16. திருப்பாவை - திருவெம்பாவை


16. திருப்பாவை - திருவெம்பாவை
x
தினத்தந்தி 30 Dec 2016 11:30 PM GMT (Updated: 30 Dec 2016 5:25 PM GMT)

திருப்பாவை நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள் திறவாய் ஆயர்சிறுமிய ரோமுக்கு

திருப்பாவை

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.


எங்கள் நாயகன் நந்தகோபாலன் திருமாளிகையைக் காக்கும் காவலனே! கொடிகள் கட்டப்பட்ட தோரண
வாயிலைக் காப்ப வனே! இளமை நிறைந்த ஆயர்குலச் சிறுமியர்களுக்கு, நீலமணி நிறங் கொண்ட மாயக் கண்ணன், வேண்டும் வரத்தையும் அருளையும் தருவதாக நேற்றே உறுதியளித் துள்ளான். அழகிய கதவின் தாளினை திறப்பாயாக. அவனைத் துயி லெழுப்ப நீராடிப் பரிசுத்தத்துடன் வந்துள்ளோம். மறுத்துவிடாமல் நிலைக்கதவை நீ திறந்தால் நாங்கள் உள்ளே சென்று இறைவனைபாடி கண்ணன் கருணையை பெற்றிடுவோம்.

திருவெம்பாவை

முன்இக் கடலைச் சுருக்கியெழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்துஎம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நம்தம்மை ஆளுடையாள்
தன்னின் பிரிவிரா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழைஏலோர் எம்பாவாய்.


மழைக்காலத்திற்கு முன்பாகவே எழுந்து
கடலில் உள்ள நீரைக்குடித்து எம் உமாதேவியின் நீலநிற வடிவோடு வானில் பரவும் மேகமே! உமையம்மையின் மெல்லிய இடை போல் மின்னல் எழும்படி செய். அவளது பாதங் களில் அணிந்துள்ள சிறப்பு மிக்க சிலம்புகள், ஓசையிடுவது போல் இடி முழக்கம் செய்வாய். அவளது அழகிய புருவம் போல் வானவில்லை தோன்றச்செய்வாய். உமையை பிரிந்து இருக்காத எமது தலைவனாகிய இறைவனும், இறைவியும் அடியார்களுக்கு வாரி வழங்கும் அருளைப்போல் மழையைப் பொழிவாய்.


Next Story