இன்னல்கள் தீர்க்கும் இளங்குன்னபுழா சுப்பிரமணியர்


இன்னல்கள் தீர்க்கும் இளங்குன்னபுழா சுப்பிரமணியர்
x
தினத்தந்தி 18 April 2017 8:00 AM GMT (Updated: 18 April 2017 7:59 AM GMT)

கொச்சி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோவில் வளாகத்தில், சிவபெருமான், பார்வதி, விநாயகர், விஷ்ணு, சாஸ்தா ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களைத் தீர்த்து, இன்பமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் தலமாகக் கேரள மாநிலம், இளங்குன்னபுழா சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்திருக்கிறது.

தல வரலாறு

கேரள மாநிலம், வல்லார்பாடம் பகுதியைச் சேர்ந்த விவசாயப் பணி செய்யும் பெண்கள் சிலர், அங்கிருந்த ஒரு இடத்திற்கு விவசாயப் பணி செய்வதற்காகச் சென்றனர். அவர்களில் ஒருத்தி, அங்கிருந்த மணலில் புதையுண்டு கிடந்த கல் ஒன்றில், தன் கையில் வைத்திருந்த அரிவாளைக் கூர்மைப்படுத்தினார். அப்போது, அந்தக் கல்லிலிருந்து ரத்தம் வெளியேறியது. கல்லில் இருந்து ரத்தம் வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவள் மயங்கி விழுந்தாள். 

அவளுடன் வந்த பெண்களும், கல்லிலிருந்து ரத்தம் வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, மயங்கி விழுந்த பெண் எழுந்து, ‘இங்கிருப்பது சாதாரணக் கல் இல்லை, இது முருகப்பெருமானின் சிலை. இந்தச் சிலையை வெளியில் எடுத்துக் கோவில் கட்டி வழிபட வேண்டும்’ என்று சொல்லியபடி மீண்டும் மயக்கமடைந்தாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அந்த இடத்தை தோண்டிய போது, அங்கு முருகப்பெருமானின் சிலை இருந்தது. அதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அந்தச் சிலையின் மேற்பகுதி நன்றாக இருந்தது. ஆனால், சிலையின் இடுப்புப் பகுதிக்குக் கீழே மிகவும் சேதமடைந்திருந்தது. 

அங்கே மயங்கிக் கிடந்த பெண்ணைச் சிலர் எழுப்பினர். அந்தப் பெண் எழுந்து, முருகப்பெருமான் சிலைக்கு ஒரு கோவில் அமைத்து வழிபட்டால், இந்தப்பகுதி மக்களுக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும் என்றாள். அங்கிருந்தவர்கள், அந்த முருகனின் சிலைக்கு எங்கே கோவிலமைப்பது? என்று கேட்டனர். 

அவள், இங்கிருந்து நான்கு திசைகளுக்கும் அம்புகளைச் செலுத்த வேண்டும். அந்த நான்கு அம்புகளும் விழுந்த இடத்திற்குள் இருக்கும் பகுதி முழுவதும் முருகப் பெருமானுக்குச் சொந்தமானதாகும். ஐந்தாவதாக ஒரு அம்பு செலுத்த வேண்டும். ஐந்தாவது அம்பு விழுமிடத்தில் முருகப்பெருமானின் சிலையை நிறுவிக் கோவிலமைக்க வேண்டும் என்று சொன்னாள்.

அவள் சொன்னபடி அம்புகள் செலுத்தப்பட்டன. நான்கு திசைகளில் செலுத்தப்பட்ட அம்புகள் விழுந்த இடம் முருகப்பெருமானுக்குரிய இடமாக்கப்பட்டது. ஐந்தாவது அம்பு விழுந்த இடத்தில் முருகப்பெருமான் சிலையை நிறுவுவதென முடிவு செய்யப்பட்டது. 

இருப்பினும், அங்கிருந்த சிலர் குறைபாடுடைய சிலையினைக் கருவறையில் எப்படி நிறுவுவது? எனும் கேள்வியை எழுப்பினர். உடனே, அந்தச் சிலை நிறுவுவதற்காகப் பிரசன்னம் பார்க்கப்பட்டது.

