ஆன்மிகம்

‘‘முழு மனிதன் யார்?’’ + "||" + Who is the man?

‘‘முழு மனிதன் யார்?’’

‘‘முழு  மனிதன்  யார்?’’
மனிதனாகப் பிறப்பதே சிறப்பிலும் சிறப்பு. அதில் முழுமனிதனாக வாழ்வது அரிதிலும் அரிது. மனிதம் பல்வேறு சூழ்நிலைகளில் முழுமை அடைகிறது.
னிதனாகப் பிறப்பதே சிறப்பிலும் சிறப்பு. அதில் முழுமனிதனாக வாழ்வது அரிதிலும் அரிது. மனிதம் பல்வேறு சூழ்நிலைகளில் முழுமை அடைகிறது. மனிதம் பரிபூரணம் அடைய பல வழிகள் உண்டு. ஒவ்வொரு வழியிலும் மனிதம் பரிபூரணம் அடைய அந்தந்த வழியில் மனிதன் மேம்பட்டு, சிறந்து விளங்கிட வேண்டும்.

நாம் மனிதம் பரிபூரணம் அடைய இங்கே எடுத்துக்கொண்ட வழிகளில் ‘‘கலந்தாலோசித்தல்’’ என்பது சிறந்த வழியாகும்.

ஒவ்வொரு மனிதனும் கலந்தாலோசிக்க பலதரப்பட்ட வாழ்க்கை அம்சங்கள் உள்ளன. அவை:

1) குடும்ப ஆலோசனை, 2) கல்வி ஆலோசனை, 3) நிர்வாக ஆலோசனை, 4) மருத்துவ ஆலோசனை, 5) குழந்தை நல ஆலோசனை, 6) மார்க்க சம்பந்தமான ஆலோசனை, 7) சமாதான ஆலோசனை, 8) நல்லிணக்க ஆலோசனை, 9) மனநல ஆலோசனை, 10) சீர்திருத்த ஆலோசனை.

இதுபோன்ற எண்ணிலடங்கா ஆலோசனைகள் உண்டு.

நாம் வாழ்வில் எதை செய்ய முனைந்தாலும் நம்மைவிட வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் சிறந்த விளங்குவோரிடம் கலந்தாலோசித்து அந்த காரியத்தில் இறங்கவேண்டும். இவ்வாறு நடந்து கொள்பவரே முழுமனிதர் ஆவார். இதன்மூலம் அவரின் மனிதம்
பரிபூரண நிலையை அடைந்து விடுகிறது.

ஹஸன் பஸரீ (ரஹ்) இதுபற்றி கூறுவதாவது:

‘மனிதர்கள் மூன்று வகையினர் ஆவர். முதலாவது வகையினர் முழு மனிதர்கள் ஆவர். இரண்டாவது வகையினர் அரை மனிதர்கள் ஆவர். மூன்றாவது வகையினர் மனிதர்களே இல்லாதவர் ஆவர். முதலாம் வகையினர் முழு மனிதர்கள் யாரென்றால், அவர்கள் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள்; பிறரிடம் ஆலோசனைகளை கேட்பவராகவும் இருப்பார்கள். இவர்கள்தான் மனிதர்களிலேயே முழு மனிதர்கள்’.

‘இரண்டாம் வகையினர் அரை மனிதர்கள். யாரெனில் சுயபுத்தி உடைய புத்திசாலியாக இருப்பார்கள்; எனினும் பிறரிடம் ஆலோசனை செய்யமாட்டார்கள். இவர்கள்தான் மனிதர்களிலேயே அரைமனிதர்கள்’.

‘மூன்றாம் வகையினர் மனிதர்களே கிடையாது. இவர்கள் எப்படிப்பட்டவர்களென்றால், இவர்களுக்கு சுயபுத்தியும் கிடையாது. பிறரின் புத்தியையும், ஆலோசனைகளையும் கேட்கவும் மாட்டார்கள். இவர்கள்தான் மனிதர்களிலேயே மனிதத்தன்மையை இழந்தவர்கள்’.

இம்மூன்று வகையினரில் நாம் எந்த வகையினராக இருக்க விரும்புகிறோம் என்பதை புரிந்து செயல்படவேண்டும். இஸ்லாமியப் பார்வையில் ஆலோசனையில் ஈடுபாடு கொள்வது இறை வணக்கத்திற்குச் சமமானது.  

