திருமணதடை நீக்கும் திருநல்லூர் கல்யாண சுந்தரர்


திருமணதடை நீக்கும் திருநல்லூர் கல்யாண சுந்தரர்
x
தினத்தந்தி 7 March 2017 9:23 AM GMT (Updated: 7 March 2017 9:23 AM GMT)

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர்–கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருநல்லூர் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது.

மாதேவியார் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார். அன்று கடலில்  நீராடுவது சிறந்த புண்ணியத்தை தரும் என்று புராணங்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் அருள் வழங்கும் ஆலயங்கள் நீக்கமற நிறைந்துள்ளன. எனினும் தேவார பாடல் பெற்ற 274 தலங்களே சைவத்தில் முதல் இடம் பெற்று திகழ்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர்–கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருநல்லூர் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற திருத்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முச்சிறப்பிலும் சிறந்து, சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இத்தலம் விளங்குகிறது என்பதை,  

‘வடபாற் கயிலையும், தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே’ என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் இருந்து மக்கள் அனைவரும் திரண்டு வந்து நீராடி நலம் பெறும் கும்பகோணம் மகாமக குளத்துக்கு ஈடாக திருநல்லூரில் உள்ள சப்தசாகரம் என்னும் திருக் குளம் மிகவும் சிறப்புடையது.

ஒவ்வொரு மாசி மாதத்தன்றும் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, ‘மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்’ என்ற பழமொழியே உணர்த்தும்.

இது ஒரு மாடக்கோவில். யானை ஒன்று பெருமான் (மூலலிங்கம்) இருப்பிடத்தைச் சென்று அடையாத வண்ணம் பல படிக்கட்டுகளுடன் கட்டப்பட்டு அமைந்துள்ளது.

மூலவர் கல்யாண சுந்தரர்  லிங்கத்திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார். அம்பாள் திருநாமம் கிரி சுந்தரி. இந்த பெரிய மாடக்கோவிலை திருஞானசம்பந்தர் ‘மலை மல்கு கோவில் வானமருங்கோவில், வான் தேயும் கோவில் என பாடி உள்ளார். இரண்டு திருச்சுற்றுகளையுடைய இக்கோவில் 316 அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது. இக்கோவிலின் முன்கோபுரத்தில் ஒரு மாடத்தில் அதிகாரநந்தி, பிள்ளையார் கொடி மரம், பலிபீடம், இடபதேவர் முதலியனவும், சற்று தெற்கில் அமர்நீதி நாயனாரது வரலாற்றில் தொடர்புடைய நான்கு கால்களுடன் கூடிய அழகிய தராசுமண்டபமும் உள்ளன. தென் வெளிச்சுற்றில் அஷ்டபுஜமாகாளி தேவியின் சன்னிதி அமைந்துள்ளது. மாகாளி எட்டுக் கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலம் தரிசிக்கத்தக்கது. இரண்டாவது கோபுர வாசலை கடந்து சென்றால் இத்தலத்து விநாயகர் காசிப் பிள்ளையார் உள்ளார். தென்பக்கம் மேற்கு பார்த்த திசையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் தனி சன்னிதி உள்ளது.  தென்மேற்கு மூலையில் ஏழுமாதர்களாகிய அபிராமி, மகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி ஆகிய மூர்த்திகளுடன் விநாயகரும் அருள்பாலிக்கின்றார். மேல்புறம் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அடுத்து லட்சுமி தேவி சன்னிதி உள்ளது.

உள்வடக்கு திருச்சுற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் பெருமானை வணங்கும் கோலத்தில் பாண்டவர்களின் தாய் குந்திதேவியும், அடுத்து இத்தலத்திற்கு வந்து முக்தி பெற்ற அமர்நீதியார் சிலைவடிவங்கள் இரண்டும் உள்ளன. இவர்களுக்கு எதிரில் சண்டேசுவரர், துர்க்கை அம்மன் சன்னிதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நடராஜ பெருமானை அடுத்து சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் மற்றும் அம்பிகையுடன் இரு சிவலிங்கத் திருமேனிகளும் இடம் பெற்றுள்ளன.

