திருமண வரம் அருளும் ஆளுடையார்


திருமண வரம் அருளும் ஆளுடையார்
x
தினத்தந்தி 14 March 2017 1:45 AM GMT (Updated: 13 March 2017 1:28 PM GMT)

ராவணனின் சகோதர முறையான கரன் என்பவன், தவம் செய்வதற்காக ஒரு சிவன் கோவிலைக் கட்ட திட்டமிட்டான்.

ராவணனின் சகோதர முறையான கரன் என்பவன், தவம் செய்வதற்காக ஒரு சிவன் கோவிலைக் கட்ட திட்டமிட்டான். விச்சிரவசுவுக்கு, சாகையிடத்துப் பிறந்த மூன்று புதல்வர்களுள் மூத்தவன் இவன். இவனது சகோதரர்கள் தூ‌ஷணன், திரிசரன். கரன் ஜனஸ்தானத்தில் சேனாதிபதியாய் இருந்தான். திரிசரன் திருச்சியை அரசாண்ட போது, கரன் ஒரு சிவன் கோவிலைக் கட்டி முடித்தான். அதுவே திருச்சி உய்கொண்டான் திருமலையில் உள்ள ஆளுடையார் திருக்கோவில் என்கிறது, தல வரலாறு.

ஆலய அமைப்பு

இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உயரமான மலையின் மேல் அமைந்துள்ளது இந்த ஆலயம். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம் உள்ளது. நடுவே பிரமாண்டமான நந்தி மண்டபமும், இடது புறம் ஆஞ்சநேயர் சன்னிதியும் காணப்படுகின்றன.  அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறை நுழைவாயிலின் இடதுபுறம் விநாயகர் அருள்பாலிக்கிறார். உள்ளே கருவறையில் இறைவன் ஆளுடையார் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி வீற்றிருக்கிறார். இறைவனின் திருமேனி பிரமாண்டமாக,  மிகப் பெரிய அளவில் 8½ அடி உயரத்தில், அழகிய திருக்கோலத்துடன் அமைந்துள்ளதைக் காணும் போது நம் மேனி சிலிர்ப்பதை தவிர்க்க இயலாது.

இறைவனின் தேவக் கோட்டத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் பெரு மாளும் தெற்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். விஷ்ணு துர்க்கையின் எதிரே சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது.

முன்பு இந்தப் பகுதி வனமாக, குடியிருப்புகள் அதிக இல்லாத இடமாக இருந்துள்ளது.  அப்போது கோவில் கருவறைக்குள் பாம்புகள் கூட்டமாக வந்து  லிங்கத் திருமேனியின் மீது ஏறும் நிகழ்வுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாவங்களில் இருந்து மீள்வதற்காக நாகர்கள் நடத்தும் வழிபாடு இது என்று கூறுகிறார்கள்.  இப்போது பாம்புக் கூட்டம் வருவதில்லை என்றாலும், அர்ச்ச கரின் வருகையை, ஆட்கள் வரும் ஓசையை கேட்டதும், பாம்பு வெளியேறுவதை  பார்த்திருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜராஜனின் மனைவி

இந்த ஆலயத்தின் அருகே, உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் ஆலயம் உள்ளது. ராஜராஜசோழனின் மனைவி தினசரி அபிஷேக ஆராதனைகளை கண்டு தரிசிக்க உஜ்ஜீவநாதர் ஆலயத்திற்கு வருவதுண்டு. அப்படியே சோழ மன்னனின் துணைவி இந்த ஆளுடையார் ஆலயத்திற்கும் தினசரி பூஜைக்கு வரும் பழக்கம் உள்ளவராக இருந்ததாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

கரன், தான் தியானம் செய்வதற்காகவே இந்த தியான லிங்கமான ஆளுடையாரை இங்கு பிரதிஷ்டை செய்தான். எனவே இங்கு அம்மனுக்கு சன்னிதி இல்லை. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஆலயம் இது. இங்கு தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.  

திருமணமாகாத பெண்கள் இங்கு வந்து இறைவனை வேண்டி அபிஷேகம் செய்தால், அவர்கள் விருப்பம் நிறைவேறி அவர்களுக்கு நல்ல கணவன் அமைவதாக நம்பிக்கை நிலவுகிறது. குழந்தை வரம் வேண்டி இங்கு வரும் பெண்கள், இறைவனையும் இங்குள்ள நந்தியம் பெருமானையும் மனமுருக வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. தங்கள் பிரார்த்தனை பலித்ததும் அந்தப் பெண்கள், நந்தியம் பெருமானின் அருகே தொட்டிலையோ, மணியையோ கட்டி தங்கள் நன்றிக்கடனைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

சரியாகப் பேச்சு வராத குழந்தைகளை இங்கு கூட்டி வந்து, நந்தியம் பெருமானுக்கு படையல் போட்டு வேண்டிக் கொள்ள அந்தக் குழந்தை விரைவில் பேசத் தொடங்குவதாகவும் பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகிறார்கள்.

இத்தலத்தில் உள்ள பிரமாண்டமான ஆளுடையாரை நாம் தரிசிக்கும் போது, நம் மனதில் மகிழ்வும் நிதர்சனமான அமைதியும் உலா வருவதை நாம் உணர்வது உண்மையே!

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஆலயம். நகரப் பேருந்துகள் மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

–ஜெயவண்ணன்.

வீதி உலா காணாத இறைவன்

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கும், அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கும் விசே‌ஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்கு பிரதோ‌ஷம் மிகவும் விமரிசையாக நடத்தப்படு கிறது. சோம வாரங்கள், சிவராத்திரி, மார்கழியின் 30 நாட்கள் என இறைவனுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. கடைசி சோம வாரத்தின் போது இறைவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படுவது முக்கிய அம்சமாக உள்ளது. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசித்து பயன் பெறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் உற்சவர் சிலை கிடையாது. எனவே இறைவன் வீதியுலா வருவதும் இல்லை. ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவமும் இங்கு நடைபெறுவதில்லை.


Next Story