ஆன்மிகம்

மாம்பழச்சாறு அபிஷேகத்தில் மகிழும் பாமணி பாதாளேஸ்வரர் + "||" + Mango juice In the anointing Shall rejoice Bahmani padhalesvarar

மாம்பழச்சாறு அபிஷேகத்தில் மகிழும் பாமணி பாதாளேஸ்வரர்

மாம்பழச்சாறு அபிஷேகத்தில் மகிழும் பாமணி பாதாளேஸ்வரர்
சிவபெருமான் பார்வதி தேவியுடனும், குழந்தையான சுப்பிர மணியருடன் காட்சி தரும் கோலம் தான் சோமாஸ் கந்தர்.
2.4.2017 கோவில் கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றின் வடக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாமணி கிராமத்தில் அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பினை உடையது. இந்தக் கோவில் ராகு, கேது தோ‌ஷ பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. காவிரியின் தென்கரை தலங்களில் 104–வது தலம். சுவாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் பாதாளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். நாகநாதசுவாமி, பாம்பணிநாதர், திருப்பாதாளேஸ்வரர், ஸ்ரீபதி விண்ணகர ஆழ்வார் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. பொதுவாக சிவாலயங்களில் சுயம்பு லிங்கத்துக்கு வெள்ளிக்கவசம் சாற்றியே அபிஷேகம் நடக்கும். ஆனால் புற்று மண்ணால் ஆன நாகநாத சுவாமிக்கு நேரிடையாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தினமும் இருவேளை அபிஷேகம் நடைபெற்று வருவது இத்தலத்தின் தனிப்பெரும் மகிமையாகும். அம்பாள் திருநாமம் அமிர்தநாயகி.


தல அமைப்பு

நாகநாதசுவாமி தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி பக்தர் களுக்கு தரிசனம் தருகிறார். வாசலில் வலதுபுறம் சுவாமியை வணங்கிய நிலையில் மனித முகமும், சர்ப்ப உடலுமாய் தனஞ்செய முனிவராக ஆதிசே‌ஷன் காட்சியளிக்கிறார். கோஷ்டத்தில் சிறப்பு வாய்ந்த நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவராக அண்ணாமலையார், பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு, துர்க்கை, மும்மூர்த்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, கஜலட்சுமி, ஞானசரஸ்வதி, மேற்கு நோக்கிய சனீஸ்வரருடன் கூடிய காலபைரவர், நவக்கிரகங்கள், நால்வர் உள்ளனர். இக்கோவில் விசே‌ஷ அமைப்பின்படி சுவாமியை தரிசனம் செய்து நவக்கிரகங்களை வலம் வந்தால் ‘ஓம்’ என்ற ஓங்கார வடிவில் பக்தர்களின் தரிசன சுற்று முடிவடையும். பொதுவாக சிவாலயங்களில் அம்பாள் சன்னிதியை தாண்டிய பிறகே நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். இக்கோவிலின் விசே‌ஷ அமைப்பின்படி இத்தலத்தில் அம்பாள் சன்னிதி தனியாக பலிபீடம் கொடி மரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

தல வரலாறு

ஒரு காலத்தில் சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது மாலை நேரத்தில் முனிவர் இளைப்பாறும் பொருட்டு சீடனிடம் அஸ்தி கலசத்தை கொடுத்து விட்டு சென்றார். சீடன் அதை திறந்து பார்த்தபோது அஸ்தி கலசத்தில் தங்க பூக்களாக இருந்தது. உடனே பயந்து அதை மூடி வைத்து விட்டான். சுகல முனிவர் வந்து மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்து காசிக்கு சென்றார்.

