மணப்பேறு அருளும் முனுகப்பட்டு பச்சையம்மன்


மணப்பேறு அருளும் முனுகப்பட்டு பச்சையம்மன்
x
தினத்தந்தி 28 Feb 2017 1:30 AM GMT (Updated: 27 Feb 2017 12:39 PM GMT)

உலகெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயங்களுக்கு பிரதான ஆலயம், சிவபெருமான் மனித வடிவம் கொண்ட கோவில், அன்னை பார்வதி வாழைப்பந்தல் அமைத்து வரம் பெற்ற பூமி.

லகெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயங்களுக்கு பிரதான ஆலயம், சிவபெருமான் மனித வடிவம் கொண்ட கோவில், அன்னை பார்வதி வாழைப்பந்தல் அமைத்து வரம் பெற்ற பூமி, சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குகிறது, முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம்.

புராணக் கதை

சிவபெருமானின் தீவிர பக்தரான பிருங்கி முனிவர், சிவனைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்காதவர். ஒருசமயம் சிவனும், பார்வதியும் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் காட்சி தந்த வேளையில், அங்கு வந்த பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு, சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார்.

இதைக் கண்டு மனம் வருந்திய பார்வதி, ‘ஐயனே! முற்றும் அறிந்த முனிவரே இப்படிச் செய்வது எந்த வகையில் நியாயம்? இனியும் இப்படி நிகழாமல் இருக்க தங்களின் உடலில் சரி பாதியை எனக்குத் தந்தருளுங்கள்’, என்று ஈசனை வேண்டினார். அதற்குச் சிவபெருமான்உடனே செவிமடுக்கவில்லை.

அன்னைக்கு ஒரு யோசனை தோன்றியது. கடும் தவம் இருந்தால், இவரிடம் வேண்டிய வரத்தினைப் பெறலாம் என்று முடிவு செய்து தவமிருக்கும் இடம் தேடி பூமிக்கு வந்தாள். அப்போது அன்னைக்குப் பிடித்த இடமாகத் தோன்றியது, வாழை மரங்கள் நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த இன்றைய முனுகப்பட்டு.

அன்னை அங்கேயே வாழை மரங்களால் பந்தல் அமைத்து தவமிருக்க முடிவு செய்தாள். லிங்கம் அமைக்க, தவமிருக்க தண்ணீர் தேவைப்பட்டது. உடனே தன் புதல்வர்களான விநாயகரையும், முருகனையும் தண்ணீர் கொண்டுவரப் பணித்தாள். அதன்படி விநாயகர் சற்றுத் தொலைவில் உள்ள மலையில் முனிவர் தவமிருப்பதையும், அவர் அருகே கமண்டலத்தில் நீர் இருப்பதையும் அறிந்து, அதனைத் தன் வாகனமான மூஞ்சுறுவின் உதவியால் கவிழ்த்தார். கமண்டல நீர், கமண்டல நாக நதியாகி, அன்னை தவம் இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தது.

முருகப்பெருமான் தொலைவில் உள்ள மலை மீது தன் வேலைப் பாய்ச்சி நீர் வரச்செய்து ஆறாக்கியதால், அது சேயாறு ஆனது. இதற்குள் அன்னை தன் பிரம்பினை பூமியில் அடித்து நீர் வரச் செய்தாள். அது பிரம்பக நதி என்று பெயர் பெற்றது. இந்த மூன்று நதிகளும் ஒன்று சேரும் ஊரான முனுகப்பட்டில் அமைந்த இடத்தை முக்கூட்டு என்றும், இங்குள்ள சிவனை ‘முக்கூட்டு சிவன்’ என்றும் அழைக்கின்றனர்.

