21. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி


21. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி
x
தினத்தந்தி 5 Jan 2017 5:50 AM GMT (Updated: 5 Jan 2017 5:50 AM GMT)

திருப்பாவை ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதுஅளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுட

திருப்பாவை

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதுஅளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.


ஆயர்கள் பெரிய குடங்களுடன் சென்று மாடுகளில் பால் கறந்தனர். அவ்வாறு கறந்தபால், குடங்களில் நிறைந்து வழியும்படி இடைவிடாமல் பாலைச்சொரியும் வள்ளல் தன்மையுடைய  பசுக்களை மிக அதிக மாகப் பெற்றிருக்கின்ற நந்தகோபனுடைய திருமகனே! பள்ளி எழுந்தருள வேண்டும்.  வேதங்கள் போற்றும் அளவிட முடியாத பெருமை வாய்ந்தவனே! உலகம் தோன்றிய காலத்தில் ஒளி வடிவம் எடுத்து நின்றவனே!  கண்விழித்தருள்வாயாக! பகைவர்கள் உன்¢ வாசலில் வந்து உன் திருவடிகளில் வீழ்வதுபோல, நாங்களும் உன்னைப் போற்றித் துதிக்கின்றோம். எங்களுடைய புகழ் வார்த்தைகளைக் கேட்பாயாக.

திருப்பள்ளியெழுச்சி

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


என் ஞானவாழ்வுக்கு  மூலமாகிய பரம்பொருளே வணங்குகிறேன். பொழுது புலர்ந்து விட்டது. மலர் போன்ற உனது திருவடிகளுக்கு சமமான மலர்களை தூவி உன்னை வழிபட்டோம். அதன் பயனாக உன் திரு முகத்தில் தோன்றும் சிரிப்பை பார்த்து உன் திருவடிகளை தொழுதோம். சேற்றில் மலர்ந்த செந்தாமரைகள் சூழ்ந்த வயல்களை கொண்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! உயர்வான ரிஷபக்கொடியை கொண்டவனே! என்னை ஆட்கொண்ட தலைவனே! எம் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாய்.

Next Story