ஆன்மிகம்

தல விருட்சங்களை தழைக்கச் செய்வோம் + "||" + Thala trees Will grow

தல விருட்சங்களை தழைக்கச் செய்வோம்

தல விருட்சங்களை தழைக்கச் செய்வோம்
திருக்கோவில்களில் வன நிழலுக்கிடையேதான் இறைவன் எழுந்தருளியிருக்கிறான். அந்த மரங்களே தல விருட்சங்கள் என்று பெயர் பெற்றுப் போற்றப்படுகின்றன.
சூரியனின் வெப்பத்தைக் தாங்கிக் கொண்டு, பூமிக்கும் பூமிவாழ் உயிரினங்ளுக்கும் நிழலைத் தந்து மரங்கள் குடையாக நிற்கின்றன. இலைகள் ஆவியாக வெறியேற்றும் நீரால்தான், வளி மண்டலத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்கிறது. இல்லையேல் காற்று வெப்பத்துடன் வறண்டுபோய் விடுகிறது.


மழை இல்லாவிட்டாலோ அல்லது குறைந்தாலோ என்னவாகும் என்பதை எண்ணிப்பாருங்கள். இந்த ஆண்டு கோடை தொடங்கும் முன்பே நீர்நிலைகள் வறண்டு போய்விட்டன. நிலத்தடி நீரும் குறைந்து போய்விட்டது. உச்சிச் சூரியனால் உஷ்ணம் அதிகரித்து வருகிறது. காடுகளும் அழிந்து கொண்டு வருகிறது. வனவிங்குகள் வாழ வழியில்லாமல் காட்டை விட்டு நாட்டுக்குள் நுழைகின்றன. எல்லாம் மழை இல்லாமையாலும், மரங்கள் குறைவதாலும் தான்.

இதற்காகத்தான் ஆதிகாலம் முதல் இன்று வரை மரங்களை வளர்க்கவும், சமூகக் காடுகளை உருவாக்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள் நம் முன்னோர்கள். இப்போதெல்லாம் மரம் நடு விழா ஒரு சம்பிரதாயத்துக்காகவே செய்யப்படுகிறது. சாலையை விரிவு படுத்துகிறேன் என்று பல்லாண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்களை வெட்டி விட்டு, பாலைவனமாக மாற்றுகிறார்கள். இவையெல்லாம் மாற நாடு முழுவதும் பசுமை பேணப்படவேண்டும்.

இதற்காகத்தான் ஆன்மிகத்தின் வாயிலாக மரங்கள் பேணப்பட்டு வந்தன; வருகின்றன. திருக்கோவில்களில் வன நிழலுக்கிடையேதான் இறைவன் எழுந்தருளியிருக்கிறான். அந்த மரங்களே தல விருட்சங்கள் என்று பெயர் பெற்றுப் போற்றப்படுகின்றன.

ஓரிடத்தின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப, ஆங்காங்கே சில மரங்கள் தோன்றித் தழைக்கின்றன. அந்த ஊரின் பெயரும் அங்கே தோன்றி அருளாட்சி செய்துவரும் இறைவனும் கூட தாவரங்களின் பெயராலேயே அழைக்கப்படுகின்றார்கள்.

உதாரணமாக ஊர் திருஇடைமருதூர் எனவும், கோவிலில் மருதமரம் தலவிருட்சமாகவும், சுவாமி மருதவாணர் என்றும் இருப்பதைக் காணலாம். அதே போல் ஊர் திருப்பராய்த்துறை என்றும், இறைவன் பராய்த்துறை நாதரென்றும், தலமரம் பராய் மரம் என்றும் இருப்பதையும் நாம் பார்க்கிறோம். வேல            மரங்கள் தலவிருட்சமாகவும், அத்தல இறைவன் வேல்காட்டுநாதராகவும், ஊர் திருவேற்காடு என்றும் அழைக்கப்படுகிறது. இப்படி எத்தனையோ சொல்லிகொண்டே போகலாம்.

