26. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி


26. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி
x
தினத்தந்தி 9 Jan 2017 10:55 PM GMT (Updated: 9 Jan 2017 10:55 PM GMT)

திருப்பாவை மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே போல்வன சங்கங்கள், போ

திருப்பாவை 

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே
போல்வன சங்கங்கள், போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே, பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே, கொடியே விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.


திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலே! மணிவண்ணனே! மார்கழி நீராடுவதற்காக நமது முன்னோர்கள் மேற் கொண்ட முறைகள் சில உள்ளன. அதை சொல்கிறோம். கேட்பாயாக. பூவுலகை நடுங்க வைக்கும் வெண்மை
நிறமிக்க பாஞ்சசன்னியம் உனது சங்கு. அதைப்போன்ற பல சங்குகள் திருப்பள்ளியெழுச்சி பாட வேண்டும். ஒலி எழுப்புவதற்கு பறை வேண்டும். திருப்பல்லாண்டு பாடுவதற்கு பாடகர்கள் வேண்டும். அழகு பொருந்திய விளக்குகள், கொடிகள் கட்டுவதற்கான துணியும் பொருட்களும் வேண்டும். பிரளய காலத்தில் ஆலமரத்தின் இலையில் குழந்தையாக பள்ளி கொள்பவனே. இவையே எம் வேண்டுதல். இவற்றை எங்களுக்கு தந்து அருள வேண்டும்.

திருப்பள்ளியெழுச்சி

பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


உமையம்மையின் கணவரே! உன் அடியார்கள் பலரும் பற்று நீங்கியவராய் உன் முன் நின்று பாசநீக்கம் பெற்றனர். அவர் கள் மையிட்ட கண் களைக் கொண்ட இளம்பெண்கள் தம் காதலர்களிடம் காதல் கொண்டு வணங்குவது போல் உம்மைப் போற்றுகிறார்கள். கமல மலர்கள் பூத்துக் குலுங்கும் குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறைச் சிவபெருமானே! இப்பிறப்பை அறுத்து அருள் வழங்கும் பெருமானே! பள்ளி எழுந்து அருள்புரிவாயாக!


Next Story