மரணத்தில் இருந்தும் காப்பாற்றும் வூடூ!


மரணத்தில் இருந்தும் காப்பாற்றும் வூடூ!
x
தினத்தந்தி 18 April 2017 7:56 AM GMT (Updated: 18 April 2017 7:55 AM GMT)

பழங்கால வூடூ மக்களுக்கு இயற்கையாகவே நோய் தீர்க்கும் மூலிகைச் செடிகள் குறித்த ஞானம் சிறப்பாக இருந்ததுடன், அவர்கள் வூடூ முறைப்படி நோய்கள் தீர்க்கும் வழிகளையும் அறிந்திருந்தனர்.

த்தனை மோசமான உடல்நிலையில் ஒரு மனிதன் இருந்தாலும் கூட, அவன் நவீன மருத்துவத்தினால் கைவிடப்பட்ட நிலையை எட்டியிருந்தாலும் கூட, அவனைக் காப்பாற்ற வூடூ சடங்குகளில் பாண்டித்தியம் பெற்ற ஒருவரால் முடியும் என்று வூடூ மக்கள் உறுதியாக நம்பினார்கள். வூடூ ஆவிகளும், சக்திகளும் உதவி செய்தால், மெள்ள மெள்ள ஒருவனை மரணத்திலிருந்து இழுத்து தப்பிக்க வைத்து விடமுடியும் என்று நினைத்தார்கள். வூடூ ஆராய்ச்சியில் இறங்கியிருந்த ப்ளோரிடா பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெரால்டு முர்ரே Dr.Gerald Murray), ‘வூடூ சடங்குகளில் ஆவிகளை வரவழைப்பதன் முக்கிய நோக்கம் நோய்களைத் தீர்ப்பதாகவே பெரும்பாலும் இருந்திருக்கிறது’ என்று தெரிவிக்கிறார்.

பழங்கால வூடூ மக்களுக்கு இயற்கையாகவே நோய் தீர்க்கும் மூலிகைச் செடிகள் குறித்த ஞானம் சிறப்பாக இருந்ததுடன், அவர்கள் வூடூ முறைப்படி நோய்கள் தீர்க்கும் வழிகளையும் அறிந்திருந்தனர். இந்த இரண்டையும் வைத்து தான் பல வெள்ளை நிற மக்களுக்கு உதவி செய்து அவர்கள் நட்பை வூடூ மக்கள் சம்பாதிக்கவும், பிற்காலத்தில் சமாதானமாக அவர்களுடன் சேர்ந்து வாழவும் முடிந்தது.     

கூடுதலாக, நோய்களில் உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியான நோய்களையும் வூடூ முறைப்படி குணப்படுத்தினார்கள். 2010–ம் ஆண்டில் ஹைத்தியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 15 லட்சம் பேர் வீடிழந்தனர். அதில் கணிசமான பகுதியினர் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அந்த சமயத்தில் அவர்கள் அமெரிக்காவில் ப்ரூக்ளின் (Brooklyn) பகுதியில் தங்கள் நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சக மக்களின் நலனுக்காக தொடர்ந்து வூடூ சடங்குகள், வழிபாடுகள் ஆகியவற்றை நடத்தினார்கள். இரண்டு வாரங்கள் கழித்து ஹைத்தி சென்ற ரெஜின் ரோமைன் (Regine Romain) என்ற ப்ரூக்ளினைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர், அத்தனை அழிவிற்கு மத்தியிலும் எத்தனையோ அற்புதங்கள் ஹைத்தியில் நடந்திருக்கின்றன, பல பேர் நம்ப முடியாத சூழ்நிலையிலும் பிழைத்திருக் கிறார்கள் என்பதைப் படங்களுடன் பதிவு செய்திருக்கிறார். அதற்கெல்லாம் வூடூ சடங்குகள், வழிபாடுகள் தான் காரணம் என்று நம்புவதாகவும் சொல்லி இருக்கிறார்.

வூடூ ரகசியங்கள் (Secrets of Voodoo) என்ற பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட நூலில், மிலோ ரிகாட் (Milo Rigaud) என்ற ஆராய்ச்சியாளர் ஒரு மிக சுவாரசியமான குணப்படுத்தும் சம்பவத்தை விவரித்திருக்கிறார். நாம் அதைப் பார்ப்போமா?

முப்பது வயதுக்கும் கீழே உள்ள ஒரு பணக்காரக் குடியானவன், கட்டுமஸ்தான உடற்கட்டும் நல்ல ஆரோக்கியமும் கொண்டிருந்தான். திடீரென்று அவன் நோய்வாய்ப்பட்டான். அவனால் உணவு உட்கொள்ள முடியவில்லை. மிகவும் பலவீனமாக மாறத் தொடங்கினான். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி, சாதாரண மருத்துவமும் அவனைக் குணப் படுத்த முடியாமல் போகவே, அவனது வீட்டார் வூடூ சடங்குகள், குறி சொல்தல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் சென்று ஆலோசனை கேட்டார்கள். அவர் மூங்கில் மரப்பட்டையாலான தட்டைக் கூடையில் சில சீட்டுகள் போட்டுப் பார்த்தார். பின்னர், இறந்தவர் ஆவி அந்த ஆளின் மேல் ஏவி விடப்பட்டிருக்கிறது என்றும், அவன் இப்போது மயான தேவதையான பேரன் சமேடியிடம் அனுப்பப்பட்டிருக்கிறான் என்றும், ஏதாவது விரைந்து செய்யாவிட்டால் மரணம் நிச்சயம் என்றும் சொல்லி விட்டார்.