அந்தப் பிரசன்னத்தில், தமிழ்நாட்டின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் நிறுவப்பட்டிருந்த முருகப்பெருமானின் சிலை சேதமடைந்த நிலையில், கோவிலிலிருந்த அந்தச் சிலையை மாற்றிப் புதிய சிலை ஒன்று நிறுவப்பட்டது. அதன் பின்னர், சேதமடைந்த சிலையைக் கடலில் கொண்டு போய் போட்டு விட்டனர். அந்தச் சிலை கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, ‘வல்லார்பாடம்’ கரையில் ஒதுங்கி மணலில் புதைந்து போய்விட்டது. அந்தச் சிலைதான் அந்தப் பெண் மூலம் வெளியில் தெரிந் திருக்கிறது என்று கண்டறியப்பட்டது.

மேலும் பிரசன்னத்தில், சிலையின் இடுப்பு வரையிலான பகுதி கற்சிலையாகவும், சேதமடைந்த கீழ்ப்பகுதியினை பஞ்சலோகச் சிலையாகவும் அமைத்து நிறுவும்படியும் சொல்லப்பட்டது.  

இதையறிந்த கொச்சி மகாராஜா கோவில் கட்டுமானப்பணிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தார். அதனால், விரைவாகக் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. அந்தச் சிலையின் சேதமடைந்த பகுதி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டது.

சிலை அமைப்பு

கோவில் கருவறையில் நிறுவப்பட்டிருக்கும் அந்தச் சிலை பீடத்துடன் சேர்த்து ஐந்தரை அடி உயரமாக இருக்கிறது. அச்சிலையில் நான்கு கரங்கள் இருக்கின்றன. கீழ்ப்பகுதியிலிருக்கும் இரு கரங்களில் வலது கரம் ஆசி வழங்கும் அபய முத்திரையிலும், இடது கை இடுப்பில் ஊன்றியபடியும் இருக்கின்றன. மேல் பகுதியிலிருக்கும் இரு கரங்களில் சக்தி ஆயுதமும், ஜெப மாலையும் இடம் பெற்றிருக்கின்றன. 

கொச்சி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோவில் வளாகத்தில், சிவபெருமான், பார்வதி, விநாயகர், விஷ்ணு, சாஸ்தா ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கோவிலில் தினசரி வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி என்று முருகப்பெருமானுக்கு உரியதாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள முருகன் கோவில்களில் பக்தர்களால் செய்யப்படும் காவடி வழிபாடு, பால்குட வழிபாடு போன்ற முருகன் வழிபாட்டு முறைகள் அனைத்தும் இங்கும் செய்யப்படுகின்றன. 

இக்கோவிலில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமியை வழிபடுபவர்  களுக்கு, அவர்களது இன்னல்கள் அனைத்தையும் நீக்கி இன்பம் நிறைந்த இனிய வாழ்க்கை கிடைக்கும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 

அமைவிடம்

கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் எடப்பள்ளி எனுமிடத்திற்கு அருகில் இளங்குன்னபுழா கிராமப் பஞ்சாயத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு எர்ணாகுளத்திலிருந்து கேரள அரசுப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.  

 –தேனி மு.சுப்பிரமணி.

கேரளத் திருச்செந்தூர்

தமிழ்நாட்டின் திருச்செந்தூர் கோவிலில் ஸ்ரீ சனத்குமாரனால் நிறுவப்பட்ட முதல் சிலை சேதமடைந்த நிலையில், புதிய சிலை ஒன்றைச் செய்து கொண்டு, பழைய சிலையினைக் கடலில் போட்டு விட்டார்கள். அந்த சிலையே  இளங்குன்னபுழாவில் புதிய கோவில் கட்டி நிறுவப்பட்டுள்ளது. எனவே இந்தக் கோவில் ‘கேரளாவின் திருச்செந்தூர்’ என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் வழிபாடு செய்பவர்களுக்குத் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

Next Story