யானையாக பிறந்த பாண்டிய மன்னன்
தூய்மையான பக்தி கொண்டு வணங்குவோருக்கு இத்தலத்து பெருமாள் மோட்சம் அளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குவது கபிஸ்தலம் எனப்படும் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில். இந்த ஆலயம் தஞ்சை மாவட்டம் திருவையாறு–கும்பகோணம் சாலையில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. கபி என்ற சொல்லுக்கு குரங்கு என்று பொருள். ராமபக்தனான அனுமனுக்கு, திருமால் இத்தலத்தில் ராமபிரானாக காட்சி அளித்ததால் ‘கபிஸ்தலம்’ என பெயர் ஏற்பட்டது.
‘கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா, தீ
மாற்றமும் சாரா வகை அறிந்தேன்– ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக்கிடக்கும் உள்ளத்தெனக்கு’
என்று திருமங்கை ஆழ்வார் ஆற்றங்கரைக் கண்ணனே என்று பாடியதால் பெருமாளை கண்ணன் என்றும் அழைப்பர். இத்தலத்தில் மூலவர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கியபடி புஜங்க சயனராக ஆணைக்கருளியவராக பாம்பணையில் பள்ளி கொண்டபடி காட்சி தருகிறார். தாயார் ரமாமணி வல்லிக்கு தனி சன்னிதி உள்ளது. உற்சவர் வரதராஜ பெருமாள். தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி, கபில தீர்த்தம்.
தல வரலாறு
இந்ரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் ஏகாதசி தோறும் விரதம் இருப்பது வழக்கம். எப்போதும் நாராயணனை நினைத்து தவமிருப்பார். அச்சமயத்தில் ஒருமுறை அகத்திய முனிவர் தன் சீடர்களுடன் மன்னனை காண வந்தார். பகவானை நினைத்து தியானத்தில் இருந்த மன்னன், அகத்தியரை கவனிக்கவில்லை. ஆணவத்தில் தன்னை அவமரியாதை செய்வதாக கருதிய அகத்தியர், மன்னனை யானையாக போகும்படி சபித்தார். சாபம் உடனே பலித்தது. மன்னன் கஜேந்திரனாக (யானை) பிறந்தான். ஒரு குளத்தில் தாமரை மலர் எடுத்து வந்து தினமும் பகவானை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.
புகூ என்ற கந்தர்வன் தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து கபிஸ்தலத்தில் உள்ள குளத்தில் குளிப்பது வழக்கம். ஒருநாள் அந்தக்குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த காசிப முனிவரின் காலை கந்தர்வன் பிடித்து இழுத்தான். உடனே கோபம் கொண்ட முனிவர் அவனை முதலையாக போகும் படி சாபமிட்டார். கந்தர்வன் முதலையாக மாறி பெருமாளிடம் சாபவிமோசனம் வேண்டி இந்த குளத்தில் இருந்து பிரார்த்தனை செய்து வந்தான். முதலையாக மாறி இருந்த கந்தர்வன், ஒரு நாள் மலர் பறிக்க வந்த கஜேந்திரனின் காலை பிடித்துக் கொண்டான். முதலையின் பிடியில் இருந்து யானை தனது காலை விடுவிக்க முயல, யானையை முதலை தண்ணீருக்குள் இழுக்க, ஓராயிரம் வருட காலங்கள் இந்த போராட்டம் நீடித்தது.
கடைசியாக கஜேந்திரன், பகவானின் பாதத்தை சரணடைந்து ‘ஆதிமூலமே’ என்றழைத்து பிரார்த்தனை செய்தான். கருணா மூர்த்தியான பகவான் ஸ்ரீமன் நாராயணன் சங்கு, சக்கரதாரியாக கருடன் மீது விரைந்து வந்து தன் சக்கராயுதத்தால் முதலையை சம்ஹாரம் செய்தார். முனிவரின் சாபம் நீங்கப் பெற்ற முதலை, கந்தர்வனாக ஆனது. கஜேந்திரனுக்கு பெருமாள் மோட்சம் அளித்து தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
தூய்மையான பக்தி கொண்டு வணங்குவோருக்கு இத்தலத்து பெருமாள் மோட்சம் அளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. வலது கரத்தில் சின் முத்திரையுடன் ஆதிமூல பெருமாள் பள்ளி கொண்ட திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். நாபிக் கமலத்தில் பிரம்மன் அமர்ந்திருக்கிறார். பொற்றாமரை வல்லி தாயார், கனகவல்லி தாயார் உடனிருக்கின்றனர். இங்கு சக்கரத்தாழ்வார், நரசிம்மருக்கு தனி சன்னிதிகள் உள்ளன. வருடந்தோறும் ஆடி மாதம் கஜேந்திர மோட்சம் உற்சவம் 3 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரை மாதம் உற்சவம், ஆடிப்பூரம், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, இராபத்து, பகல்பத்து உற்சவம் நடைபெறும். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் பஸ்சிலும் ஏறி இத்தலத்துக்கு செல்லலாம். பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் செல்ல டவுன் பஸ் வசதி உள்ளது.
Next Story