ஜென் கதைகள் : ஆடும்.. குதிரையும்..


ஜென் கதைகள் : ஆடும்..  குதிரையும்..
x
தினத்தந்தி 31 Jan 2017 1:45 AM GMT (Updated: 30 Jan 2017 12:21 PM GMT)

அந்த ஜென் துறவி மிகவும் ஜாலியானவர். ஒரு மடாலயம் அமைத்து, அதில் இருந்த சீடர்களுக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுத்து வந்தார்.

ந்த ஜென் துறவி மிகவும் ஜாலியானவர். ஒரு மடாலயம் அமைத்து, அதில் இருந்த சீடர்களுக்கு நற்பண்புகளை கற்றுக் கொடுத்து வந்தார். அவர் எதற்காகவும் சீடர்களிடம் கோபம் கொண்டது இல்லை.

ஒரு நாள் அந்தத் துறவி, தனது சீடர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது சீடர்கள் சிலர், ‘குருவே! உங்களுக்கு கதை என்றால் பிடிக்குமா? உங்களுக்குப் பிடித்த கதை எதுவும் இருக்கிறதா?’ என்று கேட்டனர்.

துறவியோ, ‘எனக்கு ‘குதிரையும் ஆடும்’ என்ற கதை பிடிக்கும்’ என்று சீடர்களிடம் சொன்னார்.

‘குருவே! உங்களுக்கு பிடித்த அந்தக் கதையை எங்களுக்கும் சொல்லுங்கள்’ என்று சீடர்கள் கேட்கவே, அவர்களுக்கு அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினார் குரு.

அந்த ஊரில் இருந்த சிறிய விவசாயி ஒருவர், ஒரு குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்து வந்தன. ஒரு நாள் அந்த குதிரை நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தான் விவசாயி.

மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, ‘நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி.. இல்லையெனில் அதனைக் கொன்று விட வேண்டியது தான். வேறு வழியில்லை’ என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை கேட்ட ஆடு பயந்து போனது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அதன் பிறகு ஆடு, தன் நண்பனான குதிரையிடம் வந்தது. ‘எழுந்து நட நண்பா! இல்லாவிட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்’ என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் மருத்துவர் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்தார். பின்னர் அந்த விவசாயிடம் ‘நாளை குதிரை நடக்கவில்லை என்றால், அதனைக் கொன்று விட வேண்டும். இல்லாவிட்டால், குதிரைக்கு வந்திருக்கும் நோய் மற்றவர்களுக்கும் பரவி விடும்’ என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, ‘நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும். எழுந்திரு! எழுந்திரு!’ என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்து விட்டது.

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடி ஆடி விளையாடியதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். உடனடியாக மருத்துவரை அழைத்து அவரிடம் விவரத்தைச் சொன்னார். ‘மருத்துவரே! என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்து விட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி.. இந்த ஆட்டை வெட்டுவோமா!’ என்றார்.

கதையைக் கூறி முடித்ததும் சீடர்களைப் பார்த்து குரு கேட்டார்.

‘இந்த கதையின்படி, உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். இந்த உலகத்தில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்’ என்றார் துறவி.

Next Story