெரிவித்து வந்துள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான உறவில் சமீப மாதங்களாக பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

தைவானின் ஜலசந்தியின் இரு பக்கமும் சீனாவுடன் ஒன்றிணைந்தது என வலியுறுத்தி வருவதுடன், தைவான் தனி நாடாக செல்வதற்கான பிரிவினை செயலுக்கு சீனா கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.

ஒரே சீனா கொள்கைக்கு அமெரிக்கா உட்பட வேண்டும் என்றும் அதுவே சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவின் அரசியல் அடித்தளம் ஆகவும் இருக்கும் என்றும் சீனா கூறி வருகிறது.

சீன உள்நாட்டு போரில் தனிநாடாக பிரிந்த தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. இதுபற்றி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறும்போது, தைவான் சீன பிராந்தியத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். தைவான் விவகாரம் முற்றிலும் சீனாவின் உள் விவகாரம்.

சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவகாரத்தில் எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் இடம் கிடையாது. தேசிய இறையாண்மையை பாதுகாக்க சீன மக்கள் கொண்டுள்ள உறுதித்தன்மையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். தன்னாட்சி பிராந்தியமாக உள்ள தைவானை நாங்கள் ஒருபோதும் கட்டுப்படுத்தியதில்லை. கண்டிப்பாக ஒருநாள் அதனை கைப்பற்றுவோம்.

தேவையேற்பட்டால் படைகள் மூலம் அது நடக்கும் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என கடந்த 3 நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பைடனுடன் தொலைபேசியில் பேசும்போது, சீன அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை விடும் வகையில் பேசினார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையிலேயே அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டு சுற்றுப்பயணம் அமைகிறது. இதுபற்றி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ஒரே சீனா கொள்கையில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளது. சுதந்திர தைவான், என்பதற்கு அமெரிக்கா ஆதரவு எதுவும் அளிக்கவில்லை என கூறியுள்ளார்.

எனினும், அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் ஆனது, ஒரே சீனா கொள்கை மற்றும் சுதந்திர மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பகுதிக்கான ஆதரவில் தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

நான்சி பெலோசி தைப்பே நகரில் இன்றிரவு தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தைவான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எனினும் பெலோசி, தைவான் நாட்டுக்கு எப்போது சென்று சேருவார் என்று தெளிவாக தெரியவில்லை.


Next Story