மதுரையில் சுழலும் லிங்கம்!


மதுரையில் சுழலும் லிங்கம்!
x
தினத்தந்தி 28 Feb 2017 2:00 AM GMT (Updated: 27 Feb 2017 1:14 PM GMT)

இறைவன் தூணில் இருப்பார், துரும்பிலும் இருப்பார். அவன் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை என்கிறது புராணங்களும், இதிகாசங்களும். ஒருசமயம் அவ்வையார், சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் சென்றார்.

றைவன் தூணில் இருப்பார், துரும்பிலும் இருப்பார். அவன் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை என்கிறது புராணங்களும், இதிகாசங்களும். ஒருசமயம் அவ்வையார், சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதி தேவிக்கு கோபம் வந்துவிட்டது.

அவர், ‘அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போல் உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள்’ என்றாள்.

இதைக்கேட்ட அவ்வை சிரித்தார். பின்னர், ‘தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து கால் நீட்டுவதா?          அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள். அந்த திசை நோக்கியே என்னுடைய காலை நீட்டிக்கொள்கிறேன்’ என்றார்.

அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது.

இதே போல் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமான ஓவியம் ஒன்று, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தீட்டப்பட்டிருக்கிறது. மீனாட்சி அம்மன் சன்னிதியில் இருந்து, சுந்தரேஸ்வரர் சன்னிதிக்குச் செல்லும் வழியில் இரண்டாம் பிரகாரத்தின் மேற்கூரையில் இந்த ஓவியத்தைக் காணலாம். பேரொளியுடன் கூடிய ஒரு வடத்தின் மத்தியில், சிவலிங்கம் ஒன்று இருப்பது போல் அமைந்த ஓவியம் அது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.

இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், அந்த லிங்கத்தின் ஆவுடை (பீடம்) நம்மை நோக்கி இருப்பது போல் தோன்றும் என்பதே இதன் சிறப்பு. கிழக்கு நோக்கி நின்றால் நம் பக்கம் ஆவுடை திரும்பும். மேற்கே சென்றால் அங்கு வந்து நிற்பது போல் இருக்கும். நேர் எதிரில் நின்றால் அந்த திசையில், என எல்லா பக்கமும் தோன்றும் வகையில் இந்த ஓவியம் தீட்டப்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஓவியத்தை ‘சுழலும் சிவலிங்கம்’ என்று அழைக்கிறார்கள்.

முதலில் பிரகார வலம்

பொதுவாக ஆலயங்களுக்குச் செல்லும் பலரும், கருவறையில் உள்ள இறைவனை வணங்கிய பிறகுதான் பிரகாரத்தை வலம் வருகிறார்கள். ஆனால் அப்படிச் செய்வது சரியான வழிபாட்டு முறை அல்ல. எப்போதும் கோவில் பிரகாரத்தை வலம் வந்த பிறகே, கருவறைக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. அது யாதெனில், நாம் ஆலயங்களுக்குச் செல்வது இறைவனை வழிபடுவதற்காகவே. அந்தச் சிந்தனை நம் மனதை விட்டு அகலாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரகாரங்களைச் சுற்றி வரும் போது, அடுத்ததாக இறைவனை வணங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நம் நெஞ்சில் நிறைந்திருக்கும். இறைவனை வழிபட்டு விட்டு, பிரகாரத்தை வலம் வரும் போது நமது மனம் சற்று நிலைதடுமாறி வேறு பக்கம் திரும்பிப் போய்விடக் கூடும். இந்த உலகில் எங்கே சுற்றினாலும் இறுதியில் அடையப்போவது இறைவனின் சன்னிதியையே என்பதை குறிக்கும் விதமாகவும், பிரகாரத்தைச் சுற்றிய பிறகு இறுதியாக இறைவனை வழிபட வேண்டும் என்ற முறையை முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

Next Story