அங்கு கலசத்தில் அஸ்தியின் சாம்பலை பார்த்த சீடன் முன்பு நீங்கள் இளைப்பாறிய இடத்தில் கலசத்தில் தங்க பூக்கள்இருந்த விவரத்தை கூறினான். உடனே அவர் அதுவே காசியை விட புனிதமான இடம் என்று கூறி மீண்டும் அங்கு வந்து ருத்ர தீர்த்தம் என்று அழைக்கப்பட்ட தற்போது வெட்டு குளம் என்று அழைக்கப்படுகிற குளத்தின் கரையில் காசிவிஸ்வநாதர்–விசாலாட்சி ஆலயம் அமைத்து அக்குளத்திலேயே தனது தாயாரின் அஸ்தியையும் கரைத்து இங்கேயே தங்கி விட்டார். அப்போது அவர் தனது குடிலில் ஒரு பசுவை வளர்த்து வந்தார். ஒரு நாள் மேயச் சென்ற பசு தன்னை அறியாமலேயே புற்றின் மீது பாலை சுரந்தது. தினமும் அவ்வாறே செய்து வந்தது. மேயச் சென்ற பசு ஏன் பாலை கொடுக்கவில்லை என்று எண்ணி ஒன்றும் புரியாமல் திகைத்தார். முனிவர் ஒருநாள் மேய்ச்சலுக்கு சென்ற பசுவை பின் தொடர்ந்து சென்றார். பசு புற்றின் மீது பால் சுரப்பதை கண்ட அவர், ஒரு தடியால் பசுவை அடித்தார்.

பசு உடனே கோபமுற்று புற்றை முட்டியது. புற்று மூன்று பிளவாக பிளந்து உள்ளே இருந்த லிங்கம் வெளிப்பட்டது. பின்னர் பசு ஓடிச்சென்று தெற்கு திசையில் இருந்த குளத்தில் விழுந்து இறந்தது. உடனே சிவ பெருமான் ரி‌ஷப வாகனத்தில் கயிலாய காட்சி கொடுத்து பசுவை உயிர்த்தெழ செய்தார். பின்னர் பசுவின் பால் அபிஷேகத்தால் நான் மிகவும் சந்தோ‌ஷம் அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று பசுவிடம் கேட்டார். அதற்கு பசு, தன்னிடம் இருந்து கிடைக்கும் பொருட்கள் எல்லாம் சிவனுக்கே அர்ப்பணம் ஆக வேண்டும் என்று கேட்டது. பரமேஸ்வரனும் மிகவும் மகிழ்ந்து பசு கேட்ட வரத்தை கொடுத்தார். அன்று முதல் பசுவிடம் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவை பஞ்ச கவ்யம் என்றழைக்கப்பட்டு புனிதமான பொருட்களாக ஈசனுக்கு இன்றும் அபிஷேகத்துக்கு உகந்ததாக ஆனது. சுகல முனிவரும் தன் தவறை உணர்ந்து ஈசனை வணங்கி பெரும்பேறு பெற்றார்.

ஆதிசே‌ஷன் வழிபாடு

மகாவிஷ்ணு துயில் கொள்ளும் அஷ்ட நாகங்களான வாசுகி, கார்க்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கன், சங்கபாலன், குளிகன், அனந்தன் ஆகிய அனைவருக்கும் தலைவரான ஆதிசே‌ஷன் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது உண்டான வி‌ஷத்தை ஈசன் உண்டதால் தனக்கு ஏற்பட்ட தோ‌ஷத்தை போக்க வழி தேடினார். அப்போது பாதாளத்தில் இருந்து தோன்றிய பாதாளேஸ்வரரை  வழிபட்டால் தோ‌ஷம் நீங்கும் என்று அசரீரி கேட்டது. ஆதிசே‌ஷன் தனஞ்செய முனிவராக மனித முகம், சர்ப்ப உடலுடன் தோன்றி இத்தலத்திற்கு வந்து பசு முட்டியதால் உடைந்த இந்த லிங்கத்தை சேர்த்து வழிபட்டு தன் தோ‌ஷம் நீங்கப் பெற்றார். ஆதிசே‌ஷனும், தனஞ்செய முனிவராக சுவாமியை வணங்கிய நிலையில் தனி சன்னிதியில் வீற்றிருந்து ராகு–கேது தோ‌ஷ நிவர்த்தி வழங்கு கிறார். இந்த விவரங்கள் தருவநாடி, சப்தரிஷி நாடி என்றழைக்கப்படும் நாடி ஜோதிட ஓலைச் சுவடிகளில் குறிப்பிட்டு தோ‌ஷ பரிகாரங்கள் செய்ய வழிபடச் சொல்கிறது.

