இயேசு எடுத்துரைத்த மனித நேயம்


இயேசு எடுத்துரைத்த மனித நேயம்
x
தினத்தந்தி 21 March 2017 10:28 AM GMT (Updated: 21 March 2017 10:28 AM GMT)

நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய நற்செய்தியை உற்று நோக்குவோம். இந்த அத்தியாயத்தில் இயேசு பணக்காரர், ஏழை பற்றி எடுத்துரைக்கிறார்.

நற்செய்தி சிந்தனை

ற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய நற்செய்தியை உற்று நோக்குவோம். இந்த அத்தியாயத்தில் இயேசு பணக்காரர், ஏழை பற்றி எடுத்துரைக்கிறார்.

நிறைந்த செல்வம் வைத்திருக்கும் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் நாள்தோறும் விலை உயர்ந்த ஆடைகளை அணிவார். தினமும் அறுசுவை விருந்துண்பார். எப்பொழுதும் இன்பமாக இருப்பார். ‘லாசர்’ என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவர் இருந்தார்.  அவர் உடல் முழுவதும் புண்ணாக இருந்தது. அவர் அந்தப் பணக்காரனின் வீட்டு வாசல் அருகே கிடந்தார். அவர் பணக்காரரின் மேஜையில் இருந்து விழும், சில உணவுப் பருக்கைகளை உண்டு பசியாற விரும்பினார். நாய்கள் வந்து அவரது புண்களை நக்கும். ஒருநாள் அந்த ஏழை இறந்தார். வானத் தூதர்கள், அவரை அபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். பணக்காரரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டார். அண்ணாந்து பார்த்தார்.

மிகத் தொலைவில் அபிரகாம் இருப்பதையும், அவர் மடியில் லாசர் கிடப்பதையும் கண்டார். அங்கிருக்கும் மகிழ்ச்சியை கண்ட அவர் அபிரகாமைப் பார்த்து, ‘‘அபிரகாமே! என் மேல் இரங்கும். லாசர், தன் விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து என் நாவைக் குளிரச் செய்ய அவரை இங்கு அனுப்பும். நான் இங்கு தீப்பிழம்பில் வேதனைப்படுகிறேன்’’ என்று மிகவும் சப்தத்துடன் கூறினார்.

அதற்கு அபிரகாம் அந்தச் செல்வந்தரை நோக்கி, ‘‘மகனே! நீ, இவ்வுலகில் வாழ்ந்தபோது, நலன்களையே பெற்றாய். அதே சமயத்தில் லாசர் துன்பங்களையே அடைந்தார். அதை எண்ணிப் பார். அவர் இப்பொழுது ஆறுதல் பெறுகிறார். நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அதுமட்டுமல்ல, உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரும் பிளவு இருக்கிறது. அதனால் இங்கிருந்து ஒருவர் அங்கு வர விரும்பினாலும் வர இயலாது; அங்கிருந்து நீங்களும் எங்களிடம் கடந்து வர இயலாது’’ என்றார்.

உடனே அந்தப் பணக்காரர், அபிரகாமை நோக்கி, ‘‘தந்தையே! அவரை என் தந்தை வீட்டிற்கு அனுப்பும்படி உம்மை வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார் கள். அவர்களும் வேதனையான இந்த இடத்திற்கு வந்து விடக்கூடாது. அவர்களை எச்சரிக்கலாமே’’ என்றார்.

அதற்கு அபிரகாம் மறுமொழியாக, ‘‘மோசேயும், இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு இவர்கள் செவி சாய்க்கட்டும்’’ என்றார்.

அதற்கு அந்தச் செல்வந்தர், அபிரகாமை நோக்கி, ‘‘தந்தை அபிரகாமே! இறந்த ஒருவர், அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’’ என்றார்.

‘‘மேசேக்கும், இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காதவர்கள், இறந்த ஒருவர் உயிர்த்து எழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்’’ என்று அபிரகாம் கூறினார்.

இயேசு பிரான் சொன்ன செய்தியில் இருந்து சில உண்மைகளை நாம் உணர வேண்டும்.

‘செல்வத்து பயனே ஈதல்’ என்று கூறுகிறது தமிழ் மரபு. பிறருக்குக் கொடுத்தல் என்பதுதான் இயல்பானது. செல்வந்தர்கள் இதற்கு முரண்படுபவர்களாக இருக்கக் கூடாது. எளிமையாக, மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடை   பெறும் ஒரு நிகழ்வாக மக்கள் உணர, இச்சம்பவத்தை இயேசு பிரான் எடுத்துரைக்கிறார்.

இந்த உலகில் துன்பங்களை அனுபவிப்பவர்கள், மறு  உலகில் இன்பம் அடைகின்றனர். இவ்வுலகம் நிரந்தரமானது அல்ல. மனிதர்கள் அனைவரும் ஒருநாள் மறைந்தே தீர வேண்டும். ஆகவே மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் அடிப்படையான தத்துவம் ஆகும்.

‘‘ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம்; ஆனால் செல்வந்தன் பேரின்பத்தை அடைய மாட்டான்’’ என்று வேறு ஓர் இடத்தில் இயேசு பிரான் கூறுவதையும் எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்.

சிந்தனை:

இந்தச் சம்பவத்தை மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டு வருவோம். இருவேறு வாழ்க்கை வாழும் இரண்டு மனிதர்களை நமக்குக் காட்டுகிறார். தினமும் பகட்டான ஆடை உடுத்தி அன்றாடம் விருந்து உண்ணும் செல்வந்தர் ஒரு பக்கம்; சிதறும் உணவுக்காக ஏங்கும் ஏழை மறுபக்கம். அதுமட்டுமல்ல, உடல் முழுவதும் புண்ணாகி, நாய்கள் அப்புண்ணை நக்கிக் கொண்டிருக்கும் நிலையை நமக்குக் காட்டுகிறார்.

இவ்வளவு இழிவான தன்மையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவருக்கு இரக்கம் காட்டாத செல்வந்தர் இறந்த பிறகு நடக்கும் நிகழ்வையும் சுட்டிக் காட்டுகிறார்.

பேரின்ப வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த ஏழை லாசர், இவ்வுலகில் வாழ்ந்தபோது செல்வந்தரால் கொஞ்சம்கூட கவனிக்கப்படவில்லை.

துன்பம், துயரம் போன்றவைகளை இவ்வுலகில் காணாத செல்வந்தர், பாதாளத்தில் ஒரு கணம்கூட இருக்க முடியவில்லை. நா வறட்சியால் துடிக்கிறார். ஏழை லாசரின் விரல் நுனியால் நீர் தொட்டு, தன் தாகத்தைத் தீர்க்க வேண்டி கெஞ்சுகிறார். தனக்கு ஏற்பட்ட துன்பம், தன்னைச் சார்ந்து வாழ்ந்த தனது சகோதரர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்.

இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்து, எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்பதற்கு இயேசு பிரான் எடுத்துரைத்த இச்செய்தியைப் பின்பற்றி, சகோதர நேயத்தோடு மனிதாபிமானத்தோடு வாழ்வோம். அவரின் நற்செய்தியை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்ப்போம். வாழ முற்படுவோம்.

Next Story