சிவ பூஜையில் தாழம்பூ


சிவ பூஜையில் தாழம்பூ
x
தினத்தந்தி 21 Feb 2017 7:56 AM GMT (Updated: 21 Feb 2017 7:56 AM GMT)

பிரம்மனுக்கும், விஷ்ணுக்கும் யார் பெரியவர்? என்ற போட்டி நிலவிய போது, அடிமுடி காண முடியாதபடி ஜோதி பிழம்பாக மாறி நின்றார் சிவபெருமான்.

பிரம்மனுக்கும், விஷ்ணுக்கும் யார் பெரியவர்? என்ற போட்டி நிலவிய போது, அடிமுடி காண முடியாதபடி ஜோதி பிழம்பாக மாறி நின்றார் சிவபெருமான். ‘இருவரில் யார் என்னுடைய அடியையோ, முடியையோ முதலில் கண்டு வருகிறீர்களோ? அவரே பெரியவர்’ என்று ஈசன் கூறியதை அடுத்து, பிரம்மன் அன்னப் பறவை வடிவம் கொண்டு முடியைக் காணவும், விஷ்ணு, வராக வடிவம் கொண்டு அடியைக் காணவும் விரைந்து சென்றனர். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இருவராலும் அடியையோ, முடியையோ காண முடியவில்லை. அப்போது பிரம்மதேவன், சிவபெருமானின் தலையில் இருந்து கீழே வந்து கொண்டிருந்த தாழம்பூவிடம், தான் ஈசனின் முடியைக் கண்டுவிட்டதாக பொய் சாட்சி கூறும்படி கேட்டுக்கொண்டார். அதன்படியே தாழம்பூவும் பொய்சாட்சி கூறியது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனுக்கு பூலோகத்தில் வழிபாடு நடைபெறாது என்றும், தாழம்பூவை என்னுடைய பூஜையில் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் சாபம் கொடுத்தார்.

சாபத்தைக் கேட்டு தெளிவு பெற்ற தாழம்பூ, சிவபெருமானை வேண்டி தவம் இருந்தது. இதையடுத்து மகா சிவராத்திரி அன்று வரும் மூன்றாம் ஜாமத்தில் மட்டும் தாழம்பூவை பூஜையில் ஏற்றுக்கொள்வதாக சிவபெருமான் கூறினார். அதன்படி மகா சிவராத்திரியில் வரும் மூன்றாம் கால பூஜையில், ஈசனுக்கு தாழம்பூவால் அலங்காரம் செய்யப்படுகிறது.

இந்த புராண நிகழ்வை உணர்த்தும் வகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூலவர் சன்னிதிக்குப் பின்புறம் லிங்கோத்பவருக்கு மகா சிவராத்திரி 3–ம் ஜாமத்தில் தாழம்பூவை வைத்து சிறப்புப் பூஜைகள் செய்வது வழக்கம்.

Next Story