அமெரிக்காவில் நடப்பது என்ன? பல இடங்களில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 8 பேர் காயம்


அமெரிக்காவில் நடப்பது என்ன? பல இடங்களில் துப்பாக்கி சூடு:  ஒருவர் பலி; 8 பேர் காயம்
x

அமெரிக்காவில் பல இடங்களில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலியானார். 8 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.



வாஷிங்டன்,



நடப்பு ஆண்டில், அமெரிக்காவில் பெரிய அளவில் 381 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இது நாளொன்றுக்கு சராசரியாக 1.7க்கும் கூடுதலான பெரிய அளவிலான துப்பாக்கி சூடு எண்ணிக்கையாகும்.

அந்நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு வேதனை தெரிவித்த அதிபர் பைடன், குழந்தைகள், குடும்பத்தினரை பாதுகாக்க, தாக்குதல் நடத்த கூடிய ஆயுதங்களை தடை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என கூறினார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 22ந்தேதி துப்பாக்கி பாதுகாப்பு மசோதா கொண்டு வருவதற்கான முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

எனினும், இந்த மசோதாவானது, தாக்குதல் நடத்தும் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்காது. ஆனால், ஆபத்துக்குரிய தனி நபர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் தடுக்க செய்யும். மக்களிடையே புதிய மனநலத்திற்கான நிதியுதவிக்கும், இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நேற்று பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதன்படி, அமெரிக்காவில் வடகிழக்கு வாஷிங்டனில் கேபிட்டல் ஹில் பகுதியில் இருந்து சற்று தொலைவில் நேற்றிரவு 8.30 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனை, தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் விட்டோ மேகியோலோ தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், மெட்ரோபொலிடன் நகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்க கூடும் என தெரிவித்து உள்ளது. எனினும், சரியான எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை. சந்தேகத்திற்குரிய தகவல் எதுவும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவல் துறை செய்தி தொடர்பாளர் சீன் ஹிக்மேன் கூறும்போது, சம்பவம் நடந்த தெருவில் ஆம்புலன்சுகள் வரிசையாக சென்றன. அந்த பகுதியில் நின்றிருந்த பெண் ஒருவர், 15 முறை துப்பாக்கி சூடு நடந்த சத்தம் கேட்டது என அச்சத்துடன் கூறினார் என்று தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஞாயிற்று கிழமை இதுபோன்றதொரு வன்முறை சம்பவம் நடந்தது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆர்லேண்டோ நகரில் மக்கள் கூட்டத்தில் திடீரென ஒருவருக்கொருவர் மோதல் ஏற்பட்டு வன்முறை பரவியது.

இதில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கூட்டத்தினரை நோக்கி சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர். சமீபத்தில் டெக்சாஸில் ஹால்தம் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 அதிகாரிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், வாஷிங்டன் துப்பாக்கி சூடு பற்றி காவல் துறை தலைவர் ராபர்ட் ஜே. கான்டீ செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 5 பேர் வரை காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை தெரியவில்லை.

துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணமும் தெரிய வரவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் அறிந்தவர்களா? என்பதும் தெரியவில்லை. துப்பாக்கி சூடு நடந்தபோது மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்திருக்க கூடும். விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

நமது சமூகத்தில் உள்ளவர்கள் தங்களது மனித தன்மை உணர்வை இழந்து விட்டனர் என தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, அமெரிக்காவில் வேறு 3 இடங்களிலும் நேற்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. கெயின்ஸ்வில்லே தெருவில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்து உள்ளார். நியூட்டன் பிளேஸ் பகுதியில் ஆடவர் ஒருவரும், ஆகிள்தோர்ப் தெரு பகுதியில் மற்றொருவரும் காயமடைந்து உள்ளனர். இந்த தாக்குதல் ஒரு சில மணிநேர இடைவெளியில் நடந்துள்ளது. இதனால், அமெரிக்காவில் நேற்று ஒரே நாள் இரவில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தும், பெண் உள்பட 8 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர்.

இதனால், உலக நாடுகளுக்கு ஆயுதங்களை வினியோகிப்பதில் தடையின்றி செயல்பட்டு வந்த அமெரிக்காவில், உள்நாட்டிலேயே ஆயுத கலாசாரம் தலை தூக்கி அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது.


Next Story