தீவினை தீர்க்கும் கடம்பவனநாதர்


தீவினை தீர்க்கும் கடம்பவனநாதர்
x
தினத்தந்தி 23 Jan 2017 10:30 PM GMT (Updated: 23 Jan 2017 10:10 AM GMT)

மலைக்கோட்டை மாநகர் என்று அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே 33 கி.மீ. தொலைவில், கரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவிரி பாயும் வளமான நகரம் குளித்தலை.

லைக்கோட்டை மாநகர் என்று அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே 33 கி.மீ. தொலைவில், கரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவிரி பாயும் வளமான நகரம் குளித்தலை. இந்த திருத்தலத்தை கடம்பதுறை, தட்சிணாகாசி, குழித்தண்டலை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். இந்த குளித்தலையில்தான் அமைந்துள்ளது, காவிரியின் தென்கரையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் 65–வது தலம் என்று புகழப்படும் கடம்பவன நாதர் திருக்கோவில்.

துறை என்றால் ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர் என்று பொருள்படும். எனவே கடம்ப மரங்கள் நிறைந்த காவிரிக்கரை ஊர் என்பதால் கடம்பந்துறை என்பது பொருத்தமே யாகும். பெயருக்கு ஏற்ப திருக்கோவிலின் வெளிச்சுற்று முழுவதும் உள்ள நந்தவனத்தில் கடம்ப மரங்கள் நின்று அசைந்தாடுகின்றன.

‘முற்றிலா முலையாள் இவளாகிலும்
அற்றந்தீர்க்கும் அறிவில ளாகிலும்
கற்றைச் செஞ்சடை யான்கடம்பந் துறைப்
பெற்றம் ஊர்தியென்றால் எங்கள் பேதையே’


என்பது அப்பர் பெருமானின் முதல் தேவாரப் பதிகமாகும். இவர் பத்துப் பாக்களால் இத்திருத்தலத்தைப் புகழ்ந்துள்ளார்.

வடக்கு நோக்கிய மூலவர்

வடக்கு நோக்கியுள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து விட்டு உள்ளே நுழைந்தால், நந்தி தேவர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு நேர் எதிர் கருவறையின் உள்ளே சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் இறைவன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கடம்பவன நாதர் என்று பெயர் பெற்ற இந்த இறைவன் வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிவாலயங்களில் சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரரும், குளித்தலை கடம்பவனநாதரும் மட்டும்தான் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். மூலவருக்குப் பின்புறம் கருவறையில் சப்த கன்னியர்கள் வீற்றிருப்பது எங்குமில்லாத சிறப்பம்சமாகும்.

இதுபற்றி தலவரலாறு ஒன்று உண்டு.

தூம்ரலோசனன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், துர்க்கை வடிவமெடுத்து போரிடச் சென்றாள். ஆனால் துர்க்கையால் அரக்கனின் அட்டகாசத்தை அடக்க முடியவில்லை. எனவே அவள், சப்த கன்னியரை தனக்கு துணையாக அழைத்துக் கொண்டுபோய், மீண்டும் அசுரனுடன் போர் புரிந்தாள். இதில் அசுரன் வதம் செய்யப்பட்டான். அசுரனை அழித்த தோ‌ஷம் நீங்க, சப்த கன்னியர்கள் அனைவரும் இத்தல இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த ஆலயத்தில் துர்க்கை அம்மன் இல்லை. சப்த கன்னியருள் ஒருவரான சாமுண்டியே, துர்க்கையாக இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கே ராகு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

சுவாமி வடக்கு நோக்கி இருப்பதால், எதிரே தெற்கு நோக் கியபடி ஆடவல்லான் நடராஜர் இருக்கிறார். அவரது காலடியில் முலயகன் இல்லை. பிரகாரம் வலம் வரும்போதே மூலவருக்கு கோஷ்டத்தின் பின்புறம் வழக்கமாக லிங்கோத்பவரோ, மகாவிஷ்ணுவோ இருப்பார்கள். ஆனால் இங்கே தட்சிணாமூர்த்தி இருக்கிறார். கிழக்கு நோக்கியபடி விநாயகர், வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான், அவருக்கு எதிரில் லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.

கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் அம்பிகை ‘முற்றிலா முலை அம்மை’ என்ற பெயரில் அருளாட்சி தருகிறார். அப்பர் தனது முதல் பதிகத்தில் இந்த அம்மனைப் பற்றிதான் குறிப்பிடுகிறார். அறுபத்து மூவர் மூர்த்தங்களும், நவக்கிரகங்களும் திருக்கோவில் சுற்றில் வீற்றிருக்கிறார்கள்.

கடம்பவன நாதரை சப்த கன்னியர் மட்டுமில்லாது, அகத்தியரும், கண்ணுவ முனிவரும் வழிபட்டுள்ளனர். முருகப்பெருமான் பூஜித்த தலம் என்பதால் கந்தபுரம் என்றும், அசுரனிடமிருந்து திருமால் வேதங்களை மீட்க இத்தல இறைவனை வழிபட்டதால் சதுர்வேதபுரம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

‘காமன் காய்ந்தபிரான் கடம்பந்துறை
நாமம் ஏந்த தீவினை நாசமே’


என்ற அப்பரின் வாக்குப் புனிதமாக, நம் தீவினைகள் தீர்க்கும் கடம்பந்துறை திருக்கோவிலை ஒரு முறை வலம் வரலாமே.

டாக்டர் ச.தமிழரசன், தஞ்சாவூர்.

Next Story