சிவாலயம் என்றால் வில்வமும், விஷ்னு கோவில்கள் என்றால் துளசியும் தான் தலவிருட்சமாக இருக்கும் என்று எண்ணினால் அது தவறு. ஒவ்வொரு பழமையான கோவில்களிலும் நுழைந்து பார்க்கும் போது ஆலமரம், அரசமரம், வேப்பமரம், குருந்தமரம், வாகைமரம், மருதுமரம், கடம்பமரம், அத்திமரம் போன்ற மரவகைகள் மட்டுமில்லாது, பழம் தரும் மா, பலா, வாழை, நெல்லி போன்ற மரங் களும், செடிகொடி வகைகளும் கூட திருக்கோவில்களில் தலவிருட்சங் களாக இருக்கின்றன. இவைகள் எல்லாம் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை மரங்கள் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

திருக்கோவில்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம், எப்படி முக்கியமோ, அதுபோல தலவிருட் சமும் முக்கியத்துவம் பெறுகிறது. அப்படிப்பட்ட கோவில்களில் தான் இறையாற்றால் நிறைந்து விலங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. கோவிலில் வெறும் கல் கட்டிடத்துக்குள் தெய்வ உருவங்கள் அமர்ந்திருப்பதை விட, இயற்கையோடு இயைந்து குழுமையான வனச் சூழலில் வீற்றிருந்தருளும் தெய்வங்களுக்கு சக்தி அதிகம். வணங்கும் பக்தர்களின் உடலும் உள்ளமும் கூட இங்கு வந்தால் குளிர்ச்சியைப் பெறும்.

பாற்கடலில் எழுந்த ஆலகால வி‌ஷம் உலக உயிர்களை அழித்து விடக்கூடாது என்பதற்காக, சிவபெருமான் அதை உண்டு தன் கழுத்தில் அடக்கி வைத்து உலக உயிர்களைக் காப்பாற்றினார். அதுபோல மனிதர்களும், விலங்குகளும் வெளியிடும் கரியமிலவாயு என்னும் கார்பன்டை ஆக்ஸைடு என்ற வாயுவை, தாவரங்கள் உட்கொண்டு விட்டு, சூரியனிடம் இருந்து ஒளிச்சேர்க்கையின் மூலம் பச்சயம் தயாரித்து, நாமெல்லாம் உயிர்வாழ ஆக்சிஜன் என்னும் தூய்மையான வாயுவை வெளிப்படுத்துகின்றன. இதனால் மரங்களும் மகேசனும் ஒன்று என்றே சொல்லலாம்.

எனவே, உலகில் உயிர்கள் வாழ, மழை வளம் பெற. மண்வளம் சிறக்க மரங்களை வளர்ப்பது அவசியம். குறிப்பாகத் தலவிருட்சங்களை அதிக அளவில் உருவாக்கி பேணிக்காப்பது நமது தலையாய கடமையாகிறது.

தற்போது பெரும்பான்மையான கோவில்களில் தலமரங்கள் ஒன்றோ இரண்டோ இருக்கின்றன. சில கோவில்களில் தலமரம் என்னவென்றே தெரியவில்லை. இன்னும் சில கோவில்களில் தலமரம் பெயர் தெரிந்தாலும் அது அங்கே வைத்து பேணப்படுவதில்லை. இது முற்றிலும் தவறு. கோவிலில் குறிப்பாக நந்தவனங்களில், அந்தந்த இடத்துக்கு ஏற்ற தலமரங்கள் ஏராளமாக வளர்க்கப்பட்டு அது சோலை போலக் காட்சி தரவேண்டும்.

இலங்கை அனுராதபுரத்தில் உள்ள புத்தர் ஆலயத்தில், இந்தியாவிலிருந்து சென்ற அசோகரின் மகள் சங்கமித்திரா போதிமரம் (அரசமரம்) ஒன்றை நட்டுவைத்தார். அது இன்று அங்கே சிறியதும் பெரியதுமான ஆயிரக்கணக்கான போதிமரங்களை பரப்பி குளுமை தருவது கண்கொள்ளாக் காட்சி.

கடம்பவனம் என்று புகழப்பட்ட மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் பிரகாரத்தில், பட்டுப்போன கடம்ப மரத்தூண் உலோக கவசம் சாத்தி வழிபடப்படுகிறது.

சில இடங்களில் மரம் போல கல்லில் வடித்து அதனைத் தலவிருட்சம் என்று போற்றுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல. கோவில்களிலும் கோவிலைச் சுற்றிலும் ஏன் அந்தந்த ஊர்களிலும், தலவிருட்சங்களும் அதனைச் சார்ந்த மரக்காடுகளும் உருவாக்கபடவேண்டும்.

மரமே மகேசனாக வழிபடப்படும் பரக்கலக்கோட்டை பொதுவுடையார் கோவில், இறைவன் இயற்கையோடு இயைந்தவன் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

மரமே மகேசன் என்பதில் கூட, ஒரு விஞ்ஞான பூர்வமான உண்மை பொதிந்து கிடக்கிறது.

–டாக்டர் ச.தமிழரசன், தஞ்சாவூர்.