ஆன்மிகம்

ஆதிசே‌ஷன் வழிபட்ட சிவராத்திரி தலங்கள் + "||" + Adisesha Worshiping Shivaratri places

ஆதிசே‌ஷன் வழிபட்ட சிவராத்திரி தலங்கள்

ஆதிசே‌ஷன் வழிபட்ட சிவராத்திரி தலங்கள்
நாகங்களின் தலைவனான ஆதிசே‌ஷன் தனது ஆயிரம் தலைகளால் பூமியை தாங்கிக்கொண்டு இருப்பவர்.
நாகங்களின் தலைவனான ஆதிசே‌ஷன் தனது ஆயிரம் தலைகளால் பூமியை தாங்கிக்கொண்டு இருப்பவர். எப்போதும் அவர் பூமியை தாங்கிக்கொண்டு இருந்ததால் தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தார். இதனால் உடல்சோர்வு ஏற்பட்டு அதனை நீக்கி வலிமை பெறக் கருதி சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். அதைக்கேட்ட சிவபெருமான்,  ஆதிசே‌ஷனை சோழநாட்டில் காவிரிநதி ஓடும் சிவாலயங்களுக்கு சென்று வழிபடும் படி கூறினார். அதன்படி ஆதிசே‌ஷன்  பல தலங்களையும் தரிசித்து இறுதியாக கும்பகோணம் வந்தார்.

ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு  மேலும்,  பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையையும்,வேறு பல நலன்களையும் வழங்கினார்.

இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தால் உடலில் உள்ள எல்லா வியாதிகளும் நீங்கும் என்றும் , சர்ப்பதோ‌ஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோவில் நாக தோ‌ஷ பரிகார தலமாகும். சுவாமி பெயர் நாகேஸ்வரர். அம்பாள் நாமம் பெரியநாயகி அம்மன், சூரியன் வழிபட்டதால் பாஸ்கரஷேத்திரம் என்றும், பிரளயகாலத்தில் கும்பத்தில் இருந்து வில்வம் விழுந்த இடத்தில் பெருமான் தோன்றியதால் வில்வ வனம் என்றும்  வழங்கப்படுகின்றன.

திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில் கும்பகோணத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது நவக்கிரகங்களில் ராகு தலமாகும். ராகு பகவான் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவராத்திரியன்று முதல் காலத்தில் பூஜித்த தலம். கோவில் வெளிப்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் ராகு பகவான் தன் இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் பெயர் நாகேஸ்வரர். இறைவியின் நாமம் பிறையணியம்மன்.

திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்சில் செல்பவர்கள் திருநள்ளாறு செல்லும் சாலையில் திருநாகேஸ்வரம், திருநீலக்குடி வழியாக 1 மணி நேரம் பயணித்தால் திருப்பாம்புரத்தை அடையலாம். நாகூர் நாகநாதர் கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. சுவாமி பெயர் நாகநாதர். அம்பாள் நாமம் நாகவல்லி.

–உவரி லிங்கம்