ஆன்மிகம்

பார்வதி தேவி விரதம் + "||" + Goddess Parvati fasted

பார்வதி தேவி விரதம்

பார்வதி தேவி விரதம்
சித்திரை மாதத்தில் வரும் சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் அன்னை பார்வதி தேவியை துதித்து கடைப்பிடிக்கப்படுவது இந்த விரதம்.
சித்திரை மாதத்தில் வரும் சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் அன்னை பார்வதி தேவியை துதித்து கடைப்பிடிக்கப்படுவது இந்த விரதம். இந்த விரதம் மேற்கொள்பவர்கள் அம்பாளுக்கு பூஜை செய்து, சர்க்கரையை நைவேத்தியம் செய்து வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.


சித்திரைமாதம் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவருக்கு பூஜை செய்ய வேண்டும். பைரவருக்கு தயிர்சாதம் படைத்து விரதம் இருந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். நமக்கு தீங்கு செய்த எதிரிகள்  பாதிக்கப்படுவர். வாழ்வில் வளம் சேர்க்க இந்த விரதம் ஏற்றது. இதனை பரணி விரதம் என்பர். சித்திரை சுக்லபட்சத்தின் திரிதியை திதியில் உமாமகேஸ்வரரை துதித்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அன்று தான, தருமங்கள் செய்வதால் இப்பிறவியில் வளமான வாழ்வும் மறுபிறவியில் கயிலாச லோக பிராப்தியும் கிடைக்கும். இதை சவுபாக்கிய சயனவிரதம் என்பர். சித்ராபவுர்ணமியன்று கடைப்பிடிக்கப்படும் சித்ரகுப்த விரதம் ஆயுளை அதிகரிக்க செய்யும். இந்த விரதம் இருப்போருக்கு புண்ணியங்கள் சேரும்.

வராக மூர்த்தி இளைப்பாறிய தலம்

இரண்யாட்சன் என்ற அரக்கன், பூமியை கடலுக்குள் கொண்டு சென்று ஒளித்து வைத்தான். பூமியை மீட்பதற்காக திருமால், வராக அவதாரம் எடுத்தார். இது திருமால் எடுத்த மூன்றாவது அவதாரம் ஆகும். வராக மூர்த்தியாக அவதரித்தபோது, திருமாலின் கர்ஜனை ஈரேழு உலகங்களையும் உலுக்கும் விதத்தில் இருந்தது. நான்கு வேதங்கள் நான்கு பாதங்களாகவும், புராணங்கள் செவிகளாகவும், சூரிய சந்திரர் இரு கண்களாகவும், நாகராஜன் வாலாகவும், யாகங்கள் கோரைப் பற்களாகவும், அனைத்து மந்திரங்களும் தேக அவயங்களாகவும் கொண்டு, கட்டை விரல் அளவிலேயே வராகராக இறைவன் வடிவெடுத்தார். சில நொடிகளில் அந்த உருவம் பிரமாண்ட வளர்ச்சியுற்று சமுத்திரத்தில் நுழைந்தது. அங்கு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனை சம்ஹாரம் செய்தார், வராக மூர்த்தி. பின்னர் பூமாதேவியை காத்து ரட்சித்து ‘பூவராகமூர்த்தி’ என்ற பெயரையும் பெற்றார்.

இரண்யாட்சனுடன் போரிட்டதால் ஏற்பட்ட களைப்பு நீங்க, வராகமூர்த்தி ஒரு இடத்தில் இளைப்பாறினார். அப்போது அவரது தேகத்தில் இருந்து வியர்வைத் துளிகள் பெருக்கெடுத்து ஆறாக ஓடின. அது ஒரு புனித தீர்த்தக் குளமாக மாறியது. சுவாமி இளைப்பாறிய இடம் ஸ்ரீ முஷ்ணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அவரது தேகத்தில் இருந்து உருவான தீர்த்த குளம் ‘நித்ய புஷ்கரணி’ என்று பெயர் பெற்று விளங்குகிறது. இத்தலத்தில் பூவராக சுவாமி சங்கு, சக்கரம் ஏந்திய இருகரங்களையும், பாண்டுரங்கனைப்போல இடுப்பில்  கை வைத்தபடி தரிசனம் தருகிறார்.

முத்தான வாழ்வுக்கு சித்திரை விஷூ

சித்திரை மாதத்தை ‘சித்திரை விஷூ’ என்றும் கூறுவர். சித்திரை வருடபிறப்பை கேரள மக்கள் விஷூக்கனி காணல்    என்ற பெயரில் கொண்டாடுவார்கள். வருடப்பிறப்பிற்கு முதல்நாள் பூஜை அறையை சுத்தம் செய்து வீட்டில் உள்ள பொன், வெள்ளி, நகைகள், பணம், நிலைக் கண்ணாடி, வெற்றிலைபாக்கு, மலர்கள், பழங்கள் முதலிய மங்கள பொருட்களை, ஒருதட்டில் வைத்து பூஜை அறையில் வைப்பார்கள். சித்திரை வருட பிறப்பன்று வயதான பெண் குளித்து பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு, வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்புவார். அவர்கள் கண்கள் மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு சென்று கண்களை திறந்து சுவாமி படத்தை வணங்கி தட்டில் வைத்திருக்கும்  பொருட்களை பார்க்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பார்கள். இதனை விஷூ கை நீட்டம் என்பர். இவ்வாறு செய்தால் இனிவரும் நாட்களில் முத்தான வாழ்வு அமையும். மகிழ்ச்சி நிரம்பும். மங்கள பொருட்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.