தொடக்கமும்.. முடிவும்..


தொடக்கமும்.. முடிவும்..
x
தினத்தந்தி 14 Feb 2017 1:30 AM GMT (Updated: 13 Feb 2017 10:35 AM GMT)

புண்ணிய தல யாத்திரை என்பது பலரும் காசி முதல் ராமேஸ்வரம் வரை செல்வதையே சொல்வார்கள்.

புண்ணிய தல யாத்திரை என்பது பலரும் காசி முதல் ராமேஸ்வரம் வரை செல்வதையே சொல்வார்கள். ஆனால் இந்த புண்ணிய தல யாத்திரையானது, ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ்வரத்திலேயே முடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் சிலர். அதாவது காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராட வேண்டும். அங்குள்ள மணல் மற்றும் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு காசிக்கு செல்ல வேண்டும்.

காசியில் உள்ள கங்கை தீர்த்தத்தில் நீராடி, ராமேஸ்வரத்தில் எடுத்துச் சென்ற மணலை அங்கு போட்டு விட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ் வரத்திலேயே தல யாத்திரையை முடிக்க வேண்டும். இது போன்று பலராலும் செய்ய முடியாது. எனவே ராமேஸ்வரம் ராமநாதர் தலத்திலேயே கங்கை தீர்த்தம் விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கி, மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கிவிட்டு, அந்த தீர்த்தம் கொண்டு ராமநாதருக்கு அபிஷேகம் செய்தால், நினைத்தது நடக்கும்.

உப்பால் ஆன லிங்கம்

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்பு லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு முறை சிலர், ‘இந்தக் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள். அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை. ‘அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று  கூறினார். அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.

வால் இல்லாத ஆஞ்சநேயர்

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வால் இல்லாத ஆஞ்சநேயர் திருக் கோவில் அமைந்துள்ளது. ராமர் பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்காக, ஆஞ்சநேயர் காசிக்கு சிவலிங்கத்தை தேடிச் சென்றார். அவர் வருவதற்கு தாமதம் ஆனதால், சீதாதேவி மணலில் செய்து கொடுத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராம  பிரான் வழிபட்டு முடித்து விட்டார். அதன் பிறகு வந்த ஆஞ்சநேயர், தன்னுடைய வாலால் மணல் லிங்கத்தை அகற்ற முயன்றதாகவும், அந்த முயற்சியின் போது, ஆஞ்சநேயரின் வால் அறுந்து போனதாகவும் ஒரு சாரார் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே, இங்குள்ள தலத்தில் ஆஞ்சநேயர் வால் இல்லாத தோற்றத்துடன் காணப்படுவதாக தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் இந்த ஆலயத்தில் கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் உருவமும் உள்ளது. இந்த உருவத்தின் மீது கடல் சிப்பிகள் பதிந்திருப்பதை காண முடிகிறது.


Next Story