வீட்டார் உடனே அச்சமயத்தில் வூடூ சடங்குகளின் தலைவியாக கருதப்பட்ட மிராசியாவிடம் சென்று, நோய்வாய்ப்பட்டிருந்த தங்கள் வீட்டு இளைஞனைக் காப்பாற்றித்தர முடியுமா? என்று கேட்டனர். மிராசியாவும் மூங்கில் மரப்பட்டையாலான தட்டைக்கூடையில் நத்தையோடுகளைப் போட்டுக் குறி பார்த்து விட்டு, ‘ஏவி விடப்பட்டிருப்பது ஒரு ஆவி அல்ல.. மூன்று ஆவிகள்’ என்று தெரிவித்தார். பேரன் சமேடி வரை சென்ற ஒருவனது உயிரைக் காப்பாற்றுவது அவ்வளவு சுலபமல்ல என்பதால், தன்னுடன் வூடூ சடங்குகளில் பங்கு கொள்ளும் இன்னொரு அனுபவஸ்தர் ஒருவரிடமும் கலந்தாலோசித்து விட்டு கடைசியில் ஒப்புக் கொண்டார்.

அன்று இரவே நோய்வாய்ப்பட்ட இளைஞனை, அவன் வீட்டார் தூக்கிக் கொண்டு வந்தார்கள். பதினைந்து நாட்களுக்கும் மேல் சாப்பிடாமல் மிகவும் பலவீனமாய் இருந்த அந்த இளைஞனால், நடக்க முடியவில்லை; பேசவும் முடியவில்லை. வூடூ சடங்கு நடக்கும் இடத்தில் வெளிப்புறம் இருந்த மரக்கம்பத்திற்கு அருகே, ஒரு பாயைப் போட்டு அவனைப் படுக்க வைத்து விட்டு விலகிக் கொண்டார்கள். 

சடங்கு நடக்கும் இடத்தில் மையப்பகுதியில் அவர்கள் வணங்கும் தேவதைக்கான சின்னம் வரையப்பட்டிருந்தது. அதன் முன் ஒரு பாடை வைக்கப்பட்டிருந்தது. அது அந்த இளைஞனின் அளவின்படியே தயாரிக்கப்பட்டிருந்தது. பாடையின் மேல் இரண்டு பழைய சிறிய பாய்களைப் போட்டு அதன் மேல் சாம்பலைப் பரப்பி அதில் சிலுவையை மிராசியா வரைந்தார்.

அதன் அருகே வைக்கப்பட்டிருந்த மேசையில் சோளம் மற்றும் வறுத்த வேர்க்கடலையால் செய்யப்பட்ட மூன்று உருண்டைகள் தயாரித்து வைத்தார்கள். ஒரு உருண்டையின் நடுவே சிறிய வெள்ளை மெழுகுவர்த்தியும், இரண்டாவது உருண்டைக்கு நடுவே சிறிய மஞ்சள் மெழுகுவர்த்தியும், மூன்றாவது உருண்டைக்கு நடுவே சிறிய கருப்பு மெழுகுவர்த்தியும் வைக்கப்பட்டன. அதனருகே இருபாட்டில் களில் வரவழைத்து வழிபடும் தேவதைக்கு விருப்பமான பானமும், சோமபானம் போன்ற பானமும் வைக்கப்பட்டன. மேசையின் அடியே கோமூத்திரமும், மற்ற சில பொருட்களும் சேர்ந்த கரைசல் வைக்கப்பட்டிருந்தது. 

இத்தனை தயாரான பிறகு மிராசியா நோயாளியைத் தூக்கி வரச் சொன்னார். தூக்கி வருபவர்கள் தங்கள் உடைகளைக் கழற்றித் திருப்பிப் போட்டுக் கொண்ட பின்னர் அவனைத் தூக்கினார்கள். இப்போது அவன் உடலில் குடியேறி இருந்த ஆவிகளில் ஒன்று சந்தேகம் கொண்டு சத்தமாக அவன் வாயால் பேசியது. ‘நீங்கள் என்ன செய்தாலும் சரி.. நான் இந்த உடலை விட்டுப் போக மாட்டேன். என் பலம் கூடிக் கொண்டே தான் செல்லும்’. 

உள்ளே மிராசியாவுடன் இருந்த இரு உதவியாளர்கள் ‘பார்க்கலாம் யார் பலசாலி என்று’ எனச் சொன்னார்கள். பின் அந்த ஆவிகள் புரியாதபடி ஏதோ முணுமுணுத்தபடி இருந்தன. 

