எலிகளின் ஆலயம்


எலிகளின் ஆலயம்
x
தினத்தந்தி 18 April 2017 7:45 AM GMT (Updated: 18 April 2017 7:44 AM GMT)

கர்ணி மாதாவிற்கு அடுத்தபடியாக பக்தர்கள் வழிபடுவது இந்த எலிகளைத்தான்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ளது தேஷ்னோக் என்ற கிராமம். இங்கு கர்ணி மாதா கோவில் இருக்கிறது. இந்த அம்மன் துர்க்கையின் அவதாரம் என்று கருதப்படுகிறது. கர்ணி மாதா ஆலயம் என்பதை விட ‘எலிகளின் ஆலயம்’ என்ற பெயரே இந்த ஆலயத்தை பிரசித்திப் பெற்றதாக விளங்கச் செய்துள்ளது. இந்த ஆலயத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலிகள் இருப்பதே இதற்குக் காரணம்.

மத்திய மற்றும் மேற்கிந்திய பகுதி மக்களின் ஆன்மிகச் சுற்றுலாத் தலங்களில் இந்த ஆலயம் முதலிடம் பிடிக் கிறது. சலவைக் கற்களால் ஆன இந்த ஆலயத்தை பிகானேர் பகுதியை ஆட்சி செய்த ‘கங்கா சிங்’ என்ற மன்னர் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பானது முகலாய கட்டிடக்கலை மற்றும் ராஜபுத்திரக் கட்டிடக் கலையுடன் கூடியதாக இருக்கிறது. 

சரண் என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் கர்ணி. இவர் 14–ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் ஜோத்பூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். இவருக்கு திருமணப் பருவம் எட்டியதும் மணம் முடிக்க முடிவு செய்யப்பட்டது. மணமகனும் தேர்வு செய்யப்பட்டார். திருமணத்திற்கு முன்பு ஊர்வலம் நடந்தபோது, ஓரிடத்தில் ஊர்வல பல்லக்கு நிறுத்தப்பட்டது. அப்போது மணமகளைப் பார்க்கும் ஆவலில் மணமகன் தான் இருந்த பல்லக்கின் திரையை விலக்கி, மணமகள் பல்லக்கைப் பார்த்தார்.

அப்போது மணமகளின் பல்லக்கில் சிம்ம வாகிணியாக துர்க்கையின் அவதாரத்தில் கர்ணி மாதா அமர்ந்திருந்தார். பின்னர் அந்த உருவம் மறைந்து கர்ணி தோன்றினார். அவர் தனக்கு கணவனாக வரப்போகிறவரிடம், தன்னுடைய அவதார நோக்கத்தைக் கூறி, தனது தங்கையை அவருக்கு இல்லறத் துணைவியாக்கினார். பின்னர் நாடோடியாக பல ஊர்களுக்குச் சென்று பல அற்புதங்களை நிகழ்த்தினார். தேஷ்னோக் என்ற வனப்பகுதியை அடைந்த கர்ணி மாதா, அங்கேயே ஒரு குகையைத் தேர்வு செய்து தவம் இருந்தார். 

இந்த நிலையில் ராவ் ஜோதா என்ற மன்னன், மற்றொரு மன்னனால் விரட்டப்பட்டு, வனத்தில் இருந்த கர்ணி மாதாவை சரணடைந்தான். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னைக்கு சேவை புரிந்தான். பின்னர் கர்ணி மாதாவின் ஆலோசனைப்படி தகுந்த நேரத்தில் தன்னுடைய எதிரியோடு போரிட்டு வெற்றி பெற்றான். அவன் வெற்றி பெற்ற பகுதியே பின்னாளில் ஜோத்பூர் என்று அழைக்கப்பட்டது. ராவ் ஜோதாவின் மகன் ராவ் பீகா, தன்னுடைய தந்தையிடம் இருந்து பிரிந்து, கர்ணி மாதாவின் சொல்படி ஒரு அழகிய நகரை நிர்மாணித்தான். அதுவே ‘பீகானேர்’ என்றானது.

