ஆன்மிகம்

விதியை வெல்ல அருளும் வேளச்சேரி தண்டீசுவரர் + "||" + Gives overcome fate tanticuvarar Velachery

விதியை வெல்ல அருளும் வேளச்சேரி தண்டீசுவரர்

விதியை வெல்ல அருளும் வேளச்சேரி  தண்டீசுவரர்
சகல தோ‌ஷங்களையும் போக்கியருளும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, சென்னை வேளச்சேரி தண்டீசுவரர் திருக்கோவில்.
தும்மல்  இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சுஎழுத்துமே


 – பஞ்சாக்கரத் திருப்பதிகம்

வேதங்கள் வழிபட்டு புனிதம் அடைந்த தலம், எமதர்மன் பேறு பெற்ற கோவில், பல்லவர்கள், சோழர்கள் திருப்பணி செய்த ஆலயம், மணி விழா உள்ளிட்ட திருமண விழாக்கள் நடத்த உகந்த இடம், சகல தோ‌ஷங்களையும் போக்கியருளும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, சென்னை வேளச்சேரி தண்டீசுவரர் திருக்கோவில்.


புராண வரலாறு

சோமுகன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றான். அதனால் ஏற்பட்ட அகந்தையால், அவன் பிரம்மாவின் சத்தியலோகம் சென்று, நான்கு வேதங்களையும் கவர்ந்துசென்றான். அந்த வேதங்களை ஆழ்கடலுக்குள் ஒளித்து வைத்தான். இதனால் வேள்விகள் நின்று போனது. கவலையடைந்த தேவர்கள், திருமாலிடம் சென்று முறையிட்டனர். வேதங்களை மீட்பதற்காக திருமால், மச்ச (மீன்) அவதாரம் எடுத்து காஞ்சீபுரம் வந்தார்.

அங்கே தீர்த்தக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் மச்ச அவதாரத்திலேயே கடலுக்குள் சென்று, சோமுகாசுரனையும், அவன் ஒளிந்து கொள்ள இடம் அளித்த சங்கு உருவம் கொண்டிருந்த பாஞ்சசனையும் கொன்றார். பின்னர் பாஞ்சசன் எலும்பை தனதாக்கிக்கொண்டார். வேதங்களை மீண்டு தேவர்களிடம் கொடுத்தார். காஞ்சியில் திருமால் வழிபட்ட தலம் ‘மச்சேசர் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.

புனிதம் பெற்ற வேதங்கள்

அசுரனிடம் இருந்ததால் மாசுபட்டதாக கருதப்பட்ட வேதங்கள், தங்களைப் புனிதப்படுத்திக்கொள்வதற்காக பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மாவின் ஆலோசனைப்படி இன்றைய சென்னை திருவான்மியூர் அருகே சோலைகளில் நிறைந்த இடத்தில் தவக்குடில் ஒன்று அமைத்து  சிவலிங்கம் நிறுவி வேதங்கள் வழிபட்டு வந்தன. மேலும் திருவான்மியூரில் அமர்ந்துள்ள மருந்தீசுவரரையும் வழிபட்டு வந்தன. வேதங்களின் வழிபாட்டில் மகிழ்வுற்ற சிவபெருமான், அவர்கள் முன்பாக தோன்றி வேதங்களுக்கு அருளாசி வழங்கினார். இதனால் வேதங்கள் மீண்டும் புனிதமாயின. வேதங்கள் தவக்குடில் அமைத்து வழிபட்ட இடம் ‘வேதஸ்சிரேணி. இதுவே நாளடைவில் மருவி வேளச்சேரி என்றானதாக கூறப்படுகிறது.

எமனுக்கு அருளல்

துவாபர யுகத்தில் தோன்றிய மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயதில் ஆயுள் முடியும் என்று விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தருணத்தில் மார்க்கண்டேயன், திருக்கடவூர் இறைவனை கட்டித் தழுவியபடி இருந்தான். அவனது உயிரை பறிக்க வந்த எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட இறைவன், தன் காலால் எமனை எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார்.

எமன் இல்லாமல் பூமியின் பாரம் அதிகரித்தது. இதனால் பூமாதேவி கலக்கமுற்றாள். இதனையறிந்த இறைவன் எமனை உயிர்ப்பித்தார். மீண்டும் உயிர்பெற்ற எமதர்மன், நாரதரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் (வேளச்சேரி) சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டான். பிறகு ஆலயத்திருப்பணி, திருவிழாக்கள் நடத்தினான். அதன் பலனால், தன் இயல்புநிலையைத் திரும்பப் பெற்றான் என்று தலபுராணம் கூறுகிறது.

ஆலய அமைப்பு

இந்த ஆலயம் கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று வாசல்கள் உள்ளன. என்றாலும், தெற்கு வாசலே புழக்கத்தில் உள்ளது. எளிய ஐந்துநிலை ராஜகோபுரம் தெற்கு வாசலில் அமைந்துள்ளது. நேரே அன்னை கருணாம்பிகை நம்மை வரவேற்க, அருகே கிழக்கு முகமாய் மூலவர் தண்டீசுவரர் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நர்த்தன விநாயகர், உற்குடியாசன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் வீற்றிருக்கின்றனர். இதே சுற்றில் கணபதி, வள்ளி – தெய்வ£னை உடனாய சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி சன்னிதிகள் உள்ளன.