நோயாளியைப் பாடையில் கிடத்தினார்கள். இடுப்புத் துணியைத் தவிர மற்ற உடைகள் களையப்பட்டன. தலைக்குக் கீழே ஒரு கல்லை வைத்தார்கள். உடனே ஆவிகளின் முணுமுணுப்பு நின்றது. நோயாளி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. பாதி கண்கள் மூடி பாதி விழித்திருக்க, வெறித்த பார்வை மட்டுமே தெரிந்தது. பிணத்திற்குக் கட்டுவது போலவே தலையை முகவாய் பட்டைக்குச் சேர்த்து வெள்ளைத் துணியால் கட்டினார்கள். கால்களின் இரு கட்டைவிரல்களும் அதே போல் சேர்த்துக் கட்டப்பட்டன. பெருக்கல் குறி போல சாம்பலால் நோயாளியின் உடலில் போட்டார்கள். 

மூன்று உருண்டைகளுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்திகள் பற்ற வைக்கப்பட்டு, இரண்டு மெழுகுவர்த்திகள் இரண்டு தோள்களிலும், மூன்றாவது மெழுகுவர்த்தி காலுக்குக் கீழேயும் வைக்கப்பட்டன. பின் சில ஊதுபத்திகள், சில விதைகள் எரிக்கப்பட்டு புகை மண்டலம் அங்கு பரவ வைக்கப்பட்டது. 

பின் மிராசியா பரமபிதா, யேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவி மற்றும் புனித ஞானிகளை வணங்கி விட்டு சடங்கை ஆரம்பிக் கிறார். சோளம், வேர்க்கடலை கலந்த கலவை உருண்டைகளையும், ரொட்டி, பச்சை வாழைப்பழம் சேர்த்த உணவையும் நோயாளியின் வயிறு, மார்பு, உள்ளங்கைகள், நெற்றி ஆகிய இடங்களில் வைக்கிறார். பின் சில மந்திரங்களை உச்சரித்தபடியே இரண்டு கோழிகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் ஒரு சேவலைப் பிடித்துக் கொண்டு அவற்றை நோயாளியின் உடலில் வைத்து அந்த உருண்டைகளையும், உணவையும் சாப்பிட வைக்கிறார். ‘தீய சக்திகள் உடலை விட்டு விலகட்டும், நல்ல சக்திகள் உடலில் நுழையட்டும்’ என்று சொல்லிக் கொண்டே அவற்றை நோயாளியின் உடல் மேல் மேலும் கீழுமாக ஆட்டுகிறார். 

இந்த நேரத்தில் நோயாளி மிகுந்த பலத்துடன் எழ முயற்சிப்பதும், மிராசியா தடுத்து அவனை மறுபடி படுக்க வைப்பதும் நடக்கிறது. பின் மிராசியா கோழிகளை அங்கேயே நிலத்தில் விட்டு சேவலை வெளியே விட்டு விடுகிறார். பின் ‘இறைவனின் அனுமதியுடன் இவன் விடுதலையாக வேண்டும், உயிர் பிழைக்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்கிறார்.

பின் பாட்டில்களில் இருந்த திரவங்கள் நோயாளியின் உடம்பிலும் நான்கு பக்கங்களிலும் தெளிக்கப்படுகிறது. பின் மந்திரங்களை ஜெபித்தபடியே மேசையின் அடியில் வைத்திருந்த கோமூத்திரக் கரைசலை மிராசியா கையில் எடுத்து வேகமாக நோயாளியின் உடலில் விசிறியடித்து விட்டு போட்டிருக்கும் கட்டுகளைத் தளர்த்தி விட்டு ஆவிகளை உடலில் இருந்து போக  உறுதியான குரலில் கட்டளையிடுகிறார். பின் நோயாளியின் வாயைத் திறக்க வைத்து ஒரு வெள்ளைப்பூண்டு பருப்பை உள்ளே வைத்து நிறுத்துகிறார். பின் பேரன் சமேடியிடம் ‘இவனுடைய உயிருக்குப் பதிலாக இந்த உயிர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று வேண்டியபடியே இரண்டு கோழிகளையும் ஒரு வாழைமரத்தின் முன்னே தோண்டிய குழியில் உயிரோடு புதைத்து விடுகிறார். வாழை மரத்தின் மூன்று பகுதிகளில் முக்கோண நிலையில் மூன்று விளக்குகள் வைக்கப்படுகின்றன.

சிறிது நேரத்தில் ஆவிகள் விலகி முழுமையான பலம் பெற்றவனாக எழுந்து அமர்ந்த நோயாளி குளிக்க வைக்கப்பட்டு தேநீர் குடித்து காய்கறிகளால் சமைக்கப்பட்ட உணவையும் சாப்பிட்டு பழைய நிலைக்குத் திரும்பியது தான் வியப்பிலும் வியப்பு.

ஆனால் இது போன்ற அற்புதங்கள் இறைவன் அனுமதி இருந்தால் மட்டுமே நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கை வூடூ மக்களிடம் இருந்தது.

Next Story