9. திருப்பாவை - திருவெம்பாவை


9. திருப்பாவை - திருவெம்பாவை
x
தினத்தந்தி 24 Dec 2016 6:43 AM GMT (Updated: 24 Dec 2016 6:43 AM GMT)

திருப்பாவை தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபங் கமழத் துயிலணைமேற் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவத் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான் ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திர

திருப்பாவை

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங் கமழத் துயிலணைமேற் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவத் தாள்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்


ஒளி பொருந்திய நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகை முழுவதும் விளக்கெரிய, நறுமணம் கமழும் அகில் புகை வீசுகிறது. அழகிய பஞ்சணையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரம் நாங்கள் கூவி அழைக்கின்றோம். அவள் பதிலே சொல்லவில்லையே. அவள் ஊமையா? செவிடா? சோம்பல் கொண்டு தூங்குகிறாளா? அல்லது எழ முடியாதபடி ஏதேனும் மந்திரத்தி¢ல் சிக்கி விட்டாளா? உனது மகளை உடனே எழுப்பு. மாயங்கள் செய்பவன், மாதவன், வைகுந்தன் என்றெல்லாம் அவனைக் கூவி அழைத்து வழிபட வரச்சொல்வாயாக.

திருவெம்பாவை

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னை புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே யெமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலோமேலோர் எம்பாவாய் 


காலத்தால் முற்பட்ட பழம்பொருள் களுக்கெல்லாம் முற்பட்ட பழம்பொருளாய் நீ இருக்கிறாய். அதைப் போலவே, புதிய பொருள்கள் அனைத்திற்கும் புத்தம்புதுப் பொருளாகவும் நீ திகழ்கின்றாய். உன்னைத் தலை வனாகப் பெற்றதால் நாங்கள் சிறந்த அடியவர்களாய் ஆனோம். உன் தொண்டர்களின் திருவடிகளையே வணங்குவோம், அவர்களுக்கே அன்பர்கள் ஆவோம். அந்தச் சிவனடியார்களையே நாங்கள் கணவராக ஏற்போம். அவர்கள் விரும்பிய வண்ணம் அடிமையாகப் பணி செய்வோம். இந்த நிலையை எங்களுக்கு அருள்வாயானால் எக்குறையுமின்றி நாங்கள் வாழ்வோம்.


Next Story