இந்து மத ஐதீகப்படி ஒரு பிறவியின் முடிவு என்பது, அடுத்தப் பிறவின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. கர்ணி மாதா ஆலயம், கபாஸ் எனப்படும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலிகளுக்கு வாழ்விடமாக திகழ்ந்து வருகிறது. இந்த எலிகள் அனைத்தும் கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகளின் ஆன்மாக்களை சுமந்து திரிவதாக இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் ஆலயத்திற்குள் சிறிய குகை போல் அமைந்த இடத்தில் வீற்றிருக்கும் கர்ணி மாதாவை முதலில் வழிபடுகின்றனர். 

இந்த அன்னையின் மூலவர் சிலை 75 செ.மீ. உயரமே இருக்கிறது. இந்த சிலையானது ஜெய்சல்மர் மற்றும் ஜோத்பூரில் கிடைக்கும் ஒரு வகை சிவப்புக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடம், வலது கையில் சூலம், இடது கையில் கபாலம், பின் புறம் சிம்ம வாகனம் என துர்க்கையின் கோலத்தில் கர்ணி மாதா காட்சி தருகிறார். இவரது விக்கிரகம் குங்குமத்தால் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இந்த விக்ரகத்தின் முன்பாக பெரிய தட்டில் லட்டு பிரசாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை ஏராளமான எலிகள், பக்தர்களின் கூட்டத்தை சிறிதும் கண்டுகொள்ளாமல் கொறித்துக் கொண்டிருக்கின்றன.

கர்ணி மாதாவிற்கு அடுத்தபடியாக பக்தர்கள் வழிபடுவது இந்த எலிகளைத்தான். அவர்கள் தங்களோடு, தங்கள் கிராமத்தில் வாழும் சக குடிமக்களாகவே இந்த எலிகளை கருதுகின்றனர். அந்த எலிகளுக்கு பால், இனிப்பு பொருட்களை வைத்து வழிபாடு செய்கிறார்கள். பெரும்பாலான எலிகள் கருப்பு நிறம்தான், ஒரு சில வெள்ளை எலிகளும் தென்படுகின்றன. வெள்ளை எலிகளை கண்ணால் கண்டால், அதிர்ஷ்டம் வந்து சேரும் என்பதும் ஒரு நம்பிக்கையாக நிலவுகிறது. இங்கு ஒரு அதிசயம் என்னவென்றால் எலிகள் அனைத்தும் ஒரே அளவிலான தோற்றம் கொண்டவையாகவே காணப்படுகின்றன. குட்டி எலிகள் ஒன்றைக் கூட காண முடிவதில்லை. இவை இனப்பெருக்கம் செய்கின்றனவா? அப்படியானால் குட்டி எலிகள் ஒன்றுகூடவா தென்படாமல் போய்விடும்? என்பது பக்தர்களின் ஆச்சரியக் கேள்வியாக இருக்கிறது. இங்குள்ள எலிகள் அனைத்தும் புனிதமாக கருதப்படுவதால், பக்தர்கள் இந்த எலிகளிடம் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். யாராவது தெரியாமல் எலிகளை மிதித்து விட்டால், வெள்ளியால் செய்யப்பட்ட எலியின் உருவத்தை வாங்கி வைத்து வழிபட்டு பரிகாரம் செய்து கொள்கின்றனர். இந்த எலிகளின் ஸ்பரிசம், பக்தர்களின் மேல் பட்டால் அவர்கள் நற்பேற்றைப் பெறுவதாக நம்பப்படுகிறது.

இந்த ஆலயம் காலை 4 மணிக்கே பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறக்கப்பட்டு விடும். இந்த ஆலயத்தில் இரண்டு முறை திருவிழா நடத்தப்படுகிறது. முதல் பெரிய திருவிழா, சித்திரை வளர்பிறை முதல் நாள் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இரண்டாவது திருவிழா நவராத்திரி காலத்தில் 10 நாட்கள் நடத்தப்படும்.

பீகானேர் என்ற இடத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் தேஷ்னோக் கிராமம் இருக்கிறது.

Next Story