சாஸ்தாவுக்கு இடம் கொடுத்த விநாயகர்


சாஸ்தாவுக்கு இடம் கொடுத்த விநாயகர்
x
தினத்தந்தி 24 Jan 2017 1:29 PM IST (Updated: 24 Jan 2017 1:29 PM IST)
t-max-icont-min-icon

சோழ நாட்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் ஏராளம். சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் தவிர கிராம தெய்வமாக கருதப்படும் அய்யனார் என்னும் தர்மசாஸ்தா ஆலயங்களும் சோழர்களால் கட்டப்பட்டிருக்கின்றன.

சோழ நாட்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் ஏராளம். சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் தவிர கிராம தெய்வமாக கருதப்படும் அய்யனார் என்னும் தர்மசாஸ்தா ஆலயங்களும் சோழர்களால் கட்டப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு ஆலயம்தான் நடனபுரி என்று அழைக்கப்பட்டு வரும், கூத்தூரில் உள்ள தர்மசாஸ்தா ஆலயம்.

ஆலய அமைப்பு

ஊரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். கோவிலின் முன்புறம் இரண்டு குதிரை, இரண்டு யானைகள், தர்ம சாஸ்தாவின் வாகனங்களாக விளங்குகின்றன. இடதுபுறம் காவல் தெய்வமான சங்கிலி கருப்பர் சன்னிதி உள்ளது. பலியிடுதல் இவருக்கு மட்டுமே  இங்கு நடைபெறுகிறது. வடக்கு நோக்கி மதுரை வீரன் சன்னிதி இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் வாகன மண்டபம். அதில் யானை, பலிபீடம் உள்ளது. அடுத்ததாக ஸ்தபன மண்டபம். இந்த மண்டபத்தின் இடதுபுறம் ஆதி சித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகா மண்டபத்தில், தர்ம சாஸ்தாவின் உற்சவ மூர்த்தி சிலைகள் உள்ளன.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், தர்மசாஸ்தா கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தர்மசாஸ்தாவின் வலதுகால் தொங்கிய நிலையிலும், இடது கால் மடிந்து குறுக்காகவும் உள்ளது. இவரின் வலதுபுறம் பூர்ணாம்பிகை திருமண கோலத்தில் அமர்ந்துள்ளார்.  இடதுபுறம் புஷ்கலாம்பிகை இருக்கிறார்.  

தல வரலாறு

தர்மசாஸ்தா இந்த ஊருக்கு வந்து சேர்ந்தது ஒரு தனிக்கதை. கேரள வணிகர்கள் சிலர், வியாபாரம் செய்யும் பொருட்டு சோழ நாட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல் ஒரு முறை கேரள வணிகர்கள் வியாபாரம் செய்வதற்காக விலையுயர்ந்த பொருட்களை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்தனர். அவர்கள் தங்களுடன், தாங்கள் வழிபட தர்மசாஸ்தாவின் உற்சவர் சிலைகளையும் கொண்டு வந்தனர்.

நடனபுரிக்கு அந்த வணிகர்கள் வந்தபோது, வானம் கறுத்து மழைவரும் போல் இருந்தது. உடனே வணிகர்கள் தங்கள் பொருட் களுடனும், தர்மசாஸ்தா சிலைகளுடனும் அருகே இருந்த விநாயகர் ஆலயத்தில் தங்கினர்.  

தர்மசாஸ்தா, விநாயகரிடம் தான் இரு மனைவிகளுடன் வந்திருப்பதால் தங்க வசதியான இடம் வேண்டுமென கேட்டார். உடனே விநாயகரும் தன் இடத்தை சாஸ்தாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தள்ளி சென்று அமர்ந்தார். தள்ளிச்சென்று அமர்ந்த அந்த விநாயகரே, ‘ஆதி சித்தி விநாயகர்’ என்று போற்றப்படுகிறார்.  

மழை விட்டதும் வணிகர்கள் புறப்பட்டனர். அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த பொருட்களை மறவாது எடுத்துச் சென்றனர். ஆனால் தர்மசாஸ்தாவின் சிலைகளை மறந்து சென்று விட்டனர்.

தஞ்சாவூர் வந்த வியாபாரிகள், தாங்கள் கொண்டு வந்த மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற மூட்டைகளை வியாபாரம் செய்ய பிரிந்த போது, அவர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம் அந்த மூட்டைகள் யாவும், உப்பு மூட்டைகளாக மாறி இருந்தன. தாங்கள் கொண்டு வந்த தர்ம சாஸ்தாவின் சிலையை நடனபுரியில் விட்டு வந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது என உணர்ந்த வணிகர்கள், உடனே புறப்பட்டு நடனபுரி வந்தனர்.

தர்ம சாஸ்தா சிலைகளை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘நான் இங்கேயே தங்கியிருக்க நினைக்கிறேன்’ என்றது அந்தக் குரல். இதையடுத்து வணிகர்கள் திரும்பிவிட்டனர். அதுமுதல் தர்மசாஸ்தாவின் உற்சவர் சிலைகள் தான் இந்த ஆலயத்தில் பூஜையில் இருந்து வந்தன.

மூலவர் சிலைகள்


ஆலயத்தின் அருகே உள்ள திருக்குளத்தில் மூலவர் சிலைகள் இருப்பதாக, அந்த ஊர் பக்தர் ஒருவரின் கனவில் ஒரு காட்சி தென்பட்டது. உடனே ஊர் மக்கள் குளத்தை தோண்டிய போது மூலவர் சிலைகள் கிடைத்ததாம். அந்த சிலைகளையே கருவறையில் பிரதிஷ்டை செய்து விட்டனர். அவைகளே தற்போது மூலவராய் அருள்பாலிக்கும் தர்மசாஸ்தா மற்றும் பூரண–புஷ்கலா திருமேனிகள்.

இந்த ஆலயத்தில் ஆகம விதிப்படி தினசரி ஒரு கால பூஜை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அனு‌ஷ நட்சத்திரத்தில்   இறைவன், இறைவிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அப்போது சிறப்பு யாகமும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். கார்த்திகை மாதம் 1008 தீபம் ஏற்றி அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் செய்யப்படும்.  

குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு, அந்தப்பேறு நிச்சயம் கிடைப்பதாக நம்பிக்கை. அவ்வாறு குழந்தை வரம் பெறும் பெண்கள், தங்களது வளைகாப்பு முடிந்ததும், வளையல்களை கொண்டு வந்து இங்குள்ள அம்பிகைக்கு சாத்துகின்றனர். மேலும் குழந்தை பிறந்ததும், சிறிய அளவில் ஆலயமணியை வாங்கி கட்டி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூத்தூர் திருத்தலம். கல்லணை மற்றும் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

–ஜெயவண்ணன்.
1 More update

Next Story