ஆன்மிகம்

முதல் கண்தானம் செய்த கண்ணப்பநாயனார் + "||" + First Eye donation made Kannappa Nayanar

முதல் கண்தானம் செய்த கண்ணப்பநாயனார்

முதல் கண்தானம் செய்த கண்ணப்பநாயனார்
மனித உறுப்பு தானங்களில் சிறந்தது கண்தானம். அதை முதலில் செய்த பெருமை வேடர் குலத்தைச் சேர்ந்த திண்ணன் என்பவரையே சேரும்.
னித உறுப்பு தானங்களில் சிறந்தது கண்தானம். அதை முதலில் செய்த பெருமை வேடர் குலத்தைச் சேர்ந்த திண்ணன் என்பவரையே சேரும். திண்ணன் தனது கண்களில் ஒன்றை தானமாக கொடுத்தது மனிதருக்கல்ல... மகேஸ்வரனுக்கு! இதன் மூலம் அவரது இயற்பெயர் மறைந்து இறைவனாலேயே கண்ணப்பன் என்று அழைக்கப்பட்டார். அவரது அருட் கருணையினாலேயே நாயன்மார்களுள் ஒரு  வருமானார்.


திண்ணன் கண்தானம் செய்த நிகழ்வு  மகாசிவராத்திரியன்று நடந்தது. திண்ணனின் ஆழ்ந்த பக்தியை வெளி உலகிற்கு உணர்த்த சிவபெருமான் நடத்திக் காட்டிய திருவிளையாடல் அதுவன்றோ!

வேடர் குலத்தைச் சேர்ந்த நாகனார் என்பவரின் மகன் திண்ணன். தமது குல வழக்கப்படி காட்டு விலங்குகளை வேட்டையாடி வந்தார். ஒருநாள் திருக்காளத்தி மலைக்குச் சென்ற திண்ணன் அங்கு சிவலிங்கத்தை கண்டார். அதைப் பார்த்த மாத்திரத்தில் அன்பின் மிகுதியால் லிங்கத்தை ஆரத்தழுவினார். பின்னர் இறைவன் பசியோடு இருப்பாரே! அவருக்கு உணவு படைக்க வேண்டும் என்று விரும்பி        பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து அதை கையில் எடுத்துக் கொண்டார். வாயில் பொன்முகலி ஆற்று நீரையும், தலையில் பூங்கொத்துகளையும் சுமந்து சிவலிங்கம் இருக்கும் இடத்துக்கு வந்தார்.

சிவலிங்கத்தின் மேல் இருந்த பூக்களை தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயில் உள்ள நீரினால் அபிஷேகம் செய்தார். தலையில் இருந்த பூங்கொத்துகளை லிங்கத்தின் தலையில் சூடினார். கையில் இருந்த பன்றி இறைச்சியை நைவேத்தியம் செய்தார். மாலை மறைந்து இருள் சூழ்ந்ததும் கொடிய விலங்குகள் வரும் என நினைத்து வில்லுடன் நின்று காவல் காத்தார்.

காலையில் இறைவனுக்கு சுவையான அமுது படைக்க வேண்டும் என நினைத்து காட்டுக்குள் சென்றார்.

அன்று பகலில் காளத்தி நாதருக்கு பூஜை செய்ய வந்த அர்ச்சகர் அங்கு சிவலிங்கம் முன்பு கிடக்கும் இறைச்சி, எலும்பு போன்றவற்றை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆற்றில் நீராடி பிராயசித்தம் செய்தார். காட்டுக்குள் சென்ற திண்ணன் அங்கு விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து அதில் தேனை பிழிந்து அதை எடுத்துக் கொண்டு வழக்கம்போல் சிவபூஜை செய்தார். மறுநாள் பூஜை செய்ய வந்த அர்ச்சகர் இதைக் கண்ணுற்று இந்த தீயச் செயலை செய்தவர் யாராக இருப்பினும் அவனை கழுவேற்றி விட வேண்டும் என்று ஈசனிடம் முறையிட்டார்.

சிவபெருமான் அர்ச்சகரின் கனவில் தோன்றி, அவர் செயல்கள் அனைத்தும் எனக்கு பிடித்தது. நாளை இரவு ஒரு மரத்தின் மறைவில் இருந்து நடப்பதை கவனித்துக் கொண்டு இரு என்று கூறினார். அதன்படி அர்ச்சகர் அங்கு வந்து மறைந்திருந்தார். திண்ணன் வழக்கம்போல் காட்டுக்குள் சென்று வேட்டையாடிய ஊனமுது சகிதம் வந்து கொண்டு இருந்தார். சிவலிங்கத்தை அடைந்ததும், பெருமானின் கண்ணில் இருந்து ரத்தம் வடிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ரத்தத்தை துடைத்தார். அது நிற்காமல் பெருகிக் கொண்டே இருந்தது.

பின்னர் பெருமானை கட்டிப்பிடித்து கதறி அழுதார். காட்டுக்குள் சென்று பச்சிலையை பறித்து வந்து அதை பெருமானின் கண்ணில் பிழிந்து பார்த்தார். மருந்து பயன் தரவில்லை. உடனே ‘ஊனுக்கு ஊன்’ என்ற மருந்து நினைவுக்கு வர தமது ஒரு கண்ணை தோண்டி ரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் வைத்தார். இறைவனின் திருவருட் கருணையால் ரத்தம் வடிவது நின்றது. சோதனையாக இறைவனின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் பெருகியதைக் கண்டார். ஒரு கணம் கவலையடைந்த அவர் மறு கணமே மருந்து கண்டேன் என்று கூறி, தம் மற்றொரு கண்ணை தோண்ட முயன்றார். கண் அடையாளம் தெரிவதற்காக தன் இடது காலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார். பின்னர் கண்ணை பெயர்த்தெடுக்க அம்பினை ஊன்றினார். அப்போது இறைவன் தோன்றி கண்ணப்ப நிற்க என்று கூறி அவரை தடுத்து நிறுத்தி ஆட்கொண்டார். இந்த அதிசய நிகழ்வை கண்ணுற்ற  அர்ச்சகர் சிவபரம்பொருளின் கருணையை எண்ணி வியந்து போற்றினார். தேவர்கள் வானத்தில் இருந்து பூக்களை தூவி வாழ்த்தினர்.

மகாசிவராத்திரியன்று இந்த அற்புதம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

– செந்தூர் திருமாலன்.


தொடர்புடைய செய்திகள்

1. புராண கதாபாத்திரங்கள்
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம்.
2. இழந்த பதவியை மீட்டுத் தரும் ஆட்சீஸ்வரர்
சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
3. சரயூ நதி
சனாதன் தர்மம் என்பது தனி மனித ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அது மீறப்படும் போதெல்லாம் பகவான் அவதாரம் செய்கிறார்.
4. வெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய வாசீஸ்வரர்
சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன்.
5. கோபத்தை குறைக்கும் ஐராவதேஸ்வரர்
பெருந்தோட்டத்தில் உள்ளது ஐராவதேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள்புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர்.