ஆன்மிகம்

வாழ்வை வளமாக்கும் நற்குணங்கள் + "||" + To enrich the lives Good qualities

வாழ்வை வளமாக்கும் நற்குணங்கள்

வாழ்வை வளமாக்கும் நற்குணங்கள்
‘‘உங்களில் நற்குணமுள்ளவர் தான் ‘ஈமான்’ எனும் இறைவிசுவாசத்தில் பூரணமானவர்’’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
‘‘உங்களில் நற்குணமுள்ளவர் தான் ‘ஈமான்’ எனும் இறைவிசுவாசத்தில் பூரணமானவர்’’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். 

மனிதர்கள் அனைவரும் ஒரே ஆன்மாவில் இருந்து தான் படைக்கப்பட்டவர்கள். அவர்களிடையே பணம், பதவி போன்றவற்றில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம். அதை அடிப் படையாக கொண்டு வலியவர்கள் மெலியவர்களை இளக்காரமாக நினைப்பதும், மெலியவர்கள் வலியவர்களை ஏளனமாக நினைப்பதும் கேலி, கிண்டல் செய்வதும் தவறாகும். 

இதையே பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றன:

‘மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணில் இருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர், உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் முற்றும்) தெரிந்தவன்’ (49:13).

‘‘முமின்களே! ஒரு சமூகத்தார் பிற சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப்பெயர் சூட்டுவது மிகக்கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (49:11)

‘‘எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன; அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. (16:34)

நபிகள் நாயகம் வருவதற்கு முன் இவ்வுலகிற்கு பல்வேறு இறைத்தூதர்கள் வந்தார்கள். அவர்கள் அனைவருமே ‘ஓரிறைவனைத்தான் வணங்க வேண்டும்; தவறினால் இறை வேதனை உங்கள் மீது இறங்கும்’ என எச்சரித்தார்கள். 

அப்போது அவர்கள் ‘அப்படி ஒன்றும் நடக்காது’ என்று இறைத்தூதர்களையும், இறை வேதனையையும் கேலி, கிண்டல் செய்தார்கள். அதனால் தான்அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று மேலே உள்ள வசனம் அழுத்தமாகச் சொல்லிக்காட்டுகிறது. அப்படியானால் கேலியும், கிண்டலும் எந்த அளவுக்கு மோசமானவை என்பதை நாம் நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.

சக மனிதனை கேலி செய்வது என்பது இறைவனின் படைப்பை கேலிசெய்வது போன்றதாகும். அதிலும் நம்மை விட மேம்பட்ட இறைத்தூதுவர்களை கேலி செய்வது என்பது மிகவும் தீய செயலன்றோ..? இதனால் தான் அவர் பேரழிவுகளுக்கு ஆளானார்கள் என்பதை என்றும் நாம் மறந்து விடக்கூடாது. 

‘தமாஷ்’ என்பது வேறு, ‘கேலி’ என்பது வேறு. இரண்டையும் போட்டு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நமக்கு முன் உள்ள பிரச்சினையே இதுதான். நாம் விளையாட்டாக பேசும் ஒரு பேச்சு அல்லது ஒரு செயல் இறுதியில் அது வினையாய் முடிந்து விடுவது தான் ஆபத்து. 

எனவே எப்போதும் நாம் நமது சொல், செயல் களில் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

பின்வரும் திருக்குர்ஆன் வசனம் இதையே மெய்ப்படுத்துகிறது:

‘ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்’ (33:70).

அதாவது சரியான, முறையான, கேலி இல்லாத, வஞ்சகமில்லாத சொல்லை சொல்லுங்கள் என்று இதன் பொருள் விரிந்து கொண்டே செல்லும். 

சக சகோதரனை நாம் ஏன் கேலி செய்ய வேண்டும்? நாம் என்றாவது ஒரு நாள் பிறரால் கேலி செய்யப்படமாட்டோமா என்ன? 

‘ஆதாமின் பிள்ளைகளை நாம் கண்ணியப்படுத்தி வைத்துள்ளோம்’ என்று திருக்குர்ஆன் (17:70) குறிப்பிடுவதை நாம் மறக்கலாமா? 

இங்கு ‘மனிதன்’ என்று பொதுத்தன்மையுடன் தானே இறைவசனம் குறிப்பிடுகிறது. இந்நிலையில் இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்ட மனிதனை கேலி, கிண்டல் செய்வது முறையா?

கேலி செய்வது என்பது நல்லோர்களின் நற்பண்பல்ல. ஒரு வேளை நாம் பிறரின் கேலிக்கு ஆளானால் கூட அடுத்தவர்களை ஒருபோதும் நாம் கேலிசெய்ய முற்படக்கூடாது. ஆண்டவனுக்காக அதை மன்னித்து, மறந்து விடவேண்டும். 

இன்றைக்கு நம்மில் பலர் பிறரின் குற்றங்களை மன்னிக் கிறார்கள். ஆனால் அவைகளை மறப்பதேயில்லை. நாம் பிறர் குறைகளை மன்னித்தால் மட்டும் போதாது அவற்றை முழுமனதுடன் மறந்தால் தான் அவை முழுமை பெறும். 

நபிகள் நாயகமும் அவரை பின்பற்றி வந்த நபித்தோழர்களும், இதர இறைநேசச் செல்வர்களும் இப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள். 

ஆனால் இன்றைக்கு நமது புனித இதயங்களில் எவ்வளவு கூர்முட்கள் மறக்கமுடியாத நிலையில் நம்மை தினம் தினம் குத்திக்கொண்டிருக்கின்றன..? அவை மறக்கமுடியாதவை என்பதல்ல... நாம் அவற்றை மறக்க முற்படுவதில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது; வேதனைக்குரியது.

‘நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் நீங்கள் நடத்தப் படுவீர்கள்’ என்பது அரேபியப் பழமொழி.

நாம் பிறரை மதித்து நடந்தால் நாம் பிறரால் நிச்சயம் மதிக்கப்படுவோம். நாம் பிறரை கேலி செய்தால் நிச்சயம் நாமும் பிறரால் கேலி செய்யப்படுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

நாம் எப்போதும் மதிக்கப்படவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அடுத்தவர்களை நாம் அறவே மதிப்பதில்லை. பிறகு எப்படி நமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்?. குறைந்த பட்சம் நாம் அடுத்தவர்களை மதிக்காவிட்டாலும் கூட அடுத்தவர்களை கேலி, கிண்டல் செய்யாமல் இருக்கலாமே. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது என்றும் நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாத நன்மொழி என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது என்றைக்கும் நல்லது.

வாருங்கள், அனைத்தையும் மறப்போம், அனைவரையும் மதிப்போம். நற்குணங்களுடன் வாழ்ந்து நலமான, வளமான வாழ்க்கையைப்பெறுவோம்.

மவுலவி எஸ்.என்.ஆர்.‌ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு–3.