‘உங்கள் குடும்ப வாழ்க்கையை கர்த்தர் ஆசீர்வதிப்பார்’


‘உங்கள் குடும்ப வாழ்க்கையை கர்த்தர்  ஆசீர்வதிப்பார்’
x
தினத்தந்தி 3 March 2017 12:15 AM GMT (Updated: 2 March 2017 12:28 PM GMT)

உலக வாழ்வில் தேவன் உங்களுக்குக் கொடுத்த பெரிய ஆசீர்வாதம் குடும்பம்.

லக வாழ்வில் தேவன் உங்களுக்குக் கொடுத்த பெரிய ஆசீர்வாதம் குடும்பம். கர்த்தருடைய பரிபூரணமான ஆசீர்வாதங்களைக் காணக்கூடிய மிக முக்கியமான இடம் குடும்பம் தான்.

இக்கடைசி நாட்களில் சத்துரு தனக்கு கொஞ்ச நாட்கள் தான் உண்டு என அறிந்து, தந்திரமாக அநேக குடும்பங்களை உடைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிவோம்.

அவனுடைய தந்திரங்களை எதிர்த்துப் போராடுகிற முதல் ஆயுதம் வசனம். இரண்டாவது ஆயுதம் ஜெபம். ஜெபத்தோடு இச்செய்தியை வாசியுங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

‘‘அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே’’ (2.கொரி. 2:11).

‘புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள், புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப் போடுகிறாள்’ (நீதி 14:1).

கர்த்தருக்குப் பயப்படுங்கள்


‘சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்’ (நீதி 31:30).

உங்களுடைய குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதற்கு முதல்படி கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் தான். ஒவ்வொரு சின்ன காரியத்திலும் ஆண்டவரை உங்களுக்கு முன்பாக நிறுத்தி அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி பண்ணுங்கள். அவரிடத்தில் அனைத்து காரியங்களுக்காகவும் விசாரியுங்கள். கர்த்தர் உணர்த்துகிறதை நிறைவேற்ற ஆர்வம் கொள்ளுங்கள். இதுவே கர்த்தருக்குப் பயப்படும் பயம்.

ஏற்ற துணை என அறியுங்கள்

‘மனு‌ஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்’ (ஆதி 2:18) என்று நம் அருமை ஆண்டவர் ஆதாமுக்கு ஏற்ற துணையாக ஏவாளை உருவாக்கினார்.     

அன்பான சகோதரிகளே! உங்கள் கணவருக்கு ஏற்ற துணை நீங்கள் தான் என அறிந்து கர்த்தரை அதிகமாகத் துதியுங்கள். உங்கள் கணவரை அதிகமாக கனம் பண்ணுங்கள். ஆண்டவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.

கீழ்ப்படியுங்கள்

‘மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்தப் புரு‌ஷருக்குங் கீழ்ப்படியுங்கள்’ (எபே 5:2).

திருமணத்திற்கு முன்பு நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை வேறு. திருமணத்திற்குப் பிறகு வாழ்கிற வாழ்க்கை வேறு. நீங்கள் திருமணமாகி வந்திருக்கிற வீடு உங்களுடைய வீடு என்கிற இருதயம் எப்போதும் இருக்கவேண்டும்.

வேதம் சொல்லுகிறது ‘‘... உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்’’ (சங்.45:10,11)

இதுதான் தேவனுடைய ஆலோசனை. ஒவ்வொரு காரியத்திலும் உங்களுக்கு இவ்வுலகத்தில் ஆசீர்வாதமாய் கொடுத்துள்ள உங்கள் அன்புக்கணவருக்குக் கீழ்ப்படிவதைத் தான் வேதம் முக்கியத்துவப்படுத்துகிறது.

அதேவேளையில் உங்களை வளர்த்து, இம்மட்டும் நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பதற்கு காரணமாயிருந்த உங்கள் பெற்றோரை விட்டுவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. அவர் களுக்காக ஜெபிக்கவும், சந்திக்கவும் தடையில்லாமல் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். அதே வேளையில் கணவருக்கு எல்லா காரியத்திலும் நீங்கள் கீழ்ப்படிவதுதான் தேவனின் கட்டளை. அப்போது உங்கள் குடும்ப வாழ்க்கை கர்த்தருக்குள் சந்தோ‌ஷமாகவும், சமாதானமாகவும் அமைவது நிச்சயம்.

தேவன் விரும்புகிற நடக்கை

உங்கள் திருமண வாழ்வு கசப்பாக இருக்கலாம். அல்லது கசந்து போயிருக்கலாம். தயவு செய்து சோர்ந்து போகாதீர்கள். உங்கள் வாழ்வை சாத்தான் திருடிக்கொண்டு போக எள்ளளவும் இடம் கொடாதிருங்கள். நீங்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை என்பதற்காக விவாகரத்தே ஒரே வழி என்ற எண்ணத்திற்கும் இடம் கொடாதிருங்கள்.

அதற்கு மாறாக, ‘பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்’ (1.பேதுரு 3:1,2).

இதுவே தேவனுடைய ஆலோசனை. மேலும், இவ்வாறு நீங்கள் நடக்கும்போது ‘அவள் புரு‌ஷனின் இருதயம் அவளை நம்பும்’ (நீதி.31:11) என்ற வசனம் உங்கள் வாழ்வில் நிறை வேறும்.

ஆகவே உங்கள் நடத்தையை கர்த்தருக்குள் கீழ்ப்படுத்துங்கள். செம்மையான குடும்ப வாழ்வு அமைவது நிச்சயம்.

ஆடம்பரம் வேண்டாமே

இன்று அநேக மனைவிமார்கள் தங்கள் சொந்த கணவருக்குத் தெரியாமலேயே பணத்தை சிற்றின்பத்திற்கும், ஆடம்பர செலவுகளுக்கும், தங்கள் சுயவிருப்பத்தை நிறைவேற்றுவதற்கும் செலவழிப்பதினால் கசப்புகளுக்குள்ளும், கண்ணீருக்குள்ளும் தள்ளப்படுகிறார்கள்.

இவைகள் வளரும்போதுதான் கோபம், எரிச்சல் மற்றும் சந்தேகம் என்னும் ஆவிகள் தலைதூக்கி உங்கள் வாழ்வை தலைகுனியச் செய்கிறது. எனவே உங்கள் வருமானத்துக்குள் செலவு செய்யப் பழகிக்கொள்ளுங்கள். மற்றவர்களைப் போல ஆடம்பரமாக வாழ வேண்டும் என விரும்பி வீணான கடன் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் தேவைகளை ஆண்டவருக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு இன்னது தேவை என்பதை அறிந்த பரம தகப்பன் உங்களை நடத்துவார்.

ஜெபியுங்கள், ‘ஜெபமே ஜீவன், ஜெபமே ஜெயம்’ என்பது தான் ஆண்டவர் நமக்குக் கொடுத்த மாறாத வாக்குகள். உங்கள் ஆவி ஆத்துமா சரீரத்தை ஒப்புக்கொடுத்து ஜெபம் பண்ணுங்கள்.

உங்கள் குடும்ப வாழ்வில் சாத்தான் எவ்வளவு பிரச்சினை களையும், போராட்டங்களையும் கொண்டு வந்தாலும் சோர்ந்து போகாதிருங்கள். உடனே தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். மனு‌ஷனை நம்பி அவனிடம் சொல்லாமல் தேவனை நோக்கிப் பாருங்கள்.

‘நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப்புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்’ (பிலிப்.4:6,7)

சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை–54.

Next Story