துன்பங்களை போக்கும் ராகுகால பூஜை


துன்பங்களை போக்கும் ராகுகால பூஜை
x
தினத்தந்தி 31 March 2017 12:45 AM GMT (Updated: 30 March 2017 10:17 AM GMT)

ராகு கால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம்.

ராகு கால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம். ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் அருந்தலாம்.

வீட்டு பூஜை அறையை மெழுகி கோலமிட வேண்டும். சுத்தமான மணைப் பலகை ஒன்றின் மீது நுனி வாழை இலையை வைத்து (நுனி வடக்கு பார்த்து இருப்பது நல்லது), அதன் நடுவே சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மையத்தில் சிறிது துவரம் பருப்பைப் பரப்புங்கள். இந்த அமைப்பின் நடுவே குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கை வைத்து, அதனை துர்க்கையாக பாவித்து, பொட்டு வைத்து, பூ போட்டு பின்னர் விளக்கேற்ற வேண்டும். அதன் முன் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விட்டு, மூடியில் திரி போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.

செவ்வரளி மற்றும் மஞ்சள் நிறப் பூக்களைப் பயன்படுத்துங்கள். தெரிந்த துர்க்கை துதிகளைச் சொல்லுங்கள். துர்க்கை போற்றியினை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். தூப, தீபம் காட்சி வணங்க வேண்டும். தயிர் சாதம், பால் பாயாசம் என உங்களால் இயன்ற நிவேதனங்களோடு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறினை சேர்த்து பானம் தயாரித்து அதையும் நைவேத்தியம் செய்யுங்கள். பூஜை முடிந்த பின்னர் யாரேனும் பெண்மணிக்கு பிரசாதங்களோடு இயன்ற மங்கள பொருட்களைக் கொடுத்து, நீங்களும் பிரசாதம் சாப்பிடுங்கள். ராகு காலம் முடிந்த பின்னர், பூஜித்த விளக்கு அமைப்பினை சற்று வடக்காக நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.

ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது. விளக்கேற்றுவதன் சரியான முறையை பார்க்கலாம்.

ராகுகால துர்க்கை பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். அப்போது எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.

ராகு கால நேரம் தொடங்கிய பிறகே எலுமிச்சைப் பழத்தை நறுக்க வேண்டும். அதற்கு முன்பே நறுக்கி வைத்தல் கூடாது. எலுமிச்சை தேவ கனி என்பதால், அதனை நறுக்கும்போது தோ‌ஷங்கள் ஏற்படும். எனவே பழத்தை நறுக்கும்போது ‘ஐம்’ என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பழத்தைப் பிழிந்து விட்டு மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும் போது மகாலட்சுமிக்கு உரிய ‘க்ரீம்’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது அவசியம். தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது ‘க்லீம்’ என்ற தேவியின் மந்திரத்தைக் கூற வேண்டும். எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது ‘சாமுண்டாயை விச்சே’ என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்தச் சொல்லுக்கு முப்பெரும் தேவியரான அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அருளை ஒருசேரத் தரும் சண்டிகா தேவியே அருள்க என்று பொருள்.

Next Story