கீதையின் பொருள்


கீதையின் பொருள்
x
தினத்தந்தி 28 Feb 2017 2:00 AM GMT (Updated: 27 Feb 2017 1:19 PM GMT)

பகவத்கீதையை ‘பகவத்கீதா’ என்று சொல்வதும் வழக்கம். ‘பகவத்’ என்றால் இறைவன். ‘கீதா’ என்றால் நல்ல உபதேசம் என்று அர்த்தம்.

கவத்கீதையை ‘பகவத்கீதா’ என்று சொல்வதும் வழக்கம். ‘பகவத்’ என்றால் இறைவன். ‘கீதா’ என்றால் நல்ல உபதேசம் என்று அர்த்தம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ‘கீதா’ என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது ‘தாகீ’ என்று மாறும். ‘தாகீ’ என்றால் ‘தியாகம்’ என்று பொருள் கொள்ளலாம். வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். ‘துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்’ என்பதும் கீதைக்குரிய ஆழமான பொருளாகும். குருஷேத்திர போரின் போது, அர்ச்சுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கி நின்றான். அப்போது தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள்.

விஷ்ணு துர்க்கை

மகி‌ஷன் என்ற அரக்கனை வதம் செய்த துர்க்கை ரத்த வெறியில் பிரமையுடன் திளைத்த போது, இங்குள்ள இறைவன் மாணிக்க வண்ணரால் அவளது ரத்தப் பிரமை நீக்கப் பெற்றது. வேண்டுபவர்களுக்கு வேண்டுவதை அருளும் வண்ணம் இங்குள்ள  துர்க்கை அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.

தேவக் கோட்டத்தின் தென் திசையில் உள்ள இந்த துர்க்கைக்கு தனியாக ஒரு சன்னிதியே உள்ளது. இந்த துர்க்கையை வழிபடுவோருக்கு நவக்கிரக தோ‌ஷம் நீங்குவதுடன், பில்லி, சூன்யம், சித்தபிரமையும் நீங்குவது நிஜம்.

இந்த துர்க்கையை பிரார்த்தனை செய்தால் பிரம்மஹத்தி தோ‌ஷம் விலகுவது உண்மை என சொல்கின்றனர் பக்தர்கள். திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைந்து திருமணம் நடக்கவும், குழந்தை பேறு வேண்டி பெண்களும் இந்த துர்க்கையை வேண்டிக் கொள்கின்றனர். இப்படி வேண்டிக் கொள்ளும் பெண்கள் தங்களது வயது எண்ணிக்கையில் தீபமேற்றி, துர்க்கைக்கு அபிஷேகம் செய்து, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், பழம், பூ, நாணயம் இவைகளை கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் தானம் கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய துர்க்கைக்கு நன்றி கூறி மகிழ்கின்றனர். ஆலயத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இது ஆலயத்தின் எதிரே உள்ளது.

பில்லி, சூன்யம் பாதிப்பு உள்ளவர்களை துர்க்கைக்கு எதிரே சன்னிதியில் அமரச்செய்து, கடம் வைத்து பூஜை செய்து, அந்த தண்ணீரை அவர்களுக்கு அபிஷேகம் செய்ய, பிணி கண்டவர்கள் குணமாகும் காட்சி நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சி. 7 தினங்கள் தொடர்ந்து துர்க்கைக்கு அர்ச்சனை செய்து, 7–ம் நாள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புதுப்புடவை  சாத்தினால் பிரம்மஹத்தி தோ‌ஷம் விலகும் என நம்புகின்றனர் பக்தர்கள். இந்த துர்க்கைக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் நடைபெறும் ராகு கால பூஜைக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

அர்ச்சுனன் தாகம் தீர்த்த தலம்

அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை வந்தபோது தாகமெடுத்தது. எங்கு நோக்கினும் நீர் இருக்கும் அறிகுறியே இல்லை. தாகத்தால் தவிக்க அர்ச்சுனன் இறைவனை வேண்ட, இறைவன் அவனிடம் ஒரு தண்டைக் கொடுத்தார். ‘இதை நீ எங்கு ஊன்றுகிறாயோ, அங்கே நீர் வரும்’ என இறைவன் கூற, அர்ச்சுனன் தன் கையிலிருந்த வாளை வாகை மரத்தடியில் வைத்துவிட்டு, சற்று தொலைவு சென்று தண்டை ஊன்ற, ஊன்றிய இடத்தில் நீர் பெருக்கெடுத்தது. அந்த இடம் தண்ட தீர்த்தம் என அழைக்கப்பட்டு தற்போது குமிழிக் குளமென அழைக்கப்படுகிறது.

தனது தாகம் தீர்ந்து, வாகை மரத்தடிக்கு திரும்பினான் அர்ச்சுனன். அவனது வாளை மண்புற்று மறைத்திருந்தது. தனது வாளை எடுக்க முயன்ற அர்ச்சுனனை வாசுகி தடுத்தது. அர்ச்சுனன் மாணிக்க வண்ணரை வேண்ட, வாசுகி விலகியது. அர்ச்சுனன் வாளை எடுத்துச் சென்றான். எனவே, இந்த ஊரின் ஆதி பெயர் ‘திருவாள் ஒளி புத்தூர்’ என்பதாக இருந்தது. அது காலப்போக்கில் மருவி திருவாளப்புத்தூர் என்றாகி விட்டது.

Next Story