பாதாளத்தில் இருந்து சுயம்பு லிங்கமாக புற்று மண்ணால் ஆன சர்ப்ப புரீஸ்வரர் என்றழைக்கப்படும் நாகநாத சுவாமிக்கும், அம்பாள் அமிர்த நாயகிக்கும் அபிஷேக, ஆராதனை, பூஜைகள் செய்து வழிபட்டால் பூமியின் புதல்வனான செவ்வாயின் தோ‌ஷம் நீங்கும். முன் ஜென்ம வினையால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும் என தலபுராணம் கூறுகிறது.

குழந்தை பாக்கியம்

சிவபெருமான் பார்வதி தேவியுடனும், குழந்தையான சுப்பிர மணியருடன் காட்சி தரும் கோலம் தான் சோமாஸ் கந்தர். இவர் தைப்பூச தினத்தன்று பாமணி ஆற்றில் தீர்த்தம் கொடுப்பார். இவருக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அபிஷேகம்,  பூஜைகள் செய்து வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் வலம் வரச் செய்து தரிசனம் செய்து நைவேத்திய பிரசாதத்தை வினியோகம் செய்து வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருவிழாக்கள்

இக்கோவிலில் வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த விழாவில் 9 நாட்களும் சுவாமி, அம்பாள், சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். கடைசி நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும். தமிழ்ப்புத்தாண்டு, சித்ராபவுர்ணமி, ஆடிப்பூரம், ஆவணி மூலம், புரட்டாசி நவராத்திரி, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் நடைபெறும். சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் அடுத்த மாதம் ( ஏப்ரல்) 2–ந் தேதி நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தூரத்தில் பாமணி ஆற்றின் வடபுறம் கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ், ரெயிலில் சென்றால் 1 மணி நேரத்தில் கோவிலை அடையலாம்.

–செந்தூர் திருமாலன்.

பச்சை திராட்சை நிவேதனம்

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற போரில் முசுகுந்த சக்கரவர்த்தி தேவர்களுக்கு ஆதரவாக சென்று அசுரர்களை போரிட்டு வென்றார். அதற்கு இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) அவருக்கு பரிசாக வழங்கினான். அவர் அந்த லிங்கத்துடனும், திராட்சையுடனும் திருவாரூர் தியாகேசர் சன்னிதிக்கு வந்தார். அப்போது திருப்பாதாளேசுவரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று நிவேதனம் செய்வாயாக என்று அசரீரி கேட்டது. இதையடுத்து அவர் இங்கு வந்து திருப்பாதாளேஸ்வரரை பணிந்து திராட்சையை நிவேதனம் செய்தார். அதுமுதல் இங்கு கொடி முந்திரி எனப்படும் பச்சை திராட்சை சிறப்பு நிவேதனம் செய்யப்படுகிறது.

மாம்பழச்சாறு அபிஷேகம்


திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது 4 மாங்கனிகள் தோன்றின. அதை எடுத்த பிரம்மன் ஒன்றை விநாயகருக்கும், மற்றொன்றை ஆறுமுகனுக்கும் கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு, நான்காவது கனியை இத்தலத்திற்கு கொண்டு வந்து நாகநாதசுவாமிக்கு சாறு பிழிந்து அபிஷேகம் செய்தார். பிறகு அதன் விதையை பிரம்ம தீர்த்தத்தின் வட   கரையில் ஊன்றினார். இதனால் மாமரம் இத்தல விருட்சமாகிறது. இன்றும் நாகநாதருக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் நடப்பது விசே‌ஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், நதி என ஐந்து வகையாலும் சிறப்பு பெற்றது இத்தலம் ஆகும்.