திருப்பம் தரும் திருப்பதி


திருப்பம் தரும் திருப்பதி
x
தினத்தந்தி 11 April 2017 2:30 AM GMT (Updated: 10 April 2017 12:53 PM GMT)

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வாழ்வில் திருப்பமான நிகழ்வுகள் நடைபெறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வாழ்வில் திருப்பமான நிகழ்வுகள் நடைபெறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. துன்பங்கள் நீங்கி இன்பம் பெருக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்பவர் களின் எண்ணிக்கை ஏராளம். திருப்பதி பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

* திருமலை 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குளிர் பிரதேசம். ஆனாலும் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்து விடும் என்பது அதிசயமான ஒன்றாகும். அவரது வியர்வையை பீதாம்பரத்தால் ஒற்றி எடுப்பார்கள்.

* திருமலையில் உள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிபருப்பு கேசரி போன்றவை தினமும் தயார் செய்யப்படுகிறது. ஆனால் இவற்றுள் லட்டு தான் முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு புதிய மண் சட்டியிலேயே பிரசாதம் நைவேத்தியமாக படைக்கப்படும். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பகிரகத்துக்கு முன்பாக உள்ள குலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. எனவே இறைவனின் முன்பாக வைக்கப்படும் தயிர்சாதம் பிரசாதமாக கிடைப்பதை, தங்கள் வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

* ஏழுமலையானுக்கு உடுத்தப்படும் பீதாம்பரம் பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஒன்றாகும். 6 கிலோ எடை கொண்ட பட்டுப் புடவை பீதாம்பரமே இறைவனுக்கு ஆடையாக அணிவிக்கப்படுகிறது. உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பார்கள். பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கிறார் கள்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புணுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புணுகும் சாத்துவார்கள். தினமும் காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை அபிஷேகம் நடைபெறும்.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் போன்றோர் பெருமாளுக்கு காணிக்கைகளை செலுத்தியுள்ளனர். ராஜேந்திர சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் போன்றோர் செய்த திருப்பணிகள், கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* வெள்ளிக்கிழமையிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் சத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதி உலா எழுந்தருள்வார்.

* திருமலை திருப்பதி கோவில் தல விருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும், தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம்பெற்றிருக்கும். ஆனால் திருமலையில் ஏழுமலையான் எந்தவித ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* திருப்பதி அலர்மேல்மங்கை தாயாருக்குரிய ஆடை கத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இந்த ஆடையை பயபக்தியுடன் தயாரிக்கின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர், குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்ட நீர் என்பதால் இதனை புனித நீராக பக்தர்கள் கருதுகின்றனர்.

* இங்கு 1180 கல்வெட்டுகள் உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story