அன்னையின் தவத்தினைக் கலைக்க அசுரர்கள் சிலர் முயன்றனர். இதனை முறியடிக்க சிவன் வாழ்முனியாகவும், விஷ்ணு செம்முனியாகவும் அவதாரம் எடுத்து அன்னையின் தவம் நிறைவுபெற உதவினர். இதன்பின் திருவண்ணாமலையில், அன்னை சிவபெருமானிடம் சரிபாதி உடலைப் பெற்றாள் என தலபுராணம் கூறுகிறது.

ஆலய அமைப்பு

ஆரணி – செய்யாறு சாலையின் ஓரத்தில், கமண்டல நாகநதியின் தெற்கே, பச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி ஆலயம் அமைந்துள்ளது. சாலையின் கீழ்ப்புறம் வாழ்முனி, செம்முனி, குதிரை வடிவங்கள் பெரிய வடிவில் அமைந்துள்ளன. இங்கு பில்லி, சூனியம், கண் திருஷ்டி, சொத்துப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காலில் எலுமிச்சை பழத்தை நசுக்கி, எதிரில் உள்ள முனிகளுக்கு நடுவில் உள்ள கருங்கல்லில், தேங்காயை வீசி சிதறச் செய்கின்றனர். இதனால், அனைத்துப் பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சாலையின் மேற்புறம் பச்சையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சிறிய ராஜகோபுர வாசலில் அமைந்துள்ளது. இந்திரனும், எதிரே உள்ள பாறையில் இரட்டை தந்தங்கள் கொண்ட ஐராவதம், ஈசான்ய மூர்த்தி, நந்தி வடிவங்கள் பெரிய அளவில் அமைந்துள்ளன. அடிவாரத்தில் சிறிய விநாயகர் சன்னிதி தெற்கு முகமாய் உள்ளது.

இடதுபுறமாக வலம் வந்தால் அக்னி மூலை எனும் தென்கிழக்கில் அக்னி முனியான அக்னி பகவானும், அதனையடுத்து நவக்கிரகங்களாக நவ முனிகளும், அஷ்டதிக்கு பாலகர்கள் எனும் அஷ்ட முனிகளும், சப்தரிஷிகள் எனும் சப்தமுனிகளும் மேற்கு, வடக்குமுகமாய் பிரம்மாண்ட வடிவில் கம்பீரமாய்க் காட்சி தருகின்றனர்.

வலமாக வரும் போது மன்னார்சாமி சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சிவபெருமானை லிங்க வடிவிற்கு பதிலாக மனித வடிவில் சிலா ரூபத்தில் காண முடிவது சிறப்பானது. இறைவன் நான்கு கரங்களோடு, கீழ் வலது கரத்தில் சூலம், கீழ்இடது கரத்தில் கபாலம், மேல் வலது கரத்தில் மழு, மேல் இடது கரத்தில் மான் தாங்கியுள்ளார். இவரே மன்னார் ஈஸ்வரன் எனும் மன்னார்சாமி ஆவார்.

இவரையடுத்து நடுநாயகமாக பச்சையம்மன் சன்னிதி இருக்  கிறது. அன்னை பச்சையம்மன், கருவறை முன் மண்டபத்தில் சப்தமாதர்கள்,  விநாயகர், முருகனும் வாசலின் இருபுறமும் காட்சி தருகின்றனர். இந்த ஆலயத்தின் துவாரபாலகர்களாக, வலதுபுறம் சிவபெருமானும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் காட்சி தருவது அபூர்வ அமைப்பாகும்.