இறைவணக்கம் புரிவது நன்மைகளை பெற்றுத்தரவல்லது. இதுபோன்று ஆலோசனை கேட்பது, ஆலோசனை கூறுவது, ஆலோசனை செய்யப்படும் சபையில் இருப்பது போன்ற அனைத்தும் நன்மைகள் பெற்றுத்தரும் காரியங்களே.

ஆலோசனைகள் செய்யப்படும்போது, பலதரப்பட்ட மனிதர்களின் சிந்தனையில் தோன்றிய விலைமதிக்கமுடியாத அறிவு பொக்கி‌ஷங்களின் குவியல்கள் வெளிப்படுகின்றன. நமது சிந்தனையில் உதித்த எண்ணங்களை விட பிறரின் சிந்தனை உயர்வாகவும், காலத்திற்கு தோதுவாகவும், சூழ்நிலைகளுக்கு ஏற்றதாகவும் இருக்கலாம். அவற்றை செயல்படுத்தும் போது வெற்றி கிட்டலாம்.

மேலும் ஆலோசனை செய்யும்போது அனைவரின் உள்ளங்களும் ஒன்றுபடுகின்றன. பகை உணர்வு மறைந்து பகைவர்களையும் நேசர்களாக மாற்றிவிடும் ஒரு சக்தி ஆலோசனையில் உள்ளது.

ஆலோசனை புரியாத ஒரு காரியம் வெற்றி அடைந்தாலும், அது நிரந்தரமான வெற்றி என கூறிவிடமுடியாது. ஆலோசனைகளை கேட்டு எடுக்கப்பட்ட ஒரு காரியம் தோல்வியில் முடிந்தாலும், அது தற்காலிகமானதுதான். அதன் முடிவு வெற்றியாகவும், அபிவிருத்தியாகவும் அமையும்.

‘‘எவன் ஆலோசனைகளை கேட்டு செயல்படுகிறானோ, அவன் கை சேதம் அடைவது கிடையாது’’ என்பது நபிமொழியாகும்.

அல்லாஹ் மனித சமுதாயத்தை படைக்க நாடியபோது, வானவர்களிடம் தனது எண்ணத்தை தெரிவித்தான். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் அனைத்து காரியத்திலும் தோழர்களுடன் ஆலோசனைகள் செய்தார்கள்.

‘‘சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்’’ (திருக்குர்ஆன் 3:159) என்ற வசனத்தில் நபி அவர்களையும், ஆலோசனையின்படி செயல்படுமாறு இறைவன் கட்டளையிட்டு இருக்கிறான். இதுபோலவே அனைவரும் செயல்படவேண்டும் என்று மனிதர்கள் அனைவருக்கும் இறைவன் கற்றுக்கொடுத்திருக்கிறான்.

இறைவிசுவாசிகளின் குணாதிசயங்களை குறித்து இறைவன் விவரிக்கும் போது இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

‘‘அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்’’ (திருக்குர்ஆன் 42:38)

‘‘தமது தோழர்களிடம் அதிகமான முறையில் ஆலோசனை செய்த நபி (ஸல்) அவர்களை விட வேறெந்த நபரையும் நான் கண்டதில்லை’’ (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) திர்மிதி)

ஆலோசனை வழங்கக்கூடியவர் நம்பத்தகுந்தவராகவும், பிறர் நலன் நாடுபவராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவரிடம் தான் ஆலோசனை கேட்க வேண்டும்.

‘‘ஆலோசனை வழங்கக்கூடியவர் நம்பத் தகுந்தவராக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (நபிமொழி)

‘‘மார்க்கம் என்பதே உபதேசம்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (முஸ்லிம்)

அனைத்து காரியங்களிலும் அதை தொடங்கும் முன் ஆலோசனை செய்து கொள்வது இறைவன், இறைத்தூதர் ஆகியோரின் நடைமுறையாக அமைந்துள்ளது. அவர்கள் வழி நாமும் நடந்து எந்த ஒரு செயலை செய்யும் முன்பு அது தொடர்பாக ஆலோசனைகள் செய்து அதன்படி நடந்தால் இறைஅருளால் வெற்றியை பரிசாக பெறலாம்.

மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.