கல்வி ஞானம் தரும் வராகபெருமாள்


கல்வி ஞானம் தரும் வராகபெருமாள்
x
தினத்தந்தி 11 April 2017 2:00 AM GMT (Updated: 10 April 2017 12:35 PM GMT)

கல்விக் கண் திறப்பவர். உயர் கல்விக்கு உறுதுணையாக இருப்பவர். ஞானபிரான் என்று பக்தர்களால் பிரியமுடன் அழைக்கப்படுவர்.

ல்விக் கண் திறப்பவர். உயர் கல்விக்கு உறுதுணையாக இருப்பவர். ஞானபிரான் என்று பக்தர்களால் பிரியமுடன் அழைக்கப்படுவர்.

யார் இவர்?

ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள்தான் இத்தனை பெருமைகளுக்கும் உரியவர். ஆம்! இந்த ‘ஆதிவராகப் பெருமாளுக்கு திருச்சியில் தனி ஆலயம் உள்ளது.

ஆலய அமைப்பு

சாலையை விட்டு உள்ளடங்கி ஊரின் நடுநாயகமாக விளங்குகிறது இந்த அழகிய ஆலயம். சுற்றிலும் திருமதிற் சுவர்கள். முகப்பில் ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான அழகிய சிறப்பு மண்டபம்.

கருடகம்பம் என அழைக்கப்படும் நெடி துயர்ந்த ஸ்தூபி, பலி பீடம், கொடிமரம், இவற்றைக் கடந்ததும், கருடாழ்வார் சன்னிதி உள்ளது.

கருடாழ்வார் இறைவனின் கருவறையை நோக்கி பார்த்துக் கொண்டிருக்க, ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

அடுத்தது மகாமண்டபம். இந்த மண்டபத்தின் மேல்புறம் ஆண்டாளின் நின்ற நிலை திருமேனி உள்ளது. வடக்கு புறம் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனி ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.

அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் வடதிசையில் காலிங்கநர்த்தன கண்ணனின் திருமேனி இருக்கிறது. கருவறையில் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். கருவறை வாசலில் ஜெயன், விஜயன் என துவாரபாலகர்களின் சுதை வடிவங்கள் உள்ளன.

பெருமாளுக்கு நான்கு கரங்கள். வலது மேல் கரத்தில் சக்கரத்தையும், இடது மேல் கரத்தில் சங்கையும் தாங்கியிருக்கிறது. வலது கீழ் கரம் இறைவி பூமா தேவியின் பாதத்தை பிடித்துக் கொண்டிருக்க, இடது கீழ் கரம் மடியில் அமர்ந்திருக்கும் பூதேவியை அணைத்துக் கொண்டிருக்கிறது.

பெருமாளின் திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம். இவர் கிழக்கு திசை நோக்கி சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாளுக்கு உற்சவ மூர்த்தி கிடையாது. கருவறை ஆராதனை மட்டுமே மூலவருக்கு நடைபெறுகிறது. மற்றைய அனைத்தும் உற்சவ மூர்த்தியான ராமபிரானுக்கே நடைபெறுகிறது.

ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணன், அனுமன் ஆகியோர், பெருமாள் இருக்கும் கருவறையில் இருந்தபடியே பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.

சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் நிறைய ஆலயத்தின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது.

ஆதியில் புற்று வடிவில் எழுந்தருளிய பெருமாளுக்கு, அதன் பிறகே வடிவம் கொடுத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். தினசரி காலை, உச்சி, சாயரட்சை என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.

ராமபிரான்

சித்திரை மாதம் உத்திராட்டதி நட்சத்திரத்தன்று காவேரி நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். அன்று இரவு ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் வீதி உலா வருவார்கள்.

சித்திரை மாதம் ராம நவமி அன்று ராமபிரான் தன் துணைவி, தம்பியுடன் வீதி உலா வருவதுண்டு. அதே மாதம் பவுர்ணமி அன்று கஜேந்திர மோட்ச விழாவும், அன்று காலை 6 மணிக்கு ராமபிரான் சீதையுடன் பவனி வரும் நிகழ்வும் நடைபெறும்.

சித்திரை மாதப்பிறப்பன்று மூலவருக்கும், உற்சவமூர்த்தியான ராமபிரானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. அனைத்து உற்சவங்களும் இங்கு ராமபிரானுக்கே நடைபெறுவதால், ராமபிரானுக்கு மாதந்தோறும் திருவிழா நடைபெற்றபடியே இருக்கிறது.

ஆம்! இந்த ஆலயத்தில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவதும், அந்த விழாவின் போதெல்லாம் ராமபிரானும் சீதாபிராட்டியும் வீதியுலா வருவதும் சிறப்பம்சமாகும்.

சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி சுவாதி, ஆடி பூரம், ஆவணி கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி நவராத்திரி, விஜய தசமி, ஐப்பசி மூலம் மற்றும் தீபாவளி, கார்த்திகை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, தை சங்கராந்தி, மாசி புனர்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் ராமபிரானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன், வீதியுலா காட்சியும் உண்டு.

திருவிழாக்கள்

நவராத்திரி 10 நாட்களும் ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட சேவை நடைபெறுவதுடன், ராமர் வீதியுலா வருவார்.

கார்த்திகை மாதம் ஊஞ்சல் சேவையுடன் 10 நாட்கள் திருவிழா நடைபெறு கிறது. கார்த்திகை மாத கைசிக துவாதசி அன்று கருடகம்பத்திற்கு விசே‌ஷ அபிஷேக ஆராதனை நடைபெறும்.

ஆலயப் பிரகாரத்தின் தென்புறம் சக்கரத்தாழ்வார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி உள்ளது. அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங் களும் நடைபெறும்.

கல்வி கண் திறந்து, கல்வியில் உயர்நிலை அடைய இங்கு சேவை சாதிக்கும் ஆதி வராகபெருமாளை வேண்ட, அவரது அருள் அனைவருக்கும் கிட்டுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தினமும் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ளது இந்த ஆலயம்.

–ஜெயவண்ணன்.

Next Story