இதனைக் கடந்து கருவறையில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இரு பச்சையம்மன் காட்சி தருகின்றனர். நின்ற        அம்மன் கற்சிலையாகவும், அமர்ந்த அம்மன் சுதைவடிவிலும் அமைந்துள்ளது. அன்னையின் கீழ் வலது கரம் பிரம்பையும், கீழ் இடது கரம் கபாலத்தையும், மேல் வலது கரம் அங்குசத்தையும், மேல் இடது கரம் பாசத்தையும் தாங்கி அருள்கின்றது. இரண்டு அம்மன்களுக்கும் அலங்காரம், தீபாராதனை நடத்தப்படுகிறது. ஆனால் நின்ற கோலத்தில் இருக்கும் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

இவ்வாலயத்தின் தலமரம் வெப்பாலை. தலத் தீர்த்தம் கோவிலுக்கு வடக்கே ஓடும் செய்யாறு ஆகும். இவ்வாலயம் இந்து சமய அறநிலையத் துறையை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

விழாக்கள்


பச்சை அம்மன் ஆலயம், அம்மன் ஆலயமாக இருந்தாலும், இங்குள்ள மன்னார்சாமியே பிரதானமாகத் திகழ்கிறார். இதனால் அம்மனுக்கு திங்கட்கிழமையே உகந்த நாளாக போற்றப்படுகிறது. இது தவிர ஞாயிற்றுக்கிழமையிலும் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

பிரமோற்சவம் எனும் பெருந்திருவிழா ஆடி மற்றும் ஆவணியில் வரும் முதல் இருவார திங்கட்கிழமைகளைச் சேர்த்து ஆறு திங்கட்கிழமைகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 7–வது திங்கட்கிழமையன்று அம்மன் திரு வீதியுலா நடைபெறும். பிரசாதமாக வேப்பிலையும், பச்சை நிற குங்குமமும் வழங்கப்படுகிறது.

எண்ணற்ற குடும்பங்களுக்கு முனுகப்பட்டு பச்சையம்மன் குலதெய்வமாக விளங்குகின்றது. இந்த அம்மன், மணப்பேறு,  மகப்பேறு வழங்கும் தெய்வமாக விளங்குவது தனிச்சிறப்பு. மகப்பேறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் 5 அல்லது 7–வது மாதத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபட்டுச் செல்கின்றனர். உலகமெங்கும் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயங்களுக்குப் பிரதான ஆலயம் மற்றும் ஆதி ஆலயம்  முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இடைப்பட்ட நேரங்களில் நடை அடைக்கப்படாது.

அமைவிடம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில், செய்யாறு, கமண்டலநதி, பிரம்பகநதி என மூன்றும் ஒன்றுசேரும் முக்கூடல் எனும் முக்கூட்டில் அமைந்த தலம் முனுகப்பட்டு. ஆரணியில் இருந்து கிழக்கே 11 கி.மீ., செய்யாறு நகரில் இருந்து மேற்கே 20 கி.மீ., ஆற்காட்டில் இருந்து தெற்கே 35 கி.மீ., சென்னையிலிருந்து தென்மேற்கே 140 கி.மீ., தொலைவில், ஆரணி – செய்யாறு வழித் தடத்தில், முனுகப்பட்டு அமைந்துள்ளது.

– பனையபுரம் அதியமான்.

பச்சை நிறமாக மாறிய அன்னை

தவம் புரியவும், லிங்கம் வடிக்கவும் தண்ணீர் தேடினார் அன்னை பார்வதி தேவி. ஆனால் தண்ணீர் உடனடியாக கிடைக்கவில்லை. இதனால் தவித்துப் போன அன்னையின் உடல் கோபத்தால் சிவந்த மேனியாக மாறியது. பிறகு தன்னுடைய பிள்ளைகளின் முயற்சியாலும், தன்னுடைய முயற்சியாலும் மூன்று நதிகள் தோன்றியதில், அன்னையின் உள்ளம் குளிர்ந்தது. இதையடுத்து சாந்தமாக தவம் இயற்றத் தொடங்கிய அன்னையின் மேனி பச்சை நிறமாக மாறியதாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால்தான் இத்தல தேவி பச்சையம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இத்தல இறைவன் மண்ணால் உருவானவர் என்பதால், ஈசனுக்கு ‘மண் லிங்கேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. இந்த பெயர் மருவி தற்போது ‘மன்னார்சாமி’ என்ற பெயர் நிலைத்து விட்டது.

Next Story