அமானுஷ்ய ஆன்மிகம்


அமானுஷ்ய ஆன்மிகம்
x
தினத்தந்தி 7 March 2017 8:02 AM GMT (Updated: 7 March 2017 8:01 AM GMT)

பாரதத்தில் யோகக்கலை தோன்றி பிரகாசித்தது போல், உலகின் பல பகுதிகளிலும் பல அமானுஷ்யக் கலைகள் தோன்றி இருக்கின்றன.

புதிய தொடர்

பாரதத்தில் யோகக்கலை தோன்றி பிரகாசித்தது போல், உலகின் பல பகுதிகளிலும் பல அமானுஷ்யக் கலைகள் தோன்றி இருக்கின்றன. சராசரி மனிதர்களின் அறிவுக்கு அவை பிடிபடாதவை. தங்களுக்கும் மேலே இருக்கின்ற அமானுஷ்ய சக்திகளை அறிந்து, புரிந்து, அவற்றில் தேர்ச்சி பெற்று அவற்றைப் பயன்படுத்திக் கொண்ட பல தலைமுறை அறிவுஜீவிகளின் தொடர் முயற்சியால் உருவான கலைகள் அவை. நம் யோகாவைப் போலவே, அவற்றையும் உருவாக்கியவர்களின் பெயர்களை  நாம்  அறியோம். ஆனால்  அந்த  அமானுஷ்யக் கலைகளை அவர்களது வழித்தோன்றல்கள் பயன்படுத்தி பலனடைந்தார்கள் என்பது மட்டும் நமக்குத் தெரிகிறது. அந்த அமானுஷ்யக் கலைகளை எத்தனை பேர் முழுமையாக அறிந்து கொண்டார்கள், எத்தனை பேர் முறையாகப் பயன்படுத்தினார்கள் என்பது மட்டும் கேள்விக்குறியே.

1     ‘வூடூ’  உருவான  வரலாறு

அந்த அமானுஷ்யக் கலைகளின் ஆரம்பத் தூய்மை எவ்வளவு காலம் தொடர்ந்திருந்தது, அவற்றின் தற்காலத் தூய்மையின் அளவு என்ன என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் முகம் தெரியாத அந்தப் பழங்கால அறிவுஜீவி களின் கண்டுபிடிப்புகளின் அசல் அம்சங்களின் மிச்சங்கள், இன்னும் கொஞ்சமாவது மிஞ்சி இருக்கவே வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி இருக்காவிட்டால் அந்த அமானுஷ்யக் கலைகள் இன்று பயன்படாதவையாக, செயல் இழந்து போனதாகவே இருக்க முடியும். இந்தத் தொடரில் அப்படிப்பட்ட அமானுஷ்யக் கலைகளையும் அவற்றில் விற்பன்னர்களாக விளங்கிய அமானுஷ்ய மனிதர்களையும் நாம் பார்ப்போம்.

முதலில் நாம் அலசிப்பார்க்கவிருப்பது ‘வூடூ’. இந்தப் பெயரைக் கேட்டதும் பலரின் மனதில் நிழலாடுவது, ஆங்கிலத் திரைப்படங்களிலும், நாவல்களிலும் சித்தரிக்கப்பட்ட காட்சிகளாக இருக்கலாம். ஒரு பொம்மையை ஊசிகளால் குத்தி மற்றவர்களுக்கு செய்வினை செய்யும் காட்சி பல ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வூடூ அப்படிப்பட்ட செய்வினைகளின் கலை மட்டுமல்ல. செய்வினைகள் வூடூவின் ஒரு மிகச்சிறிய பகுதி தான். அந்தச் சிறிய பகுதியை உள்ளடக்கிய ஒரு பரந்துபட்ட, சுவாரசியமான ஒரு அமானுஷ்யக்கலை தான் ‘வூடு’.