மூலவர் சுயம்புலிங்கமாய் தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார். இவர் தினமும் ஐந்து நிறங்களில் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என்றும் அமர்நீதியார், அப்பர் ஆகியோருக்கு அருள்புரிந்ததால் ஆண்டார் எனவும், அகத்தியருக்கு தம் திருமணக் கோலத்தை காட்டி அருளியதால் கல்யாணசுந்தரர் எனவும், பேரழகுடன் விளங்குவதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் எனவும் போற்றப்படுகிறார். கருவறையில் சுதை வடிவில் அமர்ந்த நிலையில் கல்யாண கோலத்தில் இறைவனும், இறைவியும் இருக்க, இருபுறமும் திருமாலும், பிரம்மனும் நின்ற திருக்கோலத்தில் உள்ளனர்.

நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும், கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலைசூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம்வந்து வழிபட்டுச்சென்றால் தடைப்பட்டிருந்த அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.

ஏழு கடல் வந்த வரலாறு

ஒரு சமயம் பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நன்னாள். கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். அதைக் கேட்ட குந்திதேவி பெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பெருமான், குந்தி தேவிக்காக பிரம்ம தீர்த்தத்தில் உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய ஏழு கடல்களையும் வருமாறு செய்தார். அதில் குந்திதேவி நீராடிப்பேறு பெற்றார். இந்த ஏழுகடல்களைக் குறிக்கும் ஏழுகிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை பன்னிருமுறை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்ற நம்பிக்கை இன்றும் பக்தர்களிடம் உள்ளது.

பிரம்மதேவன் இத்திருக்குளத்தின் கீழ்த்திசையில் ரிக் வேதத்தையும், தென்திசையில் யசூர் வேதத்தையும், மேற்குத்திசையில் சாம வேதத்தையும், வடதிசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதிணென் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது.

கல்யாண சுந்தரப்பெருமான் மாசிமகம், வைகாசி விசாகம், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகள், மார்கழிதிருவாதிரை முதலிய நாட்களில் இதில் தீர்த்தவாரி அருள்கிறார்.

நரசிம்ம வடிவம்

கொடிய அரக்கனாகிய இரணியனைக் கொல்ல நரசிம்ம வடிவம் வேண்டி திருமால் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தார். அப்போது இத்தல இறைவன் தோன்றி நரசிம்ம வடிவத்தை திருமாலுக்கு அளித்து, இரணியன் மாய்ந்த பின் தன் கருவறை விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாய் இருக்கவேண்டும் என்று பணித்தார். அந்த வடிவத்தை இன்றும் இந்த விமானத்தில் காணலாம்.

பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில் (சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை என்றாலும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

இத்திருக்கோவிலில் வைகாசி விசாக சப்தஸ்தான விழா, ஆனி மாதம் அமர்நீதியார் விழா, மார்கழிமாதம் 10 நாள் திருவெம்பாவை விழா, திருவாதிரை தரிசனம், மாசிமக விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.

ஐந்து நிறங்களில் காட்சி தரும் கல்யாண சுந்தரர்

நல்லூர் கல்யாண சுந்தரர் தினமும் ஆறு நாழிகைக்கு ஒரு தடவை பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறார். முதல் ஆறு நாழிகையில்  தாமிர நிறம், அடுத்த 6–12 நாழிகையில் இளம் சிவப்பு, அடுத்த 12–18 நாழிகையில் தங்கம், அடுத்த 18–24 நாழிகையில் நவரத்தின பச்சை, அடுத்த 24–30 நாழிகையில் இன்ன நிறமென்று கூற இயலாத தோற்றத்தில் நிறம் மாறி, மாறி பஞ்சவர்ணமாக காட்சி தருகிறார். இந்த அதிசய சம்பவம் இன்றும் நடைபெற்று வருகிறது.

Next Story