வெளிப்பிரகாரத்தில் அறுபத்துமூவர், வைத்தீசுவரர், சொக்கநாதர், மீனாட்சி, நவக்கிரகம், நாகர், தலமரமான வில்வம், கொடிமரம், பலிபீடம், நந்தி அருகே விநாயகர், முருகன் ஆகியோர் அமைந்துள்ளனர்.    இந்து சமய அறநிலையத் துறையினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

இறைவன் தண்டீசுவரன்

கிழக்கு முகமாய் எளிய வடிவில்அருளாசி வழங்கும் மூலவர், தண்டீசுவரர் என அழைக்கப்படுகின்றார். இவரே கல்வெட்டுகளில் திருத்தண்டீஸ்வரமுடைய மகாதேவர் என வழங்கப்படுகிறார். இவரின் பழமையான பெயர் தண்டபாணீஸ்வரர் என்பதாகும்.

எமன் சிவபூஜை செய்ய, தனது தண்டத்தை இங்கு ஊன்றி பூஜை செய்ததாகவும், பூஜை முடித்து, தண்டத்தை எடுக்க இயலாததால், அங்கேயே விட்டு விட்டதன் காரணமாக, இறைவன் தண்டீசுவரரானதாகத் தலபுராணம் கூறுகிறது. வேதங்கள் நிறுவி வழிபட்ட சிவனும் இவரே ஆவார். இவரே நமது தோ‌ஷங்களையும் நீங்கி நிம்மதி தருபவர். இறப்பின் பயம் நீங்கி இன்பம் அளிப்பவர். தண்டபாணி ஈஸ்வரர் என பழங் காலத்தில் அழைக்கப்பட்ட இவர் இப்போது தண்டீசுவரர் என மருவி வழங்கப்படுகிறார்.

இறைவி கருணாம்பிகை


தெற்கு நோக்கிய நின்ற கோல அம்மனாக நான்கு கரங் களுடன் அருளாசி வழங்குபவள் அன்னை கருணாம்பிகை. திருவான்மியூர் மருந்தீசுவரருக்குத் துணையாகத் திரிபுரசுந்தரி இருப்பதைப் போல, தண்டீசுவரருக்கு ஒரு துணையை உருவாக்க விரும்பிய அப்பைய தீட்சிதர், ஸ்ரீசக்கரத்துடன் நிறுவிய தெய்வமே, கருணாம்பிகை என தலவரலாறு கூறுகிறது.

அப்பைய தீட்சிதர்

வேலூர் மாவட்டம், ஆரணி அருகே, அடையபலம் என்ற தலத்தில் தோன்றியவர் அப்பைய தீட்சிதர். வேலூரை ஆட்சி செய்த விஜயநகர மன்னன் காலத்தில் புகழ்பெற்ற அறிஞராகப் போற்றப்பட்டவர். வேளச்சேரியில் தங்கியிருந்து, நாள்தோறும் திருவான்மியூர் இறைவனையும்  ஒரு சேர வணங்கி வழிபட்டவர். இவரின் வழிபாட்டில் மயங்கி மருந்தீசன், கிழக்குநோக்கிய தன் திசையை மாற்றி, மேற்கு முகமாய் காட்சி தந்து அருளினார்.

ஆலயச் சிறப்புகள்

வேதங்களுக்கு தோ‌ஷங்கள் நீக்கி பரிசுத்தம் அளித்தது போல, அடியார்களுக்கும் சகல தோ‌ஷங்கள் நீக்கும் தலமாக இது விளங்குகிறது. எமனுக்கு அருள் வழங்கியதால், இங்கு வந்து வழிபடுவோர் இறப்பு குறித்த பயம் நீங்கப்பெறுவர். சரஸ்வதிக்குத் தனிச் சன்னிதி கொண்டதும், தட்சிணாமூர்த்தி உற்குடியாசனத்தில் காட்சி தருவதும், இறைவனும், கொடிமர நந்தீசுவரரும் தலை சாய்த்து அமைந்திருப்பதும் இந்த ஆலயத்தின் தனிச் சிறப்புகளாகும். புராண வரலாற்றின்படி வேளச்சேரி, திருவான்மியூர் தலத்தை ஒரு சேர வழிபட்டால் பூரண பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

இவ்வாலயத்தின் தலமரம் வில்வம். தலத்தீர்த்தம், ஆலயத்திற்கு மேற்கே அமைந்துள்ள எமன் உருவாக்கிய திருக்குளம். இது எம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு சிவகங்கை திருக்குளம் என்ற பெயரும் உண்டு.

விழாக்கள்


தமிழ்ப் புத்தாண்டு, சித்திராப் பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், பங்குனி உத்திரம் மற்றும் மாதக் கிருத்திகை, பிரதோ‌ஷங்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி, (வெள்ளிக் கிழமை நண்பகல் 12 மணி வரை), மாலை 4.30 மணி முதல் இரவு 8.30  மணி வரை சுவாமியை தரிசனம் செய்யலாம்.

அமைவிடம்


சென்னை மாநகரில், சைதாப்பேட்டைக்குத் தெற்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. தென்சென்னையின் முக்கியப் பகுதியான  வேளச்சேரிக்கு, ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை கடற்கரை – வேளச்சேரி மெட்ரோ ரெயில் வசதியும் உள்ளது.

– பனையபுரம் அதியமான்.

தொடர்புடைய செய்திகள்

1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்?
திருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.
2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...
ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.
3. தீபத்தில் முப்பெரும்தேவியர்
முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.
4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்
மகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.
5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ
சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.