‘வூடூ என்றால் என்ன பொருள்?’ என்பதற்கு ஏராளமான விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால் மிகவும் பொருத்தமாக நமக்குத் தோன்றுவது, வூடூ தோன்றிய காலத்தில், ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் வழக்கில் இருந்த ஃபான்  (Fon) என்னும் ஆப்பிரிக்க மொழியில் இருந்து கிடைத்திருக்கும் பொருள் தான். வோடன் என்ற சொல்லுக்கு அந்த மொழியில் ‘தெய்வீகம்’ என்று பொருள். அந்த வோடன் என்ற சொல்லே மருவி ‘வோடூ’ மற்றும் ‘வூடூ’ என்று வந்ததாகக் கூறுகிறார்கள். அந்த மொழி, பழைய விதத்திலேயே வூடூ பின்பற்றப்படும் பகுதியான பெனின் (Benin) என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இன்றும் பேசப்பட்டு வருகிறது. ‘வோடன்’ என்றும், ‘வோடூ’ என்றும் கூட வூடூவைச் சிலர் அழைக்கிறார்கள்.

வூடூ பற்றி புற உலகு அறிந்து கொண்டது சுமார் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் என்றாலும், உண்மையில் அதன் பிறப்பிடம் பல்லாயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்பு பிரமிடுகள் தேசமான எகிப்தில் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பிரமாண்டமான பிரமிடுகளைக் கட்ட எகிப்திய மன்னர்கள் பல்லாயிரக்கணக்கான கருப்பு அடிமைகளைப் பயன்படுத்தினார்கள். அந்த அடிமைகள் பிரமிடுகளைக் கட்டும் போது கண்டவற்றையும், கேட்டவற்றையும், அனுபவப்பட்டதையும் நினைவில் இருத்திக் கொண்டார்கள். அவை அனைத்தும் பிரமிடுகளைப் போலவே பிரமாண்டமானவை. அவை இறைவனின் செய்திகள், மகாசக்திகளின் குறியீடுகள் என்று அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அவையே வூடூவின் கரு அல்லது விதை என்று நாம் கருதலாம். அவர்கள் பிற்காலத்தில் நைல் நதியைக் கடந்து மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் அறிந்தவற்றை முறைப்படுத்தி பின்பற்ற ஆரம்பித்தனர். அதுவே வூடூவாக உருவெடுத்தது. தங்கள் சக்திக்கு மீறிய தெய்வீக சக்திகளாகவே வூடூவை அவர்கள் எண்ணியும் பயன்படுத்தியும் வந்ததால், வூடூ, வோடன் (தெய்வீகம்) என்ற சொல்லில் இருந்து வந்ததாகவே இருக்க வேண்டும்.

ஆப்பிரிக்க நாடுகளில் இடம் பெயர்ந்த அந்த கருப்பின மக்களில் கணிசமானவர்கள், பிற் காலத்தில் ஹைத்தி (Haiti) என்றழைக்கப்பட்ட செயிண்ட் டொமினிக்  (St. Domingue) என்ற பிரெஞ்சு காலனியில் குடிபுகுந்தனர். அந்த மக்கள் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வூடூவைப் பயன்படுத்தினார்கள். உலகில் இப்படி சுதந்திரம் பெற அமானுஷ்ய சக்திகளின் உதவி பெறப்பட்டதாக கருதப்படும் உதாரணம் இது ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். அந்த சுவாரசியத் தகவல் வரலாற்று யாத்திரிகர் ஆன மெடரிக் லூயி மோரோ (Mederic Louis Moreau)  என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மெடரிக் லூயி மோரோ அந்தக் காலக்கட்டத்தில் செயிண்ட் டொமினிக் (இன்றைய ஹைத்தி)க்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வாழ்ந்து வந்த கருப்பின மக்கள், பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு எதிரான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார். அவற்றில் முக்கியமாக சடங்கு ஒன்று 1791–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14–ந் தேதி இரவு நடைபெற்றது. அந்தச் சடங்கு டட்டி புக்மேன் (Dutty Boukman) என்ற வூடூ பாதிரியின் தலைமையில் நடந்தது. அதில் பெட்ரோ நடனம் என்ற ஒரு விசித்திர நடனம் நடத்தப்பட்டது.

அந்த நடனத்தில் பங்கு கொண்டவர்கள், பாம்பைப் போல வளைந்து நெளிந்து ஆடினார்கள். அவர்களில் பலரும் தங்கள் வசமில்லை என்பது பார்த்துக் கொண்டிருந்த மெடரிக் லூயி மோரோவுக்குத் தெரிந்தது. சிலர் ஜன்னி வந்தது போல் ஆடினார்கள். சிலர் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டது போல் ஆடினார்கள். சிலர் அந்த ஆட்ட முடிவில் மயங்கியும் விழுந்தார்கள். அது மட்டுமல்லாமல் தங்களிடமிருந்த மத்தளங்களில் வித்தியாசமான ஒலிகளை எழுப்பினார்கள். கைகளை தாள லயத்தோடு தட்டினார்கள். கடைசியில் ஒரு காட்டுப் பன்றியைத் தங்கள் கடவுளுக்குப் பலி கொடுத்தார்கள்.

