முகச்சாயல் சொல்லும் சாமுத்ரிகா லட்சணம்


முகச்சாயல் சொல்லும் சாமுத்ரிகா லட்சணம்
x
தினத்தந்தி 16 Feb 2017 11:45 PM GMT (Updated: 16 Feb 2017 10:55 AM GMT)

ஒவ்வொரு நாளும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களை நாம் சந்திக்கின்றோம். சந்தித்த மனிதர்களோடு நாம் பழகுவதற்கும், அவர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கும் முயற்சிக்கின்றோம்.

வ்வொரு நாளும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களை நாம் சந்திக்கின்றோம். சந்தித்த மனிதர்களோடு நாம் பழகுவதற்கும், அவர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கும் முயற்சிக்கின்றோம். மற்றவர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்வது ஒருரகம். பார்த்தவுடன் உருவ அமைப்பைக் கண்டு இவர்கள் இப்படித்தான், இவர்கள் குணம் இப்படித்தான் இருக்கும் என்பதை அறிந்து கொள்வது மற்றொரு ரகம்.

இதில் 2–வது ரகத்திற்கு உறுதுணையாக இருப்பது தான் சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். ஒரு சிலரைப் பார்த்தவுடனேயே காரணம் தெரியாமலேயே அவர்களைப் பிடித்துவிடுகின்றது. சிலரைப் பார்த்தால் பார்த்த உடனேயே வெறுப்புத் தோன்றுகிறது. அவர்களோடு பேசுவதற்கே மனம் வருவதில்லை.

சிலரிடம் வலியச் சென்று நாமே பேசத் தொடங்குகிறோம். உங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று நம்மையறியாமலேயே கேள்விக் கனைகளைத் தொடுக்கத் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் தோற்றப் பொலிவுதான் காரணம் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம்.

அங்க அமைப்புகளை வைத்து ஒருவருடைய எண்ணங்களை யூகிக்க நாம் முயற்சிக்கின்றோம். அந்த யூகம் ஓரளவேணும் சரியாக இருப்பதால்தான், சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தைப் பலரும் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள்.

மனிதர்களின் எல்லா அங்கங்களுக்கும் இந்த சாஸ்திரத்தில் பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த அங்கம் எந்த அளவில் இருந்தால் எந்த மாதிரியான வாழ்க்கை அமையும்? என்ன மாதிரியான குணங்கள் இருக்கும் என்பதை முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லி இருக் கிறார்கள்.

குறிப்பாக மூக்கு நீண்டு இருப்பவர்கள், கிளி மூக்குத் தோற்றத்தில் அமைந்தவர்கள் மிகுந்த புத்திக் கூர்மையுடையவர்களாகவும், ராஜதந்திரி களாகவும் இருப்பார்கள் என்கிறது இந்த சாஸ்திரம்.

ஒருவரது முகத்தை வைத்தே அகத்தை (மனதை) அறிந்துகொள்ளலாம். எனவேதான் ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று சொல்லி வைத்தார்கள். ஒருவரது தலை வட்ட வடிவமாக இருந்தால், அவருக்கு சகல செல்வங்களும் கிடைக்கும். நரம்புகள் புடைத்துக்கொண்டு தென்பட்டால் அவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். உடம்புக்கு ஏற்ற விதத்தில் அளவான தலை இருந்தால் ராஜயோகம் பெற்றவர்களாக விளங்குவர்.

கன்னத்தில் பள்ளம் இருந்தால் பொருள் வளம் பெற்றவராக இருப்பார்கள். அதைப்பார்த்து பணக்குழி விழுகின்றது என்பார்கள். அவர் களுக்கு வாய்த்த பிள்ளைச் செல்வங்களாலும் பெருமைகள் வந்து சேரும்.

ஒருவருடைய முகம் அழகாகவும், பிரகாசமாகவும் இருந்தால், அவருக்கு அரசருக்கு இணையான வாழ்க்கை அமையும். பரந்த முகமாக இருந்தால் யோகியாகும் வாய்ப்பு கிட்டும். நீண்ட முகத்தைப் பெற்றவர்கள் பொருளாதாரப் பற்றாக்குறையில் சிக்கித் தவிப்பார்கள். சதைப்பிடிப்பான முகத்தைப் பெற்றவர்கள் சுகங்களையும், சந்தோ‌ஷங்களையும் அதிகமாக அனுபவிப்பார்கள். ஏறு நெற்றியாக இருந்தால் ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.

இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் பள்ளம் இருக்கக்கூடாது என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். அப்படி இருந்தால் வறுமை தாண்டவ மாடும். இரண்டு புருவங்களும் ஒன்றாக இணைந்திருந்தால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஒன்றை ஒன்று தொடாமல் வில்லைப்போல் வளைந்திருந்தால் பெரிய செல்வந்தர்களாக விளங்குவர்.

நீண்டு அகண்ட பெரிய கண்களை உடையவர்கள் செயல்வீரர் களாகவும், நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் அசகாய சூரர்களாகவும் இருப்பர்.

மூக்கு நீண்டிருந்தால் புத்திக்கூர்மை உடையவர்களாகவும், அறிவாளியாகவும் பிறருக்கு யோசனை சொல்பவர்களாகவும், தந்திரசாலியாகவும் விளங்குவர். வலதுபக்கம் மூக்கு வளைந்திருந்தால், பிறர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ள மாட்டார்கள். சப்பை மூக்கைப் பெற்றவர்கள் எதிலும் ஆர்வம் காட்டமாட்டார்கள். நடப்பது நடக்கட்டும் என்று இருப்பார்கள்.

சிறிய காதுடையவர்கள் மிகுந்த சிக்கனமானவர்கள். தன்னுடைய தேவைகளைக் கூடப்பூர்த்தி செய்யத் தயங்குவார்கள். அகண்ட பெரிய காதுகளை கொண்டவர்கள், கேள்வி ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள். நியாயத்திற்கு குரல் கொடுப்பார்கள். சிறிய வாயைக் கொண்டவர்கள் நிதானமாகச் செயல்படுவர். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துப் பேசுவர். அகன்ற வாயைக் கொண்டவர்கள் எதையும் சிந்திக்காமல் பேசுவர். தான் எடுத்த முடிவே சரியானது என்று வாதிடுவார்கள்.

தாடையில் பள்ளம் இருந்தால், இருகூறாகக் காட்சி தந்தால் அவர்களுக்குப் பொதுநல ஈடுபாடு இருக்கும். பதவிகள் தேடிவரும். வாழ்வின் மையப் பகுதியிலிருந்து வருமானம் குவியத் தொடங்கும்.

இப்படி முக அமைப்பைக் கொண்டே முக்கிய குண நலன்களை நாம் அறிந்துகொள்ளலாம். இது போல் அனைத்து அங்கங்களுக்கும் முன்னோர்கள் அனுபவத்தின் வாயிலாக பலன்களை வழங்கியிருப்பது ஆச்சரியமளிக்கிறது அல்லவா?

–சிவல்புரி சிங்காரம்.

Next Story