ராமர் காலடிபட்ட இடங்கள்


ராமர் காலடிபட்ட இடங்கள்
x
தினத்தந்தி 5 April 2017 10:20 AM GMT (Updated: 5 April 2017 10:19 AM GMT)

அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலும், அங்கிருந்து கடலில் பாலம் அமைத்து இலங்கை வரையிலும் கால் நடையாகவே யாத்திரை புரிந்தவர் ராமபிரான்.

திருமாலின் அவதாரங்களில் ஒப்பற்றது ராம அவதாரம். அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலும், அங்கிருந்து கடலில் பாலம் அமைத்து இலங்கை வரையிலும் கால் நடையாகவே யாத்திரை புரிந்தவர் ராமபிரான். அவர் காலடி தடங்கள் பதிந்த சில இடங்களைப் பார்ப்போம்.

அயோத்தி: இது ராமர் பிறந்த புண்ணிய பூமி. துளசிதாஸர், கம்பர், தியாகராஜர் போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த ராம நாம ஊற்றின் முக்கிய தலம். வாரணாசி – லக்னோ மார்க்கத்தில் அயோத்தியா ரெயில் நிலையம் உள்ளது.

பக்ஸர்:
சித்தாசிரமம், வேத சிரா, வேத கர்ப்பா, க்ருஷ் என்று பல பெயர்கள் கொண்ட ‘பக்ஸர்’ என்ற இடமும் பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு பலை, அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம். பாட்னா – மொகல்சராய் ரெயில் மார்க்கத்தில் முக்கிய நிலையம் இது.

அகல்யாசிரமம்: கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்ற இடம் இது. சீதாமடி – தர்பங்கா ரெயில் மார்க்கத்தில் கம்தவுல் என்ற ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 15 மைல் தொலைவில் அஹியாரி என்ற ஊர் உள்ளது. அங்கு கவுதம குண்ட் என்ற இடம் இருக்கிறது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்றால், அஹல்யா குண்ட் எனப்படும் அகல்யாசிரமத்தை அடையலாம்.

ஜனக்பூர்:
மிதிலை அரசர் ஜனகர் அரசாட்சி புரிந்த இடம் ஜனக்பூர். இது சீதாமடியில் இருந்து ஜனக்பூர் சாலையை அடைந்து, அங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரம் சென்றால் ஜனக்பூரை அடையலாம். இங்குள்ள பெரிய மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

ராம்டேக்: இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ராமர், லட்சுமணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது இங்கு சிறிது காலம் தங்கி இருந்தனராம். ஆதலால் இது புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் – சிவனிஜபல்பூர் மார்க்கத்தில் தும்சர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள இடமே ராம்டேக்.

சபரி ஆசிரமம்: சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை ராமர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புராதன நகரம் ‘ஹம்பி’. இங்கே துங்கபத்ரா நதி ஓடுகிறது. இதன் அருகே உள்ள மலை ‘மதங்க பர்வதம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்தும், சென்னையிலிருந்தும் செல்லலாம். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ராவணனை வதம் செய்த பாவம் நீங்க, ராமன் சிவலிங்க பூஜை செய்த இடம் இது.

Next Story