அந்தச் சடங்கு பற்றி மெடரிக் லூயி மோரோ விசாரித்த போது, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுபட அவர்கள் செய்த ரகசியச் சடங்கு என்று அவருக்கு ரகசியமாகச் சொல்லப்பட்டது. அன்று அமானுஷ்ய சக்திகள் உதவியுடன் விடுதலைப் புரட்சிக்கு வித்திட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். ‘அவர்கள் சொன்னது தனக்கு வேடிக்கையாக இருந்தது’ என்று மெடரிக் லூயி மோரோ பதிவு செய்திருக் கிறார்.

பொதுவாகவே அந்த மக்கள் விசித்திரமான ஒலிகளை எழுப்பி, மத்தளங்கள் தட்டி,  நடனம் ஆடும் வழக்கம் கொண்டிருந்தனர். எனவே ஆட்சியாளர்கள் அவர்களுடைய இது போன்ற சடங்குகளைப் பொருட்படுத்தவில்லை. சின்னச் சின்ன ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புகளும் பிரெஞ்சு ராணுவத்தால் அவ்வப்போது அடக்கப்பட்டாலும், 1803–ம் ஆண்டு இறுதியில் டெஸ்ஸலைன்ஸ் (Dessalines) என்ற மாவீரனின் தலைமையில் வெடித்த புரட்சியில் புரட்சியாளர்கள் வென்றார்கள். 1804–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி அவர்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றார்கள். டெஸ்ஸலைன்ஸ் தங்கள் நாட்டிற்கு ஹைத்தி என்று புதிய பெயரிட்டு அதன் சக்கரவர்த்தியானார்.

1791–ம் ஆண்டு முதல் கடைசியாக சுதந்திரம் பெற்றது வரை தங்கள் முக்கியப் போராட்டங்களுக்கு தங்கள் தேவதைகளின் ஆலோசனைகளைப் பெற்றதாக அந்தக் கருப்பின மக்கள் தெரிவித்தார்கள். 1791–ம் ஆண்டு ஆகஸ்டு 14–ந் தேதியின் முக்கியத்துவத்தை இன்று வரை ஹைத்திய மக்கள் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வருடம் தோறும் பெட்ரோ நடனம் அந்த நினைவில் கோலாகலமான விழாவாக நடத்தப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் அந்த நினைவு விழா ஒன்றில், ஆல்ஃப்ரட் மெட்ராக்ஸ் (Alfred Metreaux) என்ற சுவிஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கலந்து கொண்டார். அவர் அந்த விழாவின்போது பாடப்படும் ஒரு பழங்காலப் பாட்டின் பொருளையும் குறிப்பிட்டுள்ளார்.

‘ஓ டெஸ்ஸலைன் சக்கரவர்த்தியே நீங்கள் மாவீரர்.    

அவர்கள் நம்மை என்ன செய்தார்கள் என நினைக்கிறீர்கள்?

இந்த நாடு முன்பே நம் கைகளில் வந்து விட்டிருக்கிறது’.

வருடா வருடம் அந்த நிகழ்ச்சியின் போது, டெஸ்ஸலைன் சக்கரவர்த்தியின் ஆவியும் வந்து கலந்து கொள்வதாக ஹைத்தி மக்கள் நம்புகிறார்கள். அந்த சுதந்திரம் வூடூ அமானுஷ்ய சக்திகளின் உதவியால் பெறப்பட்டதாகவும், அந்த சக்திகள் சர்வ வல்லமை பெற்றவையாகவும் அக்காலத்தில் நம்பிக்கை பரவ ஆரம்பித்தது. அது ஆதிக்க வர்க்கத்திடையே லேசான பயத்தைக் கிளப்பி விட்டது.

அவர்கள் என்ன செய்தார்கள்?, வூடூ என்ன ஆனது? என்பதை அடுத்த வாரம் பார்ப்போமா...

Next Story