ஆன்மிகம்

149. ‘பவுல்’ ஆன சவுல் + "||" + "Paul" Saul became

149. ‘பவுல்’ ஆன சவுல்

149. ‘பவுல்’ ஆன சவுல்
சவுல்– கிறிஸ்தவத்துக்கு எதிராக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர். சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்த பரிசேயர்.
பைபிள் மாந்தர்கள்

- சேவியர்


வுல்– கிறிஸ்தவத்துக்கு எதிராக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர். சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்த பரிசேயர். மிகவும் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த இவர், யூத மத சட்டங்களை நன்கு கற்றறிந்தவர். கிறிஸ்தவத்துக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார்.


இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை, அவர்களின் வீடுகளில் புகுந்து கொடுமைப்படுத்தினார். தன்னுடைய வலிமையினால் அவர்களை இழுத்துக் கொண்டு போய் சிறையிலும் அடைத்தார். வளர்ந்து கொண்டிருந்த சபை சிதறடிக்கப்பட்டது.

தமஸ்கு நகரத்தில் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டிருப்பதை சவுல் அறிந்தார். அவர்களை அழிப்பதற்கான அனுமதியை எருசலேம் தலைமைக் குருக்களிடம் சென்று கேட்டார். அவர்கள் உடனடியாக அனைத்தையும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தனர்.

சவுல் தன்னுடைய குதிரையில் ஏறி தமஸ்கு நகரை நோக்கி விரைந்தார். கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என வெறியுடன், படையுடன் அவர் புறப்பட்டார்.

போகும் வழியில் திடீரென்று வானத்திலிருந்து தோன்றிய ஒரு ஒளி சவுலைச் சுற்றி வீசியது. சவுல் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். உடன் வந்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போய் நின்றார்கள்.

‘சவுலே... சவுலே... ஏன் என்னைத் துன்புறுத்து கிறாய்?’ என்று குரல் ஒன்று ஒலித்தது.

எல்லோரும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். யாரும் இல்லை. சத்தம் மட்டும் கேட்கிறது. அவர்கள் பயத்துடன் செய்வதறியாமல் திகைத்து நிற்க, சவுல் குரலை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.

‘ஆண்டவரே நீர் யார்? நான் உம்மை எப்போது துன்புறுத்தினேன்...’

‘நீ துன்புறுத்தும் இயேசு தான் நான்’ சவுல் இந்தக் குரலைக் கேட்டதும் நடுங்கினார்.

இயேசு தான் உண்மையான கடவுள் என்பதை அவருடைய மனம் எப்போதும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

‘நீ எழுந்து நகருக்குப் போ... நீ என்ன செய்யவேண்டும் என்பதை அங்கே நான் உனக்குச் சொல்வேன்’ என குரல் ஒலிக்க சவுல் எழுந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். எங்கும் ஒரே இருள்! அவருடைய பார்வை பறிபோய் இருந்தது!

மூன்று நாட்கள் சவுல் பார்வையில்லாமல் இருந்தார். அவர் அந்த மூன்று நாட்களும் உண்ணவும் இல்லை. குடிக்கவும் இல்லை. ‘நான் துன்புறுத்தும் இயேசு தான் உண்மையிலேயே கடவுளா? நான் இப்போது என்ன செய்வது?’ சவுல் கேள்விகளுக்குள் புதைந்து கிடந்தார்.

பார்வை இருந்தபோது குருடனாய் இருந்த சவுல், பார்வை போனபின் புதுப் பார்வை பெற்றார். இயேசுவை நோக்கி மன்றாடத் தொடங்கினார்.

‘ஆண்டவரே... நீர் உண்மையான கடவுளாய் இருந்தால் என்னுடைய பார்வை எனக்குத் திரும்ப வரட்டும்’ சவுல் மனதால் வேண்டினான்.

‘அனனியா என்றொரு மனிதனை நான் அனுப்புகிறேன். அவன் உன்னுடைய பார்வையைத் திரும்பத் தருவார்’ சவுலின் மனதுக்குள் கடவுள் பேசினார். அனனியாவிடமும் கடவுள் பேச அவர் சவுலைத் தேடி ஓடினார்.

சவுலைக் கண்டுபிடித்து அவருடைய கண்களின் மேல் கைகளை வைத்து செபித்தார் அனனியா. அப்போது அவருடைய கண்களிலிருந்து செதிள் போன்ற ஒரு பொருள் கிழே விழ அவர் பார்வையடைந்தார்.

அதன் பின் சவுல் தாமதிக்கவில்லை. தன்னுடைய பழைய எண்ணங்களையெல்லாம் மாற்றிக் கொண்டார். விரைந்து சென்று திருமுழுக்குப் பெற்றார். கொண்டு வந்திருந்த ஆணைகளைக் கிழித்து எறிந்தார்.

எந்த அளவுக்கு இயேசுவுக்கு எதிராய் செயல்பட்டாரோ, அந்த அளவுக்கு ஆதரவாய் செயல்பட ஆரம்பித்தார்!

தன்னுடைய பெயரையும் ‘பவுல்’ என்று மாற்றிக் கொண்டார்.

நகரெங்கும் சென்று கிறிஸ்துவை அறிக்கையிடத் தொடங்கினார்.

கிறிஸ்துவை அடியோடு வெறுத்த ஒருவர் அவரைப் பற்றி சாட்சி சொல்லித் திரிவதைக் கேட்ட பலர் இயேசுவின் விசுவாசம் கொண்டார்கள்.

பவுல், தமஸ்கு நகரில் தன்னுடைய போதனையை தீவிரப்படுத்தினார். யூதர்கள் பவுலின் மனமாற்றத்தைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். எப்படியாவது பவுலைக் கொல்லவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டார்கள். பவுல் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவில்லை. இயேசுவின் ஆற்றலுடன் பல்வேறு நகர்களுக்கும், துறைமுகப் பட்டணங்களுக்கும் சென்று போதிக்கத் தொடங்கினார்.

இவ்வாறு மிகவும் எழுச்சியுடன் பணியாற்றிய பவுல் பல்வேறு வகையில் துன் புறுத்தப்பட்டார். கடைசியில் கி.பி. 64–ம் ஆண்டு நீரோ மன்னனால் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணமடைந்தார்!

கிறிஸ்தவத்தின் வேர்களில் கோடரி வைக்க நினைத்த பவுலை இயேசு கிறிஸ்தவத்தின் ஆணிவேராக மாற்றினார். இன்றைய பைபிளில் இருக்கும் புதிய ஏற்பாடு நூல்களில் பதிமூன்று நூல்களை தூய ஆவியின் ஏவுதலால் பவுல் எழுதியிருக் கிறார். திருச்சபைகளுக்கு அவர் எழுதிய கடிதங்களே அவை. அவை தான் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமாக இன்றைக்கு அமைந்திருக்கின்றன.

அழைத்தலுக்கு செவிமடுப்பவர்களை இறைவன் அற்புதமாகப் பயன்படுத்துவார் என்பதன் விளக்கமாக இருக்கிறது தூய பவுலின் வாழ்க்கை.

(தொடரும்)

தொடர்புடைய செய்திகள்

1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்?
திருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.
2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...
ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.
3. தீபத்தில் முப்பெரும்தேவியர்
முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.
4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்
மகